Last Updated : 15 Mar, 2025 06:53 PM

 

Published : 15 Mar 2025 06:53 PM
Last Updated : 15 Mar 2025 06:53 PM

சிம்மம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக!

29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடும் சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றிக் கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை: இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப்பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மனஅழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சலசலப்பாக இருந்தாலும் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சில நாட்களாக இழுபறியாக இருந்த உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேச வேண்டும். உங்களைப் பற்றி புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகுவதே நல்லது.

கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். எந்த வேலையை எடுத்தாலும் உறுதியான எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம்.

அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் மனவலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பதே சிறந்தது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. ஆனாலும் சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் காலதாமதம் ஏற்படலாம். உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும் கூட உண்டாகலாம். ஆனால் இவற்றை மீறி சனி கவுரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.

வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

மகம்: உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

பூரம்: பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்: பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை. கெட்டகனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும். திரியம்பகம் என்று ஆரம்பிக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும். வில்வ இலைகளை சிவனுக்கு சாத்திவர தீமைகள் அகலும் | சனி பகவானின் பார்வைகள்:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x