Published : 22 Apr 2024 03:23 PM
Last Updated : 22 Apr 2024 03:23 PM
பரந்து விரிந்த பொது அறிவு உள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களை பலவிதப் பிரச்சினைகளாலும் கசக்கிப் பிழிந்தெடுத்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை 2-ம் வீட்டில் நுழைக்கிறார். இனி சோர்வு, களைப்பு நீங்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்சினையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவர் தன் தவறை உணருவார். உங்களுக்குள் கலகத்தை உண்டாக்கியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் வேலைக் கிடைக்கும். வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் வழக்குகள் சாதகமாகும்.
எதிர்பாராத வகையில் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். மாமனார், மாமியாரின் எதிர்ப்பு நீங்கும். மச்சினருக்கு திருமணம் முடியும். குரு 8- ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பாராமுகம் நீங்கும். சமூக அந்தஸ்து கூடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு.
உங்களின் ஸ்டேட்டஸ் ஒரு படி உயரும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புது வழி பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும்.
13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, நெஞ்சு வலியெல்லாம் குறையும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீடு கட்ட தாமதமான ப்ளான் அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான தூக்கம் வரும்.
20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்கள் ராசிநாதானான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிதாக வீட்டு, மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
வியாபாரம் தழைக்கும். பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் இனி தடையில்லாமல் வந்து சேரும். இந்த குரு மாற்றம் பதுங்கிக் கிடந்த உங்களை பிரபலபடுத்துவதாகவும், வசதி, வாய்ப்புகளை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: அறந்தாங்கியிலிருந்து 42 கிமீ தொலைவில் உள்ள திருப்புனவாசலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு படிக்க உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.
(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...