Last Updated : 11 Apr, 2025 04:50 PM

 

Published : 11 Apr 2025 04:50 PM
Last Updated : 11 Apr 2025 04:50 PM

கன்னி ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - நினைத்தது நடக்கும்!

கன்னி: தியாக உணர்வும், திடச் சிந்தனையும் கொண்ட நீங்கள் சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் துலாம் ராசியில் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். வெளியூர், வெளிமாநிலப் பயணங்களால் மனம் உற்சாகம் பிறக்கும். பேச்சாலேயே சில காரியங்களை முடிப்பீர்கள். குழந்தையில்லா தம்பதிக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மே 18-ம் தேதி நடக்க உள்ள ராகு - கேது பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். சோதனைக் காலம் முடிந்து நன்மை நடக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் விலகும். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். சொந்தம் - பந்தங்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்தும் போக முடியாமல் இருந்து வந்த புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும்.

இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் கல்யாணப் பேச்சுவார்த்தையில் இனி முன்னேற்றம் உண்டு. தாய்வழி வீட்டாருடன் சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் வந்து போகும். என்றாலும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தினர் உங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். சிலருக்கு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணவரவெல்லாம் இப்போது திடீரென வரும். தங்க ஆபரணச் சேர்க்கைகள் மகிழ்ச்சி தரும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இணக்கமாக இருப்பீர்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு யோசனை சொல்வீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் சின்னச் சின்ன கோப, தாபங்கள் வந்து போகத்தான் செய்யும். அதையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் செய்வது நல்லது. கணவர் வழி சொந்தங்களிடம் நேசமாக பழகுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு உற்சாகம் பொங்கும். என்ன செய்வதென்ற குழப்ப நிலை மாறும். பெற்றோரின் ஆலோசனையோடு தெளிவான முடிவை எடுப்பீர்கள். மனதுக்கு பிடித்த மணமகன் அமைவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பிலிருந்து மந்தநிலை மாறும். கெட்ட நட்பு வட்டத்தை தவிர்த்துவிட்டு படிப்பில் அக்கறை காட்டுவார்கள். தாய் தந்தையரின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நிம்மதி உண்டாகும். வரவேண்டிய பாக்கிகள் எளிதில் வசூலாகும். எனினும் குரு 10-ல் வருகிறார். கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கூட்டுத் தொழிலை தவிர்த்துவிடுவது நல்லது. புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதுர்யமான பேச்சால் லாபமீட்டுவீர்கள். சிலர் கடையையோ, குடோனையோ வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் வரக்கூடும். உணவு, தானிய வகைகள், கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் வந்து போகும். வேலைகளை முடிப்பதில் கவனம் தேவை. அலட்சியம் வேண்டாம். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புக் கேட்டு அலைந்த நிலை மாறி, உங்களை தேடி நல்ல நிறுவனத்திடமிருந்து வாய்ப்புகள் தேடி வரும். அதேசமயம் ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திடும்போது நன்கு படித்து பார்த்து கையெழுத்து போடுவது நல்லது.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நெடுநாள் கனவை நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்: பழநி மலை முருகனை வழிபடுங்கள். சாலைப் பணி செய்பவர்களுக்கு எந்த வழியிலாவது உதவுங்கள். நெல்லி மரக்கன்று நட்டு பராமரியுங்கள். நினைத்தது நிறைவேறும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x