Published : 08 Apr 2020 10:09 AM
Last Updated : 08 Apr 2020 10:09 AM

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கூட்டாளிகள் யார் யார்?  27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் ;28 - 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில், மகம் நட்சத்திரம் குறித்து சொல்கிறேன்.
ஜெகம் ஆளும் மகம் என்றொரு சொலவடை உண்டு.

நட்சத்திர வரிசையில் 10 வது நட்சத்திரம் மகம். சிம்ம ராசியில் அமைந்துள்ளது. இந்த மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.

சரி, மகம் ஜெகம் ஆளுமா? எனும் கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்குமே!
ஜெகம் என்றால் உலகம்.
ஒருசிலர் பேசும்போது கவனித்திருக்கலாம் “எனக்கு என் குடும்பம், என் குழந்தைகள்தான் எனக்கு உலகம்” என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
இன்னும் ஒரு சிலர் “அவருக்கு ஆபீஸ்தான் உலகம்” என்பார்கள்.
இப்படி எதில் முழு கவனத்தையும் செலுத்தி, மற்ற விஷயங்களை புறந்தள்ளுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செயல்படும் விஷயம்தான், ஈடுபடும் காரியம்தான் உலகம்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஒருவருக்கு எதில் பற்றும், ஆர்வமும் ஏற்பட்டு அதிலேயே மூழ்குகிறார்களோ அதுதான் அவர்களது உலகம். அதாவது ஜெகம்.

ஆம், இந்த மகம் நட்சத்திரத்தினர் எளிதில், எதிலும் ஆசைப்பட மாட்டார்கள். விருப்பம் ஏற்பட்டுவிட்டாலோ அதில் மிக உறுதியாக இருப்பார்கள். ஒருவேளை கட்டாயத்தின் பேரில் திணிக்கப்பட்டாலும், அதில் ஆரம்பத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் விரைவிலேயே அதை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து அதை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.

முதலில் மகத்தில் பிறந்த முக்கியமானவர்களை அறிந்து கொண்டால் இவர்களின் குணாதிசயங்களை மிக எளிதாகப் புரிந்துகொள்வீர்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் முக்கியமானவர் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தர்மபத்தினியான சீதாதேவியார். ராமாயண காவியம் உருவாவதற்கும், ராமனின் புகழ் உலகெங்கும் பரவுவதற்கும் பெண்ணாசை குறிப்பாக பிறன்மனை மேல் ஆசை பட்டவர்களை , எந்த வரம் வாங்கி வந்தாலும் முடிவில் அழிவைத் தேடித்தரும் என்பதற்கு உதாரணமாகவும் காரணமாகவும் இருந்தவர் சீதாபிராட்டியார். தன் கணவர் ராமனே என் உலகம் என வாழ்ந்தவர்.

அடுத்ததாக... மகம் நட்சத்திரத்தில் பிறந்த முக்கியமானவர் வில்லுக்கு விஜயன் என்னும் பெயர்பெற்ற அர்ஜுனன். தன் இலக்கில் மட்டுமே குறியாக இருந்தவன். குருக்ஷேத்திரப் போரில் போர் செய்யத் தயங்கியபோது பரமாத்மாவிடம் இருந்து பகவத்கீதையை நமக்குப் பெற்றுத் தந்தவன். தன் கடமையை மட்டும் செய்யப் பணிக்கப்பட்டவன்.

மகம் நட்சத்திரத்தில் அவதரித்த இன்னொரு முக்கியமானவர் எமதர்மராஜன். வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமி தாங்காது. எனவே மரணம் எனும் மகாவிடுதலையை மனித உயிர்களுக்குத் தருபவர். இவருக்கு உயிரை எடுக்கும் பணியை தந்தபோது மிகவும் தயங்கினார். சிவபெருமான் “இது உனது கடமை என்று உணர்ந்தால் போதும், இந்த பாசக்கயிறுதான் நான் என்பதை மறவாதே. மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்’’ என்றார்.

இவர்களையும் இவர்களின் கேரக்டர்களையும் கவனித்தால் போதும்... மகம் நட்சத்திர குணங்களை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.

சீதை, தயக்கத்தோடு லட்சுமணன் கோட்டை தாண்டியதால் ராமாயண பெருங்காவியம் உருவானது.

அர்ஜுணன் போரில் தயக்கம் காட்டியதால் கீதை கிடைத்தது.

எமராஜன் தயங்கியதால் பாசக்கயிறு கிடைத்து. நமக்கெல்லாம் மோட்சம் எனும் பெரும் விடுதலை கிடைக்கிறது.

இப்படித்தான், ஆரம்பத்தில் தயக்கம், பின்பு மிகப்பெரும் சாதனை என்பதே இந்த மகம் நட்சத்திரத்தின் சிறப்பு.இயல்பு.

இவர்களிடம் ஒரு வேலையைக் கொடுத்து விட்டால் அதுபற்றி நாம் கவலைப்பட வேண்டியதே இல்லை. மிகச்சரியாக கச்சிதமாக முடித்து விடுவார்கள்.
தானும் சரியாக இருப்பார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஒழுக்கம், இவர்களுக்கு மிகமிக முக்கியம். ஒழுக்கமற்றவர்களை அருகில் கூட சேர்க்க விரும்பாதவர்கள். உடையில் மிக நேர்த்தி, உள்ளத்திலும் மிக நேர்த்தியானவர்கள். பொதுவாகவே இவர்களுக்கு அதிகாரத்தொனி அதிகம் இருக்கும். முன்கோபமும் அப்படித்தான்! கண்டிக்கவும் செய்வார்கள், தண்டிக்கவும் செய்வார்கள்.

இவர்களின் பொருள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்கள். சரியானதை ஏற்பார்கள். சரியில்லாததை ஒதுக்கிவிடுவார்கள்.

இவர்களின் வாழ்க்கைத்துணை, நட்பு என எதுவும் மிகச்சாதாரணமானவர்களாகவே இருப்பார்கள். இதற்கும் காரணம் உண்டு.
இவர்களின் பேச்சை எளியோர்கள் தட்டாமல் கேட்பார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அதேசமயம் நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அந்த நட்பில் விரிசல் வந்தாலும் இவர்களாகவே சரிசெய்வார்கள். ஆனால் ஒருபோதும் துரோகிகளுக்கு மன்னிப்பை தரமாட்டார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், “நம்பி கெட்டவர் யாரும் இல்லை,நம்பாமல் கெட்டவர்களே உண்டு” என்பதற்கு சரியான உதாரணம் இந்த மகம் நட்சத்திரத்தினர்தான்.


பொதுவாகவே, இவர்களில் பலரும் அரசு தொடர்பான பணிகளில் இருப்பார்கள். நிர்வாகம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். உயர்பதவிகள், காவல்துறை, ராணுவம், அறுவை சிகிச்சை மருத்துவர், மிகப்பெரிய கட்டுமான வல்லுநர், கட்டிடக்கலை, வனத்துறை, பாரம்பரியக் கலை வித்தகர், நிறுவனங்களில் குழுத்தலைமை, நீதிபதி, வழக்கறிஞர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

பரம்பரைத் தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனம்,தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், வாடகை வருவாய், பிள்ளைகளால் வருமானம், செங்கல் சூளை, மரத்தொழில், மண் மற்றும் மணல் வியாபாரம், கிரானைட் மார்பில் தொழில், அரசு காண்டிராக்ட், பெரிய பாலங்கள், உயரமான கட்டிடங்கள் கட்டும் தொழில், மது ஆலைகள், தோல் நிறுவனங்கள், தோல் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்கள் அமையும். மேலும் உணவுத்தொழில் பெருமளவில் கைகொடுக்கும்.

இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தினாலே பல பிரச்சினைகளில் இருந்து மீளலாம். இவர்களின் பலவீனமே கோபம் தான். அதுமட்டுமல்ல... அதிக காரமான உணவும், மிகச்சூடான உணவும் தான் உண்பார்கள். இந்த கார உணவே உடல் நலத்தில் அதிக பிரச்சினைகளைத் தரும்.

என்னுடைய நண்பர் ஒருவர் மகம் நட்சத்திரம்தான். வெறும் மிளகாய்ப்பொடி, எண்ணெய், உப்பு சேர்த்து சாப்பாட்டில் பிசைந்து உண்பார். அதை பார்க்கவே பயமாயிருக்கும். ஆனால் அவர் அதை அசால்டாக உண்பது எனக்கு பதைபதைப்பைத் தரும்.

இதன் காரணமாகவே இவர்களுக்கு இதயநோய், ரத்த அழுத்தம், பின்மண்டை வலி, முதுகெலும்பு தேய்மானம், தலைவலி, அடிக்கடி காய்ச்சல், மூலம் தொடர்பான அவஸ்தைகள் போன்ற பிரச்சினைகள் வந்தன.

இவர்கள் உடல் அதீத உஷ்ணமானது. எனவே குளிர்ச்சியான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் பித்தநாடி பிரிவை சேர்ந்தவர்கள். பித்தம் தம் உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தேநீர் பிரயரான இவர்கள், தேநீரை தியாகம் செய்யவேண்டும். உடையில் மிக சுத்தத்தை விரும்பும் இவர்கள், உடல் நலத்தில் மிகமிக அலட்சியமாக இருப்பார்கள். எனவே உடல்நலத்தில் அக்கறை காட்டினாலே நீண்ட ஆயுளைப் பெறுவார்கள்.

இன்னும் இருக்கு மகத்தின் சிறப்பு.
- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x