Published : 31 Jul 2020 11:19 AM
Last Updated : 31 Jul 2020 11:19 AM
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
பூராடம் நட்சத்திரம் குறித்த விஷயங்களைப் பார்த்து வருகிறோம்.
இன்னும் பல தகவல்களை, பூராடம் நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களைப் பார்ப்போம்.
பூராடம் நட்சத்திரக்காரர்கள், சுகவாசிகள். அதிக உழைப்பில்லாத ஆனால் நல்ல வருமானத்தைக் கொண்டவர்கள். எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் எளிதாக முறியடிப்பவர்கள். பகையையும் நட்பாக்கிக் கொள்வார்கள். விருப்பங்கள் விரும்பியபடியே நிறைவேறும். இவர்கள் சோம்பலை தவிர்த்துவிட்டால், இன்னும் இன்னுமாக அதிகம் சாதிப்பார்கள். இதுபோன்ற குணநலன்களை கொண்டவர்கள் தான் பூராடம் நட்சத்திரக்காரர்கள்.
பூராடத்தின் அம்சமாகவும், பூராடத்தின் தொடர்புடையதாகவும் உள்ள தகவல்கள் இன்னும் இருக்கின்றன.
மழைக்கு அதிபதியான வருணபகவான் பூராடம். மழையின் போது தோன்றும் இடி மின்னல் பூராடம்தான். வில் அம்பு, துப்பாக்கி, பீரங்கி... இவையும் பூராடம் நட்சத்திரமே. புனித நதிகள் பூராடம்தான். சதுப்பு நிலங்கள் பூராடமே.
ராமாயண காவியத்தில் முக்கிய பாத்திரங்களான வாலி மற்றும் சுக்ரீவன் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களே.
ஆமாம்... பூராட நட்சத்திரத்துக்கு மகாபாரத தொடர்பு இல்லாமலா போகும்! மகாபாரதமே பூராடம் வடிவம்தான். மகாபாரத போரின் குருஷேத்திரம் நடந்த இடம் தனுசு ராசியாகும். இந்த தனுசு ராசியின் பூராடம் நட்சத்திரத்தில்தான் போர் முடிவுக்கு வந்தது. அதாவது வெற்றி எட்டப்பட்டது இந்த பூராடம் நட்சத்திரத்தில்தான். எனவேதான் தனுசு ராசி போர்க் களம் ராசி என்பார்கள். தனுசு ராசியில் அமைந்த மூலம், பூராடம், உத்திராடம் 1 இந்த நட்சத்திரங்கள் எல்லாமே சளைக்காமல் போராடி வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள். அதில் இந்த பூராடம் வெற்றியை உறுதி செய்யக்கூடிய நட்சத்திரம்.
நீர்நிலைகள் சந்திரன்தான். ஆனால் அந்த நீர்நிலைகளின் அடிப்பகுதி பூராடம். அதாவது ஊற்றுக்கண் பூராடம். அடிப்பகுதியில் இருக்கும் வண்டல் மண் பூராடம்.
பருவமழை குறித்தான கணக்கீடுகள் பூராட நட்சத்திரத்தை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (மார்கழி மாதம்) அது கர்ப்போட்ட நாட்களாக (கரு உருவாகிற தருணம். அதாவது மழைக்கான கரு) இருக்கும். இந்த கர்ப்போட்ட நாட்களில் கருமேகங்கள் சூழ்ந்தாலும், சிறு தூறல் போட்டாலும் அடுத்த பத்தாவது மாத இறுதி 11 வது மாதம் அதாவது புரட்டாசி இறுதி நாட்கள் மற்றும் ஐப்பசி மாதத்தில் மழை பொழியும் என்பது வான் கணிதம்.
மார்கழியில் அடைமழை பெய்தாலும், இயல்புக்கு மாறாக வெயில் வாட்டினாலும் கர்ப்பம் கலைந்ததாக அர்த்தம். ஆக அந்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என்பது ஜோதிடக் கணக்கு. ஆக மழை பொழிவதும், மழைக்கு அதிபதியான வருணபகவானுக்கு உள்ள தொடர்பும், பூராட தொடர்பும் புரிந்துவிட்டதுதானே இப்போது!
நிலைக்கண்ணாடி, கண்ணாடியால் ஆன பொருட்கள், வளையல் பூராட வடிவமே. குளிர்பானங்கள், மதுவகைகள் பூராடம் தான்.
பூராடத்தின் மிருகம் குரங்கு. எனவே ஒருவேலையை முடிக்கும் முன்னே அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள். இன்னும் சிலர் பல வேலைகளை இழுத்து போட்டுக்கொள்வார்கள். என்ன செய்தாலும், எத்தனை வேலை செய்தாலும் வெற்றியைத் தவறவிடமாட்டார்கள்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அரசியல் தொடர்பான பதவிகளை அடைவதில் அதிக சிரமம் இல்லாமல் எளிதாகப் பெறுவார்கள். ஆனால் அரசியல் பதவியைவிட அரசியல்வாதிகளின் நட்பு, தொடர்பு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.
இவர்கள் ஆலய திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது நன்மை தருவதாக இருக்கும். வழிகாட்டியாக குருவை ஏற்றுக்கொள்வதும், அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதும் நல்லது.
அளவற்ற நண்பர்கள் பெற்றிருந்தாலும், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வதும் நன்மைதான். ஆனால் எக்காரணம் கொண்டும் கூட்டாக தொழில் செய்வது சிறப்பைத் தராது. கூட்டாக தொழில் செய்தால் ஒரு கட்டத்தில் தொழில் உங்கள் கைவிட்டு உங்கள் கூட்டாளிக்கு போய்ச் சேரும்.
பூராட நட்சத்திரக்காரர்கள், கடன் வாங்கலாமா? கடன் வாங்கினால் திரும்ப அடைக்க முடியுமா? கடனால் அவமானம் வருமா? என்றொரு கேள்வியும் வரலாம்.
பூராடத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்கித்தான் தொழில் வியாபாரம் என எதுவுமே செய்ய முடியும். கடன் வாங்கி அதைச் சரியாக பயன்படுத்தும் ஒரே நட்சத்திரக்காரர்கள் பூராடத்தில் பிறந்தவர்களே!
ஆகவே, கடன் வாங்கி தொழில் செய்யலாம். தொழிலை மேலும் விரிவுபடுத்தலாம். கடன் பெற்று வீடு கட்டலாம். வாகனம் வாங்கலாம். கடன் பெற்று அதை முறையாக பயன்படுத்தி, அந்தக் கடனையும் சரியாக திருப்பிச் செலுத்தி, மேலும் கடன் வாங்கி... என, இவர்கள் கடன் வாங்கி கடன் வாங்கியே வாழ்வில் மிக உயரத்தை அடைவார்கள். கடனை அடைக்காமல் ஏமாற்றலாம் என நினைத்தால் அனைத்தும் வீணாகப் போகும். ஆனால் பூராடக்காரர்கள் எந்த நிலையிலும் ஏமாற்றக்கூடியவர்கள் அல்ல. எனவே கடன் பெறலாம். கடனால் எந்த பிரச்சினையும் வராது. அவமானங்கள் ஏற்படாது. முடிந்த வரை வங்கிக் கடன் பெறுவது நல்லது.
அசையும் சொத்துகளில் முதலீடு செய்வதை விட அசையா சொத்துகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம்...
பூராட நட்சத்திரக்காரர்கள், சபலத்திற்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். சபலத்திற்கு ஆளானால் மிகப்பெரிய அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களின் பலவீனமே சபலம்தான்! கண்டதும் காதல் என்பது இவர்களின் உச்சபட்ச பலவீனம். அதேபோல ஒரு காதலோடு முடிவடையாது. அடுத்த காதல்.. அடுத்த காதல்.. என அடுத்தடுத்ததாக காதல் வந்து கொண்டே இருக்கும். இப்படி காமம் கலந்த காதல் லீலைகளை அறவே தவிர்த்தால் வாழ்வில் பல சாதனைகளை செய்யலாம்.
எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது கனமாக இருக்க வேண்டும். எனவே காமத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதீத காமம் பால்வினை நோய்களை எளிதாக தரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக இவர்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் ஆலயங்களில், தீபத்திற்கு தேவையான நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை தவறாமல் வாங்கித் தருவது இவர்களுக்கு பலம் சேர்க்கும்.
பூராட நட்சத்திரத்தின் தேவதை - வருணபகவான்
அதிதேவதை - திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் (பஞ்ச பூதங்களில் நீர் தத்துவம் திருவானைக்கா)
மிருகம் - ஆண் குரங்கு - அனுமன் வழிபாடு செய்வது மிக சிறப்பான பலன்கள் தரும்.
பறவை - கவுதாரி
மரம் - வஞ்சி மரம்
பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம். இந்த சுக்கிரன் சர்க்கரை நோய்க்கான கிரகம். இந்த சுக்கிரனே சர்க்கரை நோய்க்கு மருந்தையும் தந்துள்ளார். அது வஞ்சி மரம்.
வஞ்சி மரத்தின் பூ மற்றும் வேர் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும். அது மட்டுமல்ல... இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மரம் என்பதும் வஞ்சி மரமே. இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை!
மலர் - வெண் தாமரை
அடுத்த பதிவில் பூராடம் நட்சத்திரம் 4 பாதங்களுக்குமான பலன்களைப் பார்ப்போம்.
- வளரும்
***************************
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT