Last Updated : 26 Dec, 2024 03:51 PM

 

Published : 26 Dec 2024 03:51 PM
Last Updated : 26 Dec 2024 03:51 PM

ரிஷபம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, சுறுசுறுப்பு..!

ரிஷபம் ஐந்தில் உழைக்கும் வாழ்க்கை தான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை முழுமையாக நம்பி அதற்கேற்ப உழைப்பவர்களே! உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ஆனால் 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி பணிச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்து செல்லும்.

14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர். கூடாப் பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்து உறவாடுவர். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.

வருடம் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். ஆனால் 29.03.2025 முதல் சனிபகவான் 11-ம் வீட்டில் சென்று அமர்வதால் அதுமுதல் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது.

வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாக பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவர். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து, எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! கிடைக்க வேண்டிய பதவியுயர்வு இனி கிடைக்கும். ஊதியமும் உயரும். அலுவலகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து அனைவரையும் வியக்க வைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். கணினி துறையினரே! அந்நிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும்.

ஆகமொத்தம் இந்த ஆண்டு சின்னச் சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், செல்வாக்கு, கவுரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்கும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்து முருகனை சஷ்டி திதிகளில் வணங்குங்கள். கந்தர் சஷ்டி கவசம் படியுங்கள். மாமரக்கன்று நடுங்கள். ஏழைப் பெண்ணின் கல்யாணத்துக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். நல்ல பலன் மேலும் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x