Published : 07 Jul 2020 04:14 PM
Last Updated : 07 Jul 2020 04:14 PM

மனசு சுறுசுறு; உடம்பு சோம்பல்; வாழ்க்கைத்துணை சூப்பர், இந்த நட்பு வேண்டவே வேண்டாம்; பேனா தானம்! 

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 54;


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் குணங்களைப் பார்த்து வருகிறோம்.
கேட்டை நட்சத்திரத்தின், கேட்டை நட்சத்திரக்காரர்களின் நல்ல குணங்களையும் பார்த்தோம், தீய குணங்களையும் பார்த்தோம். பதிவின் முடிவில் சந்திரனைக் குறிப்பிட்டு வளர்பிறை தேய்பிறை, மற்றும் ராகு கேது பாம்பின் தொடர்பு, செவ்வாய் என்னும் நெருப்பு பலமிழந்து போனது இவையெல்லாமே கேட்டை நட்சத்திரத்தின் குணங்கள் அமையக் காரணம் என சொல்லியிருந்தேன்.


இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

கேட்டை நட்சத்திரம் இருப்பது விருச்சிகம் ராசியில்! விருச்சிக ராசியில்தான் சந்திரன் நீசம் அடைகிறது,( நீசம் - பலமிழத்தல்) சந்திரன் மனம் என்பதன் அடையாளம். மனோகாரகன் என்பார்கள். நம் உடலும் சந்திரனே.


சந்திரன் பரம நீசம் அடைவது அனுஷ நட்சத்திரத்தில்தான், ஆனால் அப்படி பரம நீசம் அடையும் சந்திரன் தன் நீச பலன் அனைத்தையும் தனக்கு அடுத்த (சம்பத்து) நட்சத்திரமான கேட்டைக்கு அப்படியே “தாரை” வார்த்து தந்துவிடுகிறது. எனவே அனுஷத்தை விடவும் கேட்டைக்கே அதிக பலன் கிடைக்கும். அது நன்மையோ தீமையோ எதுவாக இருந்தாலும் முழுமையாகக் கிடைக்கும்.

சந்திரனின் வளர்பிறை தேய்பிறை போல, கேட்டை நட்சத்திரக்காரர்கள் வளர்ச்சி தளர்ச்சி என இரண்டையும் மாறிமாறி அனுபவிப்பார்கள். ஆனால் எப்போதும், எதிலும் பின் வாங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல... மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த சந்திரனே காரணமாகிறார். (கேட்டை நட்சத்திரக்காரர்கள் முந்தைய அத்தியாயத்தையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள்.இன்னும் எளிதாகப் புரிந்துகொள்வீர்கள்).


அதேபோல, ராகு கேதுக்கள் இந்த விருச்சிக ராசயில்தான் உச்சம் அடைகிறார்கள். எனவே ராகுவுக்கு உண்டான பிரமாண்ட வளர்ச்சியும் இருக்கும்; கேதுவின் காரகமான கடும் ஏமாற்றங்களும் இருக்கும். மேலும் விருச்சிகம் என்பது செவ்வாயின் ஆட்சி வீடு. செவ்வாயோ நெருப்பு தத்துவம். விருச்சிகமோ நீர் ராசி. செவ்வாய் என்னும் நெருப்பு, விருச்சிகம் என்னும் நீரில் அணைந்து விடுவதால் விருச்சிக ராசிக்கரார்கள் குறிப்பாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரணமேயில்லாமல் விரக்தியான மனநிலைக்கும், விபரீத எண்ணங்களுக்கும் ஆட்படுவார்கள். மனதளவில் சுறுசுறுப்பு இருந்தாலும் உடலளவில் சோம்பல் அதிகமாகவே இருக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள், பெரும்பாலும் சுய தொழில் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். கட்டிடத் தொழில், கட்டுமான நிறுவனங்கள், ரியல்எஸ்டேட் தொழில், விவசாய இயந்திரத் தொழில், லாரி வேன் முதலான டிரான்ஸ்போர்ட் தொழில், மண் தொடர்பான இயந்திரத் தொழில், விவசாயம், செங்கல் சூளை, மணல் வியாபாரம், ஹார்டுவேர்ஸ் கடை, பெயிண்ட் வியாபாரம், பெயிண்டிங் தொழில், ரசாயனத் தொழில், பட்டாசு தொழில், ஆயுதங்கள் தயாரித்தல், துப்பறியும் தொழில், காவல்துறை, செக்யூரிட்டி நிறுவனம், ராணுவம், மருத்துவம், மருந்துக்கடை முதலான தொழில் அமையும்.

தகவல் தொழில் நுட்பப் பணி, மனிதவள மேம்பாடு, கூரியர், தபால்காரர், பாதுகாவலர், ஆயுத பயிற்சியாளர், தற்காப்புக் கலை பயிற்றுநர் முதலான வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள், உணவு விஷயத்தில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும். உணவே விஷமாகும் வாய்ப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ரொம்பவே அதிகம். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், அசைவ உணவுகள் போன்றவற்றில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதேபோல, கேட்டை நட்சத்திரக்காரர்கள், பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முக்கியமாக, இரவு நேர பயணங்களை தவிர்ப்பது ரொம்பவே முக்கியம். கூர்மையான ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் வேண்டும். அதீத காமத்தால் பால்வினை நோய்கள் வரவும் வாய்ப்பு உண்டு. மர்ம உறுப்பில் பிரச்சினைகள், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சினைகள், அறுவை சிகிச்சை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு... அவர்களின் திருமணத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள் -

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ; இந்த நட்சத்திரக்காரர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டால், மிகச்சிறப்பான நன்மைகளையும். மிகப்பெரிய யோகங்களையும் பெறலாம். 99.99%

கார்த்திகை - உத்திராடம் ; இந்த நட்சத்திரக்காரர்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டால், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சுகபோகமான வாழ்வு, இன்பமயமான வாழ்க்கை அமையும். 97%

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ; இந்த நட்சத்திரக்கார்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டால், மன நிறைவான வாழ்வு, அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும். 95%


புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ; இந்த நட்சத்திரக்காரர்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டால், நன்மைகள் தேடிவரும். செல்வம் பெருகும். சேமிப்பு உண்டாகும். 92%

சேர்க்கவே கூடாத நட்சத்திரங்கள் ;
ஆயில்யம்- கேட்டை- ரேவதி- அஸ்வினி - மகம் - மூலம்- உத்திரம் முதலான நட்சத்திரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


இந்த பட்டியலில் இல்லாத நட்சத்திரங்களை ஜோதிட ஆலோசனை பெற்று பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல பலன்கள் தருகிற, நல்ல நண்பர்கள் அமையும் நட்சத்திரங்கள் -

அஸ்வினி - மகம் - மூலம் :-
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அல்லது இந்த நட்சத்திரக்காரர்களை நண்பர்களாகக் கொண்டிருந்தால், மேற்கொள்கிற எந்தக் காரியமும் முழு வெற்றியையும், நினைத்தே பார்க்க முடியாத லாபத்தையும் கொடுக்கும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் தடையில்லாமல் நடந்தேறும். இந்த நட்சத்திரக்காரர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைவது பெரும் பாக்கியம்.


கார்த்திகை - உத்திரம்- உத்திராடம் ;

இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எடுக்கும் முயற்சிகள் காரிய வெற்றியாகவும், தன லாபம் தருவதாகவும் இருக்கும். மேலும் சொத்து தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாகவும், பத்திரப் பதிவுகள் செய்ய ஏற்றதாகவும், வீடு மனை வாகனம் வாங்கவும் விற்கவும் மிகப்பெரிய யோகத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால், பொருளாதார சிக்கல் ஏற்படும்போதெல்லாம் ஓடி வந்து உதவியை செய்வார்கள்.


மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அல்லது இந்த நட்சத்திரக்காரர்களை நண்பர்களாகக் கொண்டிருந்தால், தொழில், வியாபாரம் தொடங்கவும். அது தொடர்பான கடன் வாங்கவும், நீண்டநாளாக அடைக்க முடியாத கடன்களை அடைக்கவும் ஏற்ற நாட்களாகும்; ஏற்றவர்களாக இருப்பார்கள். மேலும் நோய் நீங்க மருந்து உண்ணவும், மாற்று மருத்துவம் துவங்கவும், புத்திர பாக்கியம் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இந்த நட்சத்திர நாட்கள் ஏற்ற நாட்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவார்கள்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபார விஷயங்கள் வெற்றியைத் தரும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். இந்த நட்சத்திர நண்பர்களால் அளவுகடந்த நன்மைகளும், தொழில் உதவியும், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.


பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் சிந்தாமல் சிதறாமல் முழு லாபம் கொடுக்கக்கூடியதாக இருக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும். பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால் எதிர்பாராத நன்மைகளும், தேவையான உதவிகளும் கிடைக்கும்.

சோதனைகளையும் வேதனைகளையும் தரக்கூடிய நட்சத்திரங்கள் -

பரணி - பூரம் - பூராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் தோல்வியில் முடியும். ஆறாத வடுவைத் தரும். தீராத துன்பத்தைக் கொடுக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் கடும் துயரங்களையும், அவர்களால் விபத்துகளையும் சந்திக்க வேண்டியது வரும்.


ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் முழுமையடையாது. அரைகுறையாக பாதியில் நிற்கும். லாபம் எதிர்பார்த்தால் நஷ்டம்தான் வந்து சேரும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால், உங்களால் அவர்கள் ஆதாயம் அடைவார்களே தவிர அவர்களால் எந்த நன்மையும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்குக் கிடைக்காது.


திருவாதிரை - சுவாதி - சதயம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் உங்களுக்கு எதிராக திரும்பும். மீளமுடியாத துயரத்தைத் தரும். மனம் வெதும்பி குறுகவைத்துவிடும். சித்திரவதைக்கு ஆளானது போல துடிக்கச் செய்யும். இந்த நட்சத்திரக்காரர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால், அனுதினமும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். சிலர் சிறைக்குச் செல்லும் மோசமான நிலையும் வரும்.


பொதுவாகவே, கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருள் தானம் தருவதால் மேன்மையும் உயர்வும் வெற்றியும் உண்டாகும். அதாவது, ஆடை தானமாக வழங்குங்கள். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், காலணிகள் வழங்குங்கள். பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம் என மங்கல பொருட்கள் தானமாக வழங்குங்கள். வயதானவர்களுக்கு குடை,போர்வை, காலணி வழங்குங்கள்.

ஆலயங்களுக்கு எண்ணெய், அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். இதை தவறாமல் செய்து வந்தால் மனத் துயரங்களில் இருந்தும் மீளலாம். மன நிறைவையும் பெறலாம்.

அடுத்த பதிவில் கேட்டை நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியாக அமைந்திருக்கும் மிகத் துல்லியமான குணங்களையும் பலன்களையும் பார்ப்போம்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x