Published : 28 Mar 2025 05:47 PM
Last Updated : 28 Mar 2025 05:47 PM
சனிபகவான் பெயர் சொன்னாலே எல்லோருக்கும் ஒரு படபடப்பு வரும். நமக்கு நல்லது சொல்வாரா, கெட்டது சொல்வாரான்னு ஒரு பயம் வரும். சோதிக்க ஆரம்பித்தால் நடுத்தெருவிலேயே நிற்க வைத்து விடுவார். யோகத்தை கொடுக்கணும்னு நினைத்துவிட்டால் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டாத குறையா குபேரனாக்கிட்டு போய் விடுவார்.
ஜாதக அலங்காரம், பலதீபிகை உள்ளிட்ட பல ஜோதிட நூல்கள் சனி பகவானை போற்றிக் கொண்டாடுகின்றன. தொழிலாளியாக இருந்து முதலாளியாக ஆக்குபவரும் இவரே. சகிப்புத்தன்மை, விடாமுயற்சியை தருபவரும் இவர்தான். நிலக்கரி சுரங்கம், கல்குவாரி, மிகப் பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், கனரக வாகனங்கள், இவற்றுக்கெல்லாம் அதிபதி இவர்தான். தனிமையில் ஒருவர் இனிமை காண்கிறார் என்றால் அவர் சனி பகவானின் ஆளுமையில் உள்ளார் என அர்த்தம். தொழிலாளர்களுக்கு உழைப்பாளர்களுக்கு நியாயம் கேட்டு உண்ணாவிரதம், ஊர்வலத்துக்கு எல்லாம் தலைமை தாங்குகிறார் என்றால் அவர் சனிபகவானின் ஆதிக்கத்தில் உள்ளார் என அர்த்தம்.
இப்படி பல அற்புதங்களுக்கு சொந்தக்காரரான சனி பகவான் 29.03.2025 சனிக்கிழமை இரவு 9 மணி 44 நிமிடத்துக்கு கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நிகழும் குரோதி வருடம், பங்குனி மாதம் 15-ம் தேதி, சுக்லபட்ச பிரதமை திதி, ரேவதி நட்சத்திரம், பிராமியம் நாம யோகம், கிம்ஸ்துக்கினம் நாம கரணத்தில், நேத்திரம், ஜீவன் இல்லாத பிரபலாரிஷ்ட யோகத்தில் குரு பகவான் வீடான மீனத்தில் வந்து அமர்கிறார். | ராசி வாரியாக சனிப்பெயர்ச்சி பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி |துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
கடந்த இரண்டரை வருட காலமாக ஸ்திர வீடான கும்பம் ராசியில் அமர்ந்து எல்லோரையும் சிரமப்படுத்தி, சிக்கலில் சிக்க வைத்தார் சனி பகவான். கால புருஷ தத்துவப்படி இதுவரை பதினோராம் இடத்தில் அமர்ந்து சிலருக்கு யோகங்களையும் கொடுத்தார். இப்போது சனி பகவான் குரு பகவானின் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் சுபிட்சம் உண்டாகும். வங்கிகளில் பணம் எடுப்பதற்கு புதிய சட்டங்கள் வரும். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஓடை மற்றும் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளை ஒட்டிக் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் தகர்க்கப்படும்.
விளைநிலங்களை பாதுகாக்க புது சட்டங்கள் நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு அஷ்டமத்துச் சனி விலகுவதால் பொருளாதாரத்தில் நம்நாடு முன்னேறும். தொழில் வளரும். தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகப் புதையல்கள் கண்டறியப்படும். வான் வெளியில் நவீன செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைவிட நம் நாடு விண்வெளி ஆய்வில் முன்னேறும். நெட்வொர்க் சேவை முன்பைவிட மேலும் அதிகரிக்கும். அதிநவீன ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கும்.
நீதித்துறையில் தவறு செய்யும் நீதிபதிகள் தண்டிக்கப்படுவார்கள். காவல்துறை மற்றும் ராணுவத்துறையில் இருக்கும் நாட்டுக்கு ஆபத்தான உளவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். வழிபாட்டுத் தலங்கள் எழுப்ப புதிய கட்டுப்பாடுகள் வரும். பாரம்பரியத் தொழில்கள் அதிக லாபம் தரும். மத்திய, மாநில அரசுகளில் வரிவிதிப்பு குறையும். | ராசி வாரியாக சனிப்பெயர்ச்சி பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி |துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அதிகம் உருவாகும். ஒரு பக்கம் வறுமையும், மறுபக்கம் செல்வச் செழிப்பும் இருக்கும். கடல்களில் கப்பல்கள் மோதிக்கொள்ளும். எரிவாயு ரசாயனங்கள், பெட்ரோல், டீசல் கடலில் கலக்கும். மீன்களின் உற்பத்தி குறையும். பவழப் பாறைகள் மற்றும் அரிதான மீன் இனங்கள் அழியும். டால்பின் மீன்களை புதிய நோய்கள் தாக்கும்.
கட்டுமானப் பொருட்களான கம்பி, சிமெண்ட், செங்கல், ஜல்லி விலை உயரும். வீடுகளின் விலை உயர்வதுடன் வாடகையும் அதிக மாகும். கிராமங்கள் வரைக்கும் வெளிமாநில தொழிலாளிகள் கை ஓங்கும். பட்டியல் இனத்தவர், கிறித்தவ, இஸ்லாம், பார்சி வகையினருக்கு அரசு புது சலுகைகளை வழங்கும். தங்கத்துக்கு உரிய குரு பகவானின் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் தங்கக் கட்டிகளை போட்டிப் போட்டு வாங்கி வைக்கும். அதனால் தங்கம் விலை மேலும் உயரும்.
சனி பகவான் ரிஷபத்தைப் பார்ப்பதால் சினிமாத்துறையில் புதியவர்கள் சாதிப்பார்கள். குறைந்த பட்ஜெட் படங்கள் வெற்றியடையும். மூத்த கலைஞர்கள், பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள் பாதிப்படைவார்கள். கேன்சர் மற்றும் நீரிழிவு நோய்க்கு புது மருந்துகள் சந்தைக்கு வரும். முகம், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும். மாடுகளை புதிய நோய்கள் தாக்கும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் கலவரம் வரலாம். மக்கள் புனைந்து பேசுவார்கள். வதந்திகள் வேகமாக பரவும். | ராசி வாரியாக சனிப்பெயர்ச்சி பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி |துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
கன்னி ராசியை சனிபகவான் பார்ப்பதால் பாலியல் சம்பந்தப்பட்ட படிப்பு, பள்ளிக் கூடங்களில் கட்டாயமாகும். ஆசிரியர்களுக்கு மரியாதை குறையும். நுழைவுத் தேர்வுகள் கடுமையாகும். இடைநிற்றல் மாணவர்கள் அதிகமாவார்கள். அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் போராட்டம் அதிகரிக்கும். ஆசிரியர்களை கட்டுப்படுத்த புது சட்டங்கள் வரும். உறைவிடப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் புதியன உருவாகும்.
கிராமங்கள் தனித்தன்மையை இழந்து சனிபகவான் தனுசை பார்ப்பதால் மக்களிடையே வருமானம் குறையும். வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நிறைய சொத்துகள், நகைகள் ஏலத்துக்கு வரும். தவறு செய்த வங்கி அதிகாரிகள் பிடிபடுவர். கடத்தல் தங்கத்தால் அரசு கஜானா நிரம்பும். போதை மருந்துகளை அழிக்க சட்டம் கடுமையாகும். மக்களிடையே சேமிப்பு குறையும். குடும்பங்களில் தந்தை - மகன் உறவில் விரிசல்கள் வரும். முதியோர் வேலைகளை இழந்து இளைஞர்களின் கை ஓங்கும். சாலை விபத்துகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கை தேவை.
மீனச்சனி மக்களிடையே தடுமாற்றத்தையும், குழப்பங்களையும் தந்தாலும் மறுபக்கம், திட்டமிடுதல் மூலம் வெற்றி பெறச் செய்யும். | ராசி வாரியாக சனிப்பெயர்ச்சி பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி |துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment