Published : 15 Apr 2020 10:09 AM
Last Updated : 15 Apr 2020 10:09 AM
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
சாதனைகளை படைக்கக் காத்திருக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு செல்வவளம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் என மேன்மையும் வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது உங்களுக்கு!
குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். எதிர்பாராத வாய்ப்பாக சொந்தவீடு அமையும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட வருத்தங்கள் அகலும். சகோதரப் பகை மறையும். சொத்து தொடர்பான வழக்குகள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கடனை முழுமையாக அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் முடியும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவ முயற்சிகள் இனி தேவைப்படாத அளவில் இயற்கையாக குழந்தை பாக்கியம் உருவாகும். திருமணத்தில் ஆர்வம் காட்டாதவர்களும் இந்த ஆண்டில் குடும்பஸ்தராக மாறுவார்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜூன் மாதத்திலேயே நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான கருத்துவேறுபாடுகள் குடும்பப் பெரியவர்கள் உதவியுடன் தீர்த்து வைக்கப்படும்.
இதுவரை எடுத்த முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் இருந்திருக்கும். இனி, தடைகளைத் தாண்டி வெல்லும் வாய்ப்பு உண்டாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் தீரும். நண்பர்களும் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பாராட்டுகளையும், உயரதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி படாதபாடுபட்டிருப்பீர்கள். இனி கவலையே வேண்டாம், உங்கள் எதிரிகள் தோற்றுப்போவார்கள் அல்லது காணாமல் போவார்கள்.
பதவி உயர்வு எதிர்பாராத நேரத்தில் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வரவேண்டிய நிலுவைத்தொகையும் வந்து சேரும்.
தொழிலில் இதுவரை இருந்த இறுக்கமான நிலை இனி படிப்படியாக மாறும். தொழில் வளர்ச்சி திடீர் வேகமெடுக்கும். பலவிதமான வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். ஏற்றுமதி தொழில் அபாரமான வளர்ச்சி பெறும். அரசிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பங்கு வர்த்தகத்துறையினர் நஷ்டத்திலிருந்து மீள்வார்கள்.
பெண்கள் வசதிமிக்க வளங்களைப் பெறுவார்கள். திருமணம் ஜூலைக்குள் உறுதியாகும். நல்ல வேலை வாய்ப்புகள் தேடிவரும். எதிர்மறை சிந்தனைகள் மறையும். சுயமாகத் தொழில் செய்வதற்கு குடும்பத்தார் உதவுவார்கள். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக தீரும்.
மாணவர்களுக்கு கல்வியில் கவனக்குறைவு உண்டாகும். அலட்சியம் அதிகரிக்கும். எனவே கவனம் வேண்டும். உயர்கல்வி பயில்பவர்கள் தேர்வுகளில் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருப்பது தேர்ச்சி விகிதத்தை குறைக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள், எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்கள் பெரிதும் உதவுவார்கள். பணப்பிரச்சினை தீரும்.
சித்திரை மாதம் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே முடிப்பீர்கள். பண வரவு தங்கு தடையில்லாமல் இருக்கும். உதவிகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். தொழில் வளர்ச்சி நிதானமாக இருக்கும். செய்கின்ற தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். குடும்பத்தினரோடு இணக்கமாக இருங்கள். வீண் பிடிவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மன நிறைவு இருக்கும்.
வைகாசி மாதம் -
வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் முடிவாகும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும். தடைகள் தாண்டி தொழில் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
ஆனி மாதம் -
லாபகரமான மாதம். பணம் பல வழிகளிலும் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். கமிஷன் வியாபாரம் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.
ஆடி மாதம்-
சுப செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். ஒரு சில வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தந்தையுடனும் தந்தை வழி உறவுகளிடமும் வருத்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடன் கொடுப்பது அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆவணி மாதம் -
தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். சொத்துக்கள் பிரச்சினை முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். தரகு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் -
வருமானம் திருப்தியாக இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் எளிதில் முடியும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வங்கிக் கடன் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
ஐப்பசி மாதம் -
செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். வரவைவிட செலவு அதிகம் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் இருக்கும். மருத்துவசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான செலவும் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அலுவலக பணிச்சுமை அதிகரிக்கும்.
கார்த்திகை மாதம் -
கடந்த மாத சிக்கல்கள் வாழ்க்கைத்துணையின் உதவியால் முடிவுக்கு வரும். திருமணம் நிச்சயிக்கப்படும். தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். கட்டுமானத் தொழில் லாபகரமாக இருக்கும்.
மார்கழி மாதம் -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டிய மாதம், குழந்தைகளாலும் வளர்ந்த பிள்ளைகளாலும் செலவுகளும் மன உளைச்சலும் ஏற்படும். தொழில் தொடர்பாக சிக்கல் ஒன்று உருவாகி முடிவுக்கு வரும். சொத்து தொடர்பாக வழக்கு வரும். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருக்கவேண்டும்.
தை மாதம் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல பலன் கிடைக்கும். கமிஷன் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்ப உறவுகளால் நன்மைகள் உண்டாகும். தாய்மாமன் உறவுகளால் நன்மைகள் கிடைக்கும்.
மாசி மாதம் -
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது, உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாறுதல் போன்றவை நடக்கும். உறவினர் வகையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
பங்குனி மாதம் -
ஆதாயம் மிகமிக அதிகமாக இருக்கும் மாதம். கடன்கள் முடிவுக்கு வரும். சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத்துணையால் பெரும் ஆதாயம் கிடைக்கும். சேமிப்பு உயரும். தொழில் லாபம் ஆச்சரியப்படுத்தும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும்.
இந்த ஆண்டு மேலும் சிறப்பாக இருக்க வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு முதலான நாட்களிலும் விசேஷ நாட்களிலும் பால்பாயசம் செய்து அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் -
வெண்மை மற்றும் கருநீலம்
அதிர்ஷ்ட எண் - 4, 8, 5
வணங்க வேண்டிய இறைவன் -
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மற்றும் திருச்சி வடபத்ர காளி அம்மன் முதலான தெய்வங்களை ஒருமுறையேனும் தரிசித்துவாருங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment