Published : 18 Mar 2021 11:53 AM
Last Updated : 18 Mar 2021 11:53 AM
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சம்பத்து தாரை பற்றி கடந்த பதிவில் விவரித்திருந்தேன். தாங்கள் கொடுத்த பேராதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பதிவில், க்ஷேம தாரை பற்றிப் பார்க்கலாம்.
க்ஷேமம் என்ற சொல்லுக்கு நலம் என்று அர்த்தம். தாரை என்றால் நட்சத்திரம். க்ஷேம தாரை என்றால் நலம் தரும் நட்சத்திரம் என்று அர்த்தம்.
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டு வர கிடைக்கும் 4,13, 22 நட்சத்திரங்கள் உங்களுக்கு க்ஷேம தாரை ஆகும். உதாரணமாக, ஒருவரின் நட்சத்திரம் ரோஹிணி என்றால் அவரது ஜென்ம/அனு ஜென்ம/ திரி ஜென்ம க்ஷேம தாரைகள் புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களாகும்.
ரோகிணியின் க்ஷேம தாரைகள்
ஜென்ம க்ஷேம தாரை - புனர்பூசம்
அனு ஜென்ம க்ஷேம தாரை - விசாகம்
திரி ஜென்ம க்ஷேம தாரை - பூரட்டாதி
க்ஷேம தாரை என்பது ஜாதகரின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் தரும் என்று பார்க்கலாம்.
காஞ்சி மஹா பெரியவர் அடிக்கடி சொல்லும் வாசகம் "க்ஷேமமா இருங்கோ" என்பதுதான். இங்கு க்ஷேமம் என்பதன் பொருள் "நலம் பெறுவாய்" என்பதாகும். க்ஷேம தாரையானது, நாம் எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கச்சிதமாக முடித்துத் தரவல்லது. அத்தனை ஆற்றல் மிக்கது க்ஷேம தாரை. ஆகையால் இது காரிய ஸித்தி நட்சத்திரம்/தாரை என்றும் அழைக்கப்படுகிறது.
க்ஷேம தாரை தரும் பலன்கள்
⦁ காரியத்தில் வெற்றி
⦁ கண்டத்தில் இருந்து காத்தல்
⦁ நீண்ட காலமாக இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு
⦁ உடல் நல மேம்பாடு
⦁ கடன் சிக்கலில் இருந்து தீர்வு
க்ஷேம தாரைக்கான இரண்டு புராண உதாரணங்களைப் பார்ப்போமா?
சிவபெருமான் கழுத்தில் இருக்கும் நாகம்
சிவ பெருமானின் கழுத்தில் இருக்கும் நாகம் க்ஷேம தாரை வடிவம் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? வாருங்கள் அதற்கான நட்சத்திர ரகசியத்தை காணலாம்.
திருவாதிரை நட்சத்திர நாயகன் சிவ பெருமான் என்பதை அறிந்திருப்பீர்கள். கடந்த பதிவிலும் சொல்லியிருந்தேன்.
மிதுனம் என்ற ஆகாய ராசியில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம், ஆகாய ஸ்தலமான சிதம்பரம் நடராஜரின் உருவத்தை ஒத்திருக்கும். மேலும் சிவனின் உடலில் பல பாம்புகள் குடிகொண்டிருப்பதை சிற்பங்களில் கண்டிருப்போம். பாம்பு என்பது ஆயில்ய நட்சத்திர வடிவம் கொண்டது.
திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டு வந்தால் கிடைக்கும் 4, 13, 22 நட்சத்திரங்கள் முறையே ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி.
ஆகவே சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரைக்கு க்ஷேம தாரையாக ஆயில்யம் வருகிறது.
மேருமலையை மத்தாக வைத்து, வாசுகி நாகத்தை கயிறாகக் கொண்டு பாற்கடலில் அமிர்தம் கடையும் வேளையில் ஆலகால விஷத்தை வாசுகி நாகம் கக்கியது. விஷத்தின் வீரியத்தால் பாற்கடல் கடைவது தடைபட்டது.
மேலும் விஷத்தால் தேவர்கள், அசுரர்கள் மற்றும் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டனர். அப்போது சிவபெருமான் ஆலகால விஷத்தை தானாக முன்வந்து முழுவதையும் குடித்தார் என்கிறது சிவ புராணம்.
அவ்வாறு ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் கழுத்தில் தனது கையை வைத்து அவரது கண்டத்திலேயே (கழுத்திலேயே) விஷத்தை நிறுத்திவைத்தார் உமையவள் பார்வதிதேவி. அந்த விஷம் உடல் முழுவதும் பரவுமா என்ற அச்சத்தில் இருந்த உமையவளுக்கு, சிவ பெருமான் ஒரு உபாயம் கூறினார்.
சிவபெருமான் கூறிய தாரை ரகசியம்
தனது நட்சத்திரமான திருவாதிரைக்கு படம் எடுத்த நாகப் பாம்பின் வடிவம் க்ஷேமம் தரும் நட்சத்திர வடிவம் என்பதால், விஷம் கழுத்தில் இருக்கும் பகுதியைச் சுற்றி படம் எடுக்கும் நாகத்தை ஆபரணமாக சூடிக்கொண்டார். மேலும் உடலில் விஷம் ஏறிய பகுதிகளுக்கெல்லாம் நாகத்தையே கயிறாக மாற்றி, விஷம் பரவாதவாறு கட்டி வைத்திருக்கிறார்.
இதில் இருந்து நாம் அறிவது என்னவென்றால்... ஒருவர் தனது க்ஷேம தாரை வடிவத்தை அல்லது அந்த நட்சத்திற்குரிய அதிதேவதையை வணங்கி வருவது, ஜாதகரின் உடல் உபாதைகள், தீராத கண்டங்கள் அல்லது சில ஆண்டுகளாக நீடிக்கும் காரியத் தடைகளுக்கு நல்வழி தரும் என்பதைப் புரிந்து உணரலாம்.
ராமாயணத்தில் க்ஷேம தாரை
வால்மீகி மிகப் பெரிய ஜோதிடர். அதனால்தான் ராமாயணத்தில் ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தைப் பற்றி முழுவதும் விவரித்திருந்தார். சித்திரை மாத நவமி திதியில் பிறந்த ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இதன் ஜென்ம, அனுஜென்ம மற்றும் திரி ஜென்ம க்ஷேம தாரைகள் முறையே மகம், மூலம் மற்றும் அஸ்வினி.
ராமாயணத்தில் ஸ்ரீராமர் வனவாசம் வந்த போது, ராவணனால் சீதை கடத்தப்படுகிறார். அப்போது மிகவும் மனவருத்தத்திற்கு ஆளானார் ஸ்ரீராமர்.
சீதையை எங்கே கடத்தி சென்று இருக்கிறார்கள் என்று தெரியாமல் காடெல்லாம் தேடி அலைந்தார் ஸ்ரீராமர். அப்படி அலையும் வழியில் சுக்கிரீவனிடம் உதவி கேட்டார். வாலியின் வதத்திற்கு உதவினால் உங்களுக்கு உதவுகிறேன் என சுக்ரீவன் வாக்களித்தார். வாலியை மறைந்திருந்து கொன்ற பின் ஸ்ரீராமருக்கு உதவ ஜாம்பவானுடன் சில வானர வீரர்களுக்கு கட்டளையிட்டார் சுக்ரீவர்.
ராமதூதன் ஹனுமான்
சுக்ரீவன் அனுப்பிய வானரப்படையில் அங்கதன், நலன், நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமான் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் ராம காரியத்திற்க்காக சீதையைத் தேடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டனர். இதில் ராமபிரானுக்கு மிகவும் நெருக்கமானவராக ஹனுமான் இருப்பதாக ராமாயணம் விவரிக்கிறது.
மார்கழி மாத அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார் ஹனுமான் எனும் மாருதி. ஸ்ரீராமனின் புனர்பூச நட்சத்திரத்தின் க்ஷேம தாரை மூலம் நட்சத்திரம் என்பதால், ஸ்ரீராமன் மனம் தளரும்போதெல்லாம் ஹனுமானின் மூலம் ஆறுதல் பெற்றார்.
சீதை இருப்பது இலங்கையில் என்று கண்டறிந்து ஸ்ரீராமனுக்கு அசோகவனத்தைத் தெரியப்படுத்தியவர் ஹனுமான். மேலும் கணையாழியைச் சுமந்து மிகப் பெரிய தடைகளைக் கடந்து இலங்கை அசோக வனத்தில் இருக்கும் சீதையைக் கண்டு ஆறுதல் கூறினார். மேலும் கண்டேன் சீதையை என்று கூறி ராமருக்கு மனஆறுதல் அளித்தார்.
பல முக்கிய தருணங்களில் ராமருக்கு உதவிகள் செய்து அவரின் அன்பிற்கு பாத்திரம் ஆனார் அனுமன். ராமகாரியம் வெற்றி பெற அவரது க்ஷேம தாரை மூல நட்சத்திரத்தில் அவதரித்த ஹனுமானின் பங்கு அளப்பரியது.
இந்தப் புராணத்தின் மூலம் சிக்கலான காரியங்களை க்ஷேம தாரையைப் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம் எனும் பேருண்மையை அறியலாம்.
க்ஷேம தாரை பற்றி புரிந்துகொண்டிருப்பீர்கள். இனி அடுத்த பதிவில், சாதக தாரை பற்றிய விவரங்களையும் அது தரும் பலன்களையும் தெளிவாகப் பார்ப்போம்.
- வளரும்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT