Last Updated : 08 Apr, 2025 05:05 PM

 

Published : 08 Apr 2025 05:05 PM
Last Updated : 08 Apr 2025 05:05 PM

ரிஷபம் ராசிக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2025

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்கள்: தெளிவான பேச்சும் நிறைந்த செயல்திறனும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் தேவையான உதவிகளைச் செய்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அதை உங்களின் முன்கோப பேச்சுகளால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். அரசு வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். மற்றபடி குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். குறிக்கோளை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள்.

பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எதிர்பாராத பல நன்மைகள் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.உங்கள் நிர்வாகத் திறமை கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். உங்கள் ஆத்ம சக்தியால் மனதைக் கட்டுப்படுத்தும் மறைமுகக் கலைகளில் தேர்ச்சிப் பெறுவீர்கள். நஷ்டம் வரும் என்று நினைக்கும் விஷயங்களில் ஈடுபட மாட்டீர்கள். நண்பர்களின் பொறாமைகளுக்கும் அலட்சியங்களுக்கும் ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம்.

பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செயல்களில் அலட்சியங்கள் இருந்தாலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலகட்டமாக இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகுபடுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.

அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ஆனாலும் ஒப்பந்தங்களை முடித்து நற்பெயரை எடுப்பர். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவர். செயல்களைச் சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும். செயல்களில் முழுத்திறமையையும் பயன்படுத்துங்கள்.

பெண்மணிகளை குடும்பத்தினர் மதிப்புடனும் கவுரவத்துடனும் நடத்துவர். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ற சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்படும். மற்றவர்களின் ஆசைவார்த்தைகளில் மயங்க வேண்டாம்.

மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன்பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம்.

ரோகினி: இந்த ஆண்டு சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில்நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.

மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் பயன்தருவதாக இருக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x