Last Updated : 27 Feb, 2023 04:39 PM

 

Published : 27 Feb 2023 04:39 PM
Last Updated : 27 Feb 2023 04:39 PM

அஷ்டம சனியை கண்டு பயப்பட வேண்டாம்! 

ஜெனன ராசியை கடக ராசியாக கொண்டவர்கள் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1,2,3,4 ம், ஆயில்யம் 1,2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்? அஷ்டம சனியைக் கண்டு பயப்பட வேண்டாம்.

அஷ்டம சனி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் ஏழரை சனியை விட மோசமான பலன்களை தரவல்லது. ஏழரை சனி என்பது, 3 பிரிவாக பிரித்து, விரய சனி, ஜென்ம சனி, குடும்ப சனி ஆக 2 ½ வருடங்களாக, ஏழரை வருடங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பை தரக் கூடியது. ஆனால் ஏழரை வருட பாதிப்புகளையும், 2 ½ வருடத்தில் கொடுக்கக்கூடியதுதான் அஷ்டம சனி. அப்படி என்னென்ன பாதிப்புகள் நிகழக் கூடும்.

பாரப்பா அஷ்டம் சனியின்
பலனதனை சொல்லக் கேளு
காசு பணம் நட்டமாகும்
கைத் தொழிலும் கெட்டு விடும்
கடன்காரர் மொய்த்து நிற்பார்.
கயவன் என்ற பெயரும் வரும்
கட்டியவள் கலகம் செய்வாள்
கடிமனையில் போர்க்களமாம்
கஷ்டமோ கஷ்டமப்பா
கால்நடையாய் அலைவான் மைந்தன்
பெற்றோரும் பகையாவார்
பிள்ளைகளும் சொற்கேளார்
உற்ற நண்பர் பகையாவார்,
உறவுகாரரும் பகையாவார்
ஊண் உறக்கம் கெட்டுவிடும்
உடல் நோயோ வதைவதைக்கும்
சீறிவரும் செந்நாக கண்டம்
சிறைபயமும் உண்டாகும் பார்
வீட்டினிலே உயிர்சேதம்
விசனத்துக்கோ பஞ்சமில்லை
வித்தைகளும் பலிக்காது
விவேகியும் மூடனாவான்
விதைத்த விதை முளைக்காது
விளைந்த பயிர் தேறாது
வியாபாரம் நட்டமாகி
வேற்றூருக்கு ஓட்டிவிடும்
அங்கேயும் பாரப்பா
அவதூறு வந்து சேரும்
அஷ்டலக்ஷ்மியும் மறைந்திடுவாள்
கண்டங்களும் தோன்றுமப்பா
அனல்பட்ட புழு போல்
அலறிடுவார் ஜாதகரே…

இத்தனை கஷ்டங்களும் அஷ்டம சனி, ஏழரை சனி நடந்தால் ஜாதகருக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், பிறக்கும்போது கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, இன்று கடக ராசி என்பது கிடையாது.

பிறப்பு ராசி கடக ராசியாக செல்பவர்களுக்கு, ஜென்ம நட்சத்திரம் பூசம் என்றால், சுக்ர திசை நடப்பு திசையாக இருக்கும் பட்சத்தில், சிம்ம ராசி அட்சய ராசியாக செயல்படும். அவர்கள், சுக்ரனின் பெயர்ச்சியை கவனித்தால் போதுமானது. சனி பெயர்ச்சி பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

தசா புத்திகள் மாறும் போது, ராசிகளும் அதனுடைய குணங்களும் தன்மைகளும் மாறுபடும். உதாரணமாக, சூரிய திசை நடப்பில் இருந்தால், சூரியனின் நகர்வை மட்டும் பார்த்தால் போதுமானது. அட்சய ராசியின் தன்மைகளைப்பற்றி அறிய, அட்சய லக்ன பத்ததி நூல் 2-ம் பாகத்தை படிக்கவும்.

உதாரணமாக, பிறப்பு ராசி மிதுன ராசியாக, மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை 1,2,3,4 ம் பாதம், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, இன்று கடக ராசி அட்சய ராசியாக பூச நட்சத்திரத்தின், சனி மகா திசை நடப்பவர்களுக்கு, அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அட்சய லக்னம்: முதலில் அட்சய லக்னம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். பிறப்பு லக்னத்திலிருந்து, வயதின் லக்னத்தை கொண்டு பலன் பார்க்கக் கூடிய ஜோதிட முறையை அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. ஒருவருடைய பிறப்பின் தோற்றம் மாற மாற, எப்படி அவர்களுடைய தேவைகளும், குணங்களும் மாறுபடுகிறதோ, அதே போல் வயது வளர வளர, லக்னமும் வளரும் என்பதே அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்.

அட்சய ராசி என்பது, பிறப்பு நட்சத்திரத்தின் தசா புத்தியின் நகர்வை கொண்டு, தற்சமயம் நடக்கக்கூடிய தசாயின் ராசியே அட்சய ராசியாகும்.

உதாரணமாக, புனர்பூசம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, குரு மகா திசை பிறப்பு தசையாக இருக்கும். தசா புத்தி இருப்பு, குரு மகா திசையின் மொத்த வருடம் 16-ல், புனர்பூசம் 3-ம் பாதத்தின் இருப்பு தோராயமாக, 8 வருடம் முதல் 12 வருடம் வரை மட்டுமே இருக்கும். தற்போது ஜாதகருக்கு 16 வயது என்று வைத்துக் கொண்டால், சனி தசை நடக்கும். இப்போது அந்த ஜாதகருக்கு அஷ்டம சனியின் தாக்கம் உண்டு. இந்த வயதிற்குரிய பலனாக, படிப்பில் கவனமின்மை, சரியில்லாத நண்பர்களின் தொடர்புகள், கவன சிதறல்கள், தேவையற்ற விஷயத்தில் தலையிட்டு கெட்ட பெயர்களை உருவாக்கிக் கொள்வார்கள், பெற்றோர்களின் சொல் பேச்சு கேளாமை, வீட்டை விட்டு வெறியேறுவது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்.

இதுபோல், ஒவ்வொருவருக்கும் பலன் பார்க்க வேண்டும். நடப்பில் அட்சய ராசி கடக ராசியாக உள்ளவர்கள் மட்டுமே, அஷ்டம சனியால் பாதிக்கப்படுவார்கள். அதே போல், நடப்பில் அட்சய ராசி, மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்பவர்களுக்கு மட்டுமே ஏழரை சனியின் பாதிப்பும் ஏற்படும். அவர்களே, கவனமாக இருக்கக் கூடியவர்கள். நடப்பு அட்சய ராசி, விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் செல்பவர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு ஏற்படும். பிறப்பு ராசி மகர ராசியாகவோ, கும்ப ராசியாகவோ, மீன ராசியாகவோ இருப்பவர்கள் ஏழரை சனியை கண்டு பயப்படவேண்டாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரன் தசையான சனி திசை நடப்பவர்கள் மட்டுமே, தற்போதைய சனி பெயர்ச்சியால் மாற்றங்களை சந்திப்பார்கள். இவர்கள் மட்டும் சனி பெயர்ச்சியின் தன்மையான ஜீவனம், பதவி உயர்வு, வேலையாட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் முதலீடு செய்பவர்கள், எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள், கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால் மட்டுமே போதுமானது. முதியவர்களாக இருப்பின் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். மற்ற தசை நடப்பவர்கள், சனி பெயர்ச்சியை கண்டு பயப்படவேண்டாம். ஏழரை சனியோ, அஷ்டம சனியோ, அர்த்தாஷ்டம சனியோ, கண்ட சனியோ அவர்களை பாதிக்காது. எந்த வயதினாராலும், தற்போது சனி திசை நடந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

சனி பகவானின் அனுக்கிரஹம் இல்லாமல், ஒருவர் தொழில், வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற முடியாது. அதனால், சனி பகவானின் அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம்.

இந்தக் கட்டுரையை படிக்கும்போது, ஜோதிடம் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இருந்தால், அவர்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கச் சொல்லி கேட்கவும்.

அட்சய லக்னம், அட்சய ராசி என்பது உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாலமாக அமையும் என்பது நிச்சயம்.

சூர்ய புத்ராய போற்றி !

சனீஸ்வராய போற்றி !!

அட்சய ராசி வாழ்க வளர்கவே!

- முனைவர் சி.பொதுவுடைமூர்த்தி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x