Published : 26 Dec 2024 06:33 PM
Last Updated : 26 Dec 2024 06:33 PM
சிம்மம் ஊராரின் தூற்றல்களுக்கு செவி சாய்க்காமல் வாழ்வின் உயரத்தை மட்டும் நோக்கி செல்லும் குணமுடைய வர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணிக்கு இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 2--ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். அதிகம் பேச வேண்டாம். உடல்நலனை கவனித்துக் கொள்ளவும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர். மறைமுக அவமானம் வந்து நீங்கும். 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
இந்தாண்டு தொடக்கத்தில் 7-ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் கணவன் -மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். உடம்பில் சத்துக்கள் குறையும். எனவே சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். 29.03.2025 முதல் சனிபகவான் 8-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.
வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்து பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த லாபத்தை குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். பெரிய தொகையை யாருக்கும் கடனாக தர வேண்டாம். கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகை களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துப்படியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. வருட பிற்பகுதியில் பதவி உயரும்.
ஆகமொத்தம் இந்த 2025-ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும், தன் கையே தனக்கு உதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: அண்ணாமலையாரை அமாவாசை திதியில் வணங்கி, கிரிவலம் வாருங்கள். அருணாசலப் புராணம் படியுங்கள். வன்னி மரக்கன்று நடுங்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். சங்கடம் தீரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT