Published : 19 Jan 2022 09:59 AM
Last Updated : 19 Jan 2022 09:59 AM
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்றதைப் போன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விட்டுவிடாதீர்கள் என கூட்டணிக் கட்சியினரிடம் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சியினரின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
அப்போது, ‘‘கேட்கும் இடங்களைவிட எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. அப்படி ஒதுக்கும் இடங்களில் திமுகவில் இருந்து யாரும் சுயேச்சையாக நிற்காமல், எங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கூட்டணிக் கட்சியினர் வலியுறுத்தினர்.
அதன்பின் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பேசும்போது, ‘‘கட்சித் தலைவர் அறிவுறுத்தல்படியே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் யாராவது சுயேச்சையாக நின்றால், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்’’ என்றனர்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியபோது, ‘‘கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் மாற்றி அதிமுகவுக்கு வாக்களித்ததால் பெரிய சங்கடத்துக்கு ஆளானேன். அதேபோல, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சியினர் என்னை மீண்டும் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கி விடாதீர்கள்’’ என்றார்.
அப்போது, ‘‘நாங்கள் மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் ஒருவர் அதிமுகவுக்கு வாக்களித்தார். அதை மட்டும் திமுக பெரிதுபடுத்துவதில்லை’’ என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குறுக்கிட்டு பேசினர். இதனால், காங்கிரஸ் மற்றும் திமுகவினர்களுக்கு இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணிக் கட்சியினர் கொடுத்துள்ள விருப்பப்பட்டியல் குறித்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு சீட் பங்கீடு செய்யப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் சமாதானம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT