Published : 27 Dec 2024 05:09 PM
Last Updated : 27 Dec 2024 05:09 PM
விருச்சிகம் ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்! உங்களுக்கு 2-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப் பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும்.
வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடி கள், இடமாற்றங்கள் வந்து செல்லும். ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 13.05.2025 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப் பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மை யில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால் 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைப் பற்றி வதந்தி வர வாய்ப்பு உண்டு.
திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக்குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
இந்தாண்டின் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் சுகஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர் வதால் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். கெட்ட பழக்க வழக்கங் களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.
29.03.2025 முதல் சனிபகவான் 5-ம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீக சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும். கர்ப்பிணி கள் எப்போதும் எதிலும் கவனமாக இருக்கவும். எடை மிகுந்த பொருட்களை தூக்காதீர்கள்.
வியாபாரிகளே! பழைய வாடிக்கை யாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து பெரிய முதலீடுகளை போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங் களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பார்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கணினி துறையினரே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
இந்த 2025-ம் ஆண்டு எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றும் விதமாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். நாமக்கல் சென்று தரிசியுங்கள். வியாழக்கிழமையில் மாருதிக் கவசம் படியுங்கள். கட்டிட வேலை செய்யும் பெண்களுக்கு உணவு, உடை கொடுங்கள். பலா மரக்கன்று நடுங்கள். நற்பலன்கள் பெருகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT