Published : 08 Sep 2021 02:36 PM
Last Updated : 08 Sep 2021 02:36 PM
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சென்ற வாரம் அனுஷம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் கேட்டை எனும் ஜ்யேஷ்டா நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் மற்றும் விரிவாகவும் பார்க்கலாம்.
கேட்டை எனும் ஜ்யேஷ்டா
கேட்டை எனும் ஜ்யேஷ்டா என்பது வானத்தில் விருச்சிக ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். காண்பதற்கு குடை போலவும், வஜ்ராயுதம் போலவும், தேளின் கொடுக்கு போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக குடை, வஜ்ராயுதம், தேளின் கொடுக்கு ஆகியவற்றைக் கூறலாம்.
இதன் அதிபதி புதன் கிரகம். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு புதன் திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் செவ்வாய் பலம் பெறுகிறது மற்றும் சந்திரன் பலம் இழக்கிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சந்திரன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று பார்க்கலாம்.
தர்மன் ஈட்டியை ஆயுதமாக பயன்படுத்திய காரணம்
ஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவம் அவருக்கு கேடயமாக அல்லது ஆயுதமாக அமையும்.
மஹாபாரதத்தில் யுதிஷ்ட்ரன் எனப்படும் தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை. இதன் நட்சத்திர வடிவம் ஈட்டியாகும்.
அர்ஜுனன் எப்படி அம்பெய்துவதில் வல்லவனோ, அதுபோல ஈட்டி எறிவதில் வல்லவர் தர்மன். ஈட்டி அவரது ஜென்ம நட்சத்திர வடிவமாகும். அதை அதிகம் பயன்படுத்தியே வாழ்வில் வெற்றியும் பெற்றார்.
சொக்கநாதர் தாரை ரகசியம்
சொக்கநாதர் எனும் சுந்தரேஸ்வர பெருமானை வடிவமைத்தது அஷ்டசிரம் கொண்ட ஐராவதம் மீது அமர்ந்த இந்திரன் என்பதால், சொக்கநாதர் நட்சத்திரம் பூராடம்.
இந்திரனின் நட்சத்திரம் கேட்டை. சொக்க நாதர் நட்சத்திரம் பூராடம். கேட்டையின் விபத்து தாரை பூராடம்.
இந்திரன் தனது விபத்து தாரை தோஷம் போக்க ஐராவதம் மற்றும் புண்டரீகன் என்ற இரண்டு யானைகளை சொக்கநாதர் சந்நிதியில் காவலுக்கு விட்டுச் சென்றான். இன்றும் சொக்கநாதர் சந்நிதியில் அந்த யானைகளின் சிலைகளைப் பார்க்கலாம்.
இந்திரனும் அங்குசமும்
ஜ்யேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி இந்திரன். கீழே இருப்பது நமது முன்னோர்கள் இந்திரனுக்குக் கொடுத்த வடிவம்.
கேட்டை நட்சத்திரத்தின் சம்பத்து தரும் நட்சத்திரம் மூலம், அஸ்வினி மற்றும் மகம்.
மூல நட்சத்திர வடிவம் - அங்குசம், சூலம் மற்றும் யானையின் துதிக்கை. மூல நட்சத்திர வடிவம் தாங்கிய ஐராவதம் யானையின் மீது இந்திரனை அமரவைத்து, அவனது கையில் அங்குசம், மற்றும் சூலம் போன்ற மூலம் சம்பத்து தாரை வடிவங்களை கொடுத்து வைத்துள்ளனர்.
இதன் அர்த்தம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரங்களாகக் கொண்ட நண்பர்கள் பயன்படுத்தலாம் என்பதாகும்.
இந்திரன் என்றால் வஜ்ராயுதம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அது அவரது ஜென்ம நட்சத்திர தாரை என்பதால் போருக்குச் செல்லும்போதும் மற்றும் தன்னைக் காக்கும் கவசமாகவும் உபயோகம் செய்ததாக புராணம் தெரிவிக்கிறது.
இந்த வடிவங்களில் ஏதேனும் ஒன்றை தனது மோதிரம், செயின் அல்லது வேறு வடிவத்தில் உபயோகம் செய்யலாம்.
எனவே கீழே இருக்கும் உருவத்தை ரேவதி, அஸ்வினி, ஆயில்யம் நட்சத்திர நண்பர்கள் உபயோகம் செய்து செல்வ வளங்களைப் பெறலாம்.
சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திர நண்பர்கள் உருவத்தைப் பயன்படுத்தி காரிய ஸித்தியைப் பெறலாம்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திர நண்பர்கள் உருவத்தை பயன்படுத்தி நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறலாம்..
இந்திர திக்கு குறிக்கும் கிழக்கில் ஐராவதம் மற்றும் அக்னி திக்கை குறிக்கும் தென்கிழக்கில் புண்டரீகன் எனும் யானை அமைந்துள்ளது.
இதுவரை கேட்டை நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி அடுத்து மூலம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.
- வளரும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT