Published : 29 May 2020 06:30 PM
Last Updated : 29 May 2020 06:30 PM

மனைவி கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள் ; சுவாதி நட்சத்திர மகிமை!  27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள்  - 43 ; 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


இப்போது நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் சுவாதி.


இது ராகு பகவானின் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 15-வது நட்சத்திரம். சுவாதி நட்சத்திரம் இருக்கும் ராசியானது துலாம்.

நான் இதுவரை எழுதிய ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மூன்று அத்தியாயங்கள் எடுத்துக்கொண்டு எழுதினேன். சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி எழுத 10 அத்தியாயங்கள் கூட போதாது. அவ்வளவு விஷயங்கள் சுவாதியில் இருக்கிறது.

ஆனாலும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் முழுமையான தகவல்களைத் தருகிறேன்.

உலக இயக்கத்திற்குக் காரணம் சூரியன் (சூரிய குடும்பம்). சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் காரணமாகத்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றியது என்பது நாம் அறிவியல் மூலம் அறிந்த ஒன்றுதான்!

ஆனால் சூரியனின் வெப்பம் நேரடியாகத் தாக்கினால் நம் பூமியில் புல்பூண்டு கூட மிஞ்சாது. இதுவும் நாம் அறிந்ததுதான். பூமியின் மேற்பாகத்தில் இருக்கும் ஓசோன் படலமே சூரிய வெப்பத்தை அளவோடு பூமிக்குள் அனுமதிக்கிறது. இதுவும் நாம் அறிந்த அறிவியல்தானே!

நாம் அறியாததும் இருக்கிறது.


சூரிய வெப்பத்தைப் பதமாக நம் உடல் தாங்கும் அளவுக்குத் தருவது சுவாதி நட்சத்திரமே!


அட... அதெப்படி என நீங்கள் கேட்கலாம்.


நவகிரகங்களின் தலைவனான சூரியனை ‘நீசம்’ என்னும் வலிமையற்றுப்போகச் செய்யும் நட்சத்திரம்தான் சுவாதி. ஆம் துலா ராசியில் நீசமாகும் சூரியன், துல்லியமாக நீசமடைவது சுவாதி நட்சத்திரத்தில்தான்.


இதனால் உண்டாகும் பலன் என்ன என்பதைப் பிறகு பார்க்கலாம்.


செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமி தாயார் பிறந்த நட்சத்திரம் சுவாதி. மகாவிஷ்ணுவின் பாதக்கமலம் சுவாதி. தூணிலும் துரும்பிலும் இருந்தபடி எதிரிகளை சம்ஹாரம் செய்யும் நரசிம்மர் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்.

தங்க ஆபரணங்கள், ஆடைகள் சுவாதி. பெண்ணின் யோனி சுவாதி. கரு உருவாகுதல் சுவாதி. குழந்தை பாக்கியம் தாமதமாகிக் கொண்டிருக்கும் தம்பதியினர் சுவாதி நட்சத்திர நாளில் தாம்பத்யம் கொள்ள புத்திரபாக்கியம் நிச்சயம் உண்டாகும். ஆம், தாம்பத்யமும் அந்த தாம்பத்யத்தின் உச்சமும் சுவாதி. தேன்கூடு சுவாதி. மகரந்தச் சேர்க்கை சுவாதி.

சிவலிங்கம் அஸ்வினி. அந்த லிங்கம் இருக்கும் ஆவுடை எனும் பீடம் சுவாதி. கூட்டுக்குடும்பம் சுவாதி. சந்தைகள் சுவாதி. மெழுகுவர்த்தி சுவாதி. தியாகம் சுவாதி. தேன்கூடு சுவாதி.


தேனீக்கள் ஓடிஓடி உழைத்துச் சேமிக்கும் தேனை மனிதன் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறானோ, அதுபோல சுவாதியில் பிறந்தவர்கள் தேடிச் சம்பாதித்ததை அடுத்தவர்கள் மிக எளிதாக பெற்றுச்செல்வார்கள்.


(ஆபாசமாக எண்ண வேண்டாம்)ஒரு ஆண் சிறுவயது முதல் சேர்த்து வைத்த விந்து எனும் உயிரணுக்களை தன் சந்ததி உருவாக பெண்ணுக்கு தாரை வார்த்துத் தருகிறான் அல்லவா? அந்த விந்து சுவாதி. இப்படி சேமிப்பே இல்லாமல் வாழ்வதுதான் சுவாதி.

ராகுவின் நட்சத்திரங்கள் மூன்று: திருவாதிரை, சுவாதி, சதயம். இதில் திருவாதிரை கயிறு, சுவாதி எமனின் வாகனமான எருமையின் நட்சத்திரம், சதயம் எமன் பிறந்த நட்சத்திரம். உலகின் உயிர்வாழ் சமநிலையைக் காப்பாற்றுவது இந்த மூன்று நட்சத்திரங்களே.

பருத்தி, பால்நிலவு, விளக்கின் ஒளி, (பெட்ரோமேக்ஸ்) மேண்டில், வாகன முகப்பு விளக்கு, மனிதனின் தொப்புள், முதுகு, தொடைப்பகுதி, வலது நாசியின் சுவாசம், செவித்திறன் இவையனைத்தும் சுவாதி நட்சத்திரமே.

இவர்களில் பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அல்லது வியாபாரம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். அரசு ஒப்பந்ததாரர், மிகப்பெரிய கட்டுமான நிறுவனம், அடுக்கு மாடி கட்டுமானம், அரசுப் பணி, நீதிபதி, வழக்கறிஞர், இதயநோய் மருத்துவர், தராசு துணை கொண்ட வியாபாரம், (தங்கம்) உரைகல், ஆபரணங்கள் செய்தல், வெள்ளி தொடர்பான தொழில், மதுபான விடுதி, சூதாட்ட விடுதி, போதைப் பொருள் விற்பனை மற்றும் உபயோகித்தல், மாந்த்ரீகம், பணமாற்று முதலான தொழில்களில் ஏதேனும் அமையும்.

அயல்நாடுகளில் பணி, ஏற்றுமதி இறக்குமதித் தொழில், ஆக்ஸிஜன் சிலிண்டர், எரிவாயு சிலிண்டர் தொழில், தையல் தொழில், ரெடிமேட் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, குழந்தைகளுக்கான பொம்மை தயாரித்தல், துரித உணவகங்கள், அழகு நிலையம், மசாஜ் பார்லர் முதலான தொழில்களும் அமையும்.

சரி... ஒருவர் ஜாதகத்தில் சுவாதியில் சூரியன் நீசம் அடைவதால் என்ன பலன்?


அந்த ஜாதகரின் தந்தை பயனற்றுப்போவார் அல்லது தந்தை - மகன் உறவில் விரிசல் ஏற்படும் அல்லது தந்தையைப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எது நடந்தாலும் நன்மையே நடக்கும் என்பது உறுதி.

இவர்கள், மனைவி கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.


அப்படியா? ஏன் அப்படி?

இளமையில் இறை பக்தி இல்லாமல் இருப்பார்கள். நடுவயதில் இறைவனை அதிகமாக நம்புவார்கள். இறைவனே கதியென இருப்பார்கள்.


அடடா... ஏனிப்படி?

எவ்வளவு சொத்துகளை இழந்தாலும், சிறிதும் கவலையில்லாமல் மீண்டும் சிலிர்த்தெழுந்து வெற்றி வாகை சூடுவார்கள் இவர்கள்!


ஆஹா... எப்படி இப்படி?


இவை குறித்தெல்லாம் அடுத்ததாகப் பார்ப்போம்.


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x