Published : 27 Dec 2024 06:45 PM
Last Updated : 27 Dec 2024 06:45 PM
2025-ம் ஆண்டு, நிகழும் குரோதி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி புதன்கிழமை சுக்ல பட்சத்து பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம், வியாகாதம் நாம யோகம், பவம் நாமகரணத்தில் கன்னி லக்னத்தில், சித்தயோகத்தில், நேத்திரம், ஜீவனம் மறைந்திருக்க பஞ்ச பட்சியில் கோழி வலுவிழந்திருக்கும் நேரத்தில் (01.01.2025) பிறக்கிறது. கர்மவினை கிரகம் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருந்த 2024 (2+0+2+4=8)ம் ஆண்டு பலவிதமான இழப்புகளையும், ஏமாற்றங் களையும், இயற்கை சீற்றங்கள் மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகளையும் தந்த தோடு மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தந்து போதை பாதை சென்று வாழ்விழந்த இளைஞர்களையும் அதிகரித்தது.
ஆனால் இனிவரும் 2025-ம் ஆண்டு (2+0+2+5=9) மக்களிடையே சுய ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் அள்ளித் தரும். வேலை வாய்ப்பு பெருகும். செவ்வாயின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சட்டம், ஒழுங்கு சீராகும். காவல் துறை, ராணுவத்தினரின் கை ஓங்கும். தீவிரவாதிகள் ஒடுங்குவர். பல குழப்பங்களில் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வர். பூமி விலை உயரும். காடுகள் செழிப்படையும்.
லக்னத்தின் மீது அமர்ந்திருக்க குருபகவான் பார்ப்பதால் ஆன்மிகம், தெய்வீகம் வளரும். சந்திரனுக்கு பத்தில் கேது இருப்பதால் கோயில் கும்பாபிஷேகம் அதிகம் நடைபெறும். கோயில் சொத்துகள் மீட்டெடுக்கப்படும். மலைக் கோயில்களுக்கு பாதை அமைக்கப்படும். லாபாதிபதி சந்திரன் நான்கில் இருப்பதால் சாலை வசதி பெருகும். ஆறுவழிப் பாதை, எட்டுவழிப் பாதை புதியன வரும்.
சுக்கிரன் சனிபகவான் வீட்டில் இருப்ப தால் திரவநிலை எரிபொருள்களான பெட்ரோல், டீசல் வரத்து குறையும். சமையல் எரிவாயு தட்டுப்பாடும் வரும். நிலக்கரி சுரங்கங்கள் மூழ்கும். 7-ல் ராகு இருப்பதால் முகமதிய நாடுகளால் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். மூன்று மற்றும் எட்டாம் வீட்டுக்குரிய கிரகமாகிய செவ்வாய் நீசமாகி 11-ல் நிற்பதால் அச்சுத்துறை நலிவடையும்.
தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்த பாடுபட வேண்டி யிருக்கும். சந்திரனுக்கு 8-ல் செவ்வாய் இருப்பதால் வெடி விபத்துகள் அதிகரிக்கும். கடற்கரை நகரங்களில் கலவரங்கள் வெடிக்கும். மேற்கு வங்கம் (கடகம் ராசி), ஒடிசா மாநிலங்களில் அரசியல் சூழ்ச்சிகள் அதிகரிக்கும். மணிப்பூர் (கும்பம்) மாநிலத்தில் மே மாதத்திலிருந்து அமைதி நிலவும்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பெருகும். பால் உற்பத்தி அதிகரிக்கும். கரும்பு சாகுபடி வரத்து அதிகரிக்கும். கிளி, மயில் பட்சிகளின் எண்ணிக்கை கூடும். வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கணிசமாக உயரும். பேட்டரி கார், சோலார் பயன்பாடு அதிகரிக்கும். செவ்வாய் நீசமானதாலும், லக்னத்துக்கு 7-ல் நிற்கும் ராகுவாலும் வாகன விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த சட்டம் கடுமையாக்கப்படும்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை சுக்கிரன் மீனத்தில் தொடர்வதால் சினிமா மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். சில பிரபலங்களின் திரை மறைவுகள் அம்பலமாகும். தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும்.
புதன் 3-ல் நிற்பதால் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் மற்றும் ஏ.ஐ. துறைகள் வளர்ச்சி அடையும். சந்திரனுக்கு 6-ல் குரு நிற்பதால் ஷேர் மார்க்கெட் ஏறி இறங்கும். தங்கம் விலை உயரும்.
சூரியன் சந்திரன் சேர்ந்திருப்பதாலும், தானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும். மழைப் பொழிவு திருப்திகரமாக இருக்கும். செஸ், ஹாக்கி, டென்னிஸ், பேட்மிட்டன் போட்டிகளில் இந்தியா சாதிக்கும். உலகியல் ஜோதிடப்படி ரஷ்யா (மேஷம்), உக்ரைன் (மகரம்) இடையேயான போர் ஜுலை மத்தியில் முடிவுக்கு வரும். 2025-ம் ஆண்டு மக்களிடையே மன உறுதியை தருவதுடன் எல்லாவற்றுக்கும் மாற்று வழியையும் தேட வைக்கும்.
உங்கள் ராசிக்கான புத்தாண்டு பலன்கள் இங்கே > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT