Last Updated : 16 Mar, 2025 02:53 PM

 

Published : 16 Mar 2025 02:53 PM
Last Updated : 16 Mar 2025 02:53 PM

விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக!

29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

விருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் ராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது.

கிரகநிலை: இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார்.
மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராக சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கை அன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும்.

உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச் செய்வார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இது நாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும்.

குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும்.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழிவகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சகமாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அநாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.

விசாகம் 4ம் பாதம்: புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அனுஷம்: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை: உடல்நலக்கோளாறு நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: முடிந்த போதெல்லாம் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமாவது துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். ஸ்ரீதுர்கா சுக்தம் சொல்வது நன்மையைத் தரும். செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில் படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும் | சனி பகவானின் பார்வைகள்:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x