Published : 27 Dec 2024 06:22 PM
Last Updated : 27 Dec 2024 06:22 PM
கும்பம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள்! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங் காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்சினை களை பெரிதுப்படுத்திக் கொண்டி ருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப் பாருங்கள்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5-ம் வீட்டிலேயே வந்தமர்வதால் மன இறுக்கங்கள் நீங்கும். பணப் பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
தந்தைவழி சொத்துகள் கிடைக்கும். அவர்வழி உறவினர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். கிராமத்து கோயில்களின் திருப்பணிக்கு உதவி செய்யவும். பழமையான கோயில்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகம், யோகா உள்ளிட்டவற்றில் நாட்டம் அதிகரிக்கும். தடைபட்ட அயல்நாட்டு பணி கிடைக்க வாய்ப்பு உண்டு. மனக் கவலைகளை போக்கி, முன்னேற்றத்துக்கான வழி களை ஆராய்ந்து, அதுதொடர்பாக செயல்படவும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். விட்டுக் கொடுப்பதால் நன்மை உண்டு. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். 29.03.2025 முதல் சனிபகவான் 2-ம் வீட்டில் சென்று பாதச்சனியாக அமர்வதால் இக்காலகட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வியாபாரிகளே! பொறுப்பாக செயல்பட்டு லாபத்தை பெருக்கப் பாருங்கள். பக்கத்துக் கடைக்காரரை பார்த்து பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிஷன், அரிசி - எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக, பல யுக்திகளைக் கையாள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.
இந்த 2025-ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்ட கால கனவுகள் அனைத்தையும் நனவாக்குவதாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை சென்று வணங்குங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவுங்கள். முடிந்தால் பழமையான கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். தனம் சேரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT