Published : 04 Aug 2021 04:37 PM
Last Updated : 04 Aug 2021 04:37 PM
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சென்ற வாரம் சித்திரை நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் ஸ்வாதி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாக காணலாம்.
சுவாதி
சுவாதி என்பது வான மண்டலத்தில் துலாம் ராசி மண்டலத்தில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் பார்க்கும் போது, இலைகள் உதிர்ந்த மரம் போலவும், இலைகள் உதிர்ந்த கிளைகள் மரம், தேன்கூடு, தீ ஜுவாலை போலவும், சிங்கத்தின் பிடரி போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக சிங்கத்தின் பிடரி, தேன்கூடு மற்றும் யாகத் தீ அல்லது எரியும் நெருப்பைச் சொல்லலாம்.
இதன் அதி தேவதை வாயு ஆகும். இது பழுப்பு கலந்த செந்தூர நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இதன் அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு ராகு திசையே முதலில் தொடங்கும்.
இந்த ராசியில் சனி பலம் பெறுகிறது மற்றும் சூரியன் பலம் இழக்கிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சூரியன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்தமாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுவாதி என்றால் தூய்மை. இருப்பதிலேயே தூய்மையானது நெருப்பு மட்டுமே. மனிதனால் நெருப்பை மட்டும் அசுத்தப்படுத்த இயலாது. ஆகவே புனிதமானதும் அதே சமயம் தூய்மையானதும் நெருப்பேயாகும்!
சுவாதியின் அதி தேவதை வாயு. நெருப்பை வளர்ப்பது வாயுவின் வேலை. ஆகவே தான் காற்றில் வளர்க்கும் வேள்வித் தீயை சுவாதியுடன் ஒப்பீடு செய்கிறோம். சுவாதியில் அவதாரம் செய்த நரசிம்ம பெருமாளின் மஞ்சள் கலந்த செந்நிறப் பிடரி நெருப்பில் கொழுந்து விட்டு எரியும் தீயை குறிப்பது.
மேலும் தீ ஜுவாலையின் வண்ணமான செந்நிறமே அதாவது செந்தூர நிறமே சுவாதி நிறம். ஆகவே தான் வாயு புத்திரனான அனுமனுக்கு செந்தூரம் பயன்படுத்துகின்றனர் ஆகவே ராகுவின் நட்சத்திரமான சுவாதி, திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திர நபர்கள் தினமும் நெற்றியில் செந்தூரத்தை அணிவது மிகவும் நன்மைகளைத் தரும்.
சுவாதியும் ஹனுமானும்
சுவாதி நட்சத்திரம் பவள (சிவப்பு) நிறம் கொண்டது. ஸ்வாதி என்றால் தடை இன்றி நகருவது என்று சமஸ்கிருதத்தில் பொருள். மேலும் அப்பழுக்கற்ற நட்சத்திரம் என்ற அர்த்தமும் உண்டு. ஸ்வேதம் என்றால் தூய்மையான என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம். சுவாதி என்றால் தூய்மையான நட்சத்திரம் என்று பொருள்.
இந்த நட்சத்திரம் பார்க்கும்போது அந்தரத்தில் தாவிக் கொண்டிருக்கும் குரங்கைப் போல காட்சியளிக்கும். பால்வெளியில் நகருவதைப் போல காட்சியளிக்கும் இந்த நட்சத்திரம் வால்மீகியால் கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமானுடன் ஒப்பிடப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாகவே ஹனுமானுக்கு செந்தூரம் சாத்தப்படுகிறது.
சுவாதியைப் போல தடையின்றி நகருபவன் ஹனுமான் என்று வால்மீகியால் புகழப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை வாயு. அனுமனும் வாயுபுத்திரன் ஆவார். ஹனுமான் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், சுவாதி நட்சத்திர பண்புகளைக் கொண்டிருக்கிறார்.
தனது உடலை பெரிதாக்கி விரிவுபடுத்தி விஸ்வரூபம் எடுத்து பறந்து செல்கையில் ஹனுமான் சுவாதி நட்சத்திர அதிபதி ராகுவாகவும், ராமரின் காலடியில் தன்னைச் சுருக்கி அமர்ந்திருக்கும் போதும், தியானத்தின் போதும் ஹனுமான் மூல நட்சத்திர அதிபதி கேதுவாகவும் செயல்படுகிறார்.
தேன்கூடு
சுவாதி நட்சத்திர வடிவம் தேன்கூடு ஆகும். சுவாதியில் சூரியன் நீச்சம் அடைகிறது. எனவே அரசாங்க அதிகாரிகள் வீட்டில் தேன்கூடு கட்டினால், அரசாங்க சம்பந்தமான வழக்கு அல்லது அரசாங்க வேலை பாதிப்பு ஏற்படும் அல்லது அரசு சம்பந்தப்பட்ட பலன்கள் கிட்டாது. அதை போலவே சுவாதியில் சனி உச்சம் பெறுவதால், வணிக வளாகம் அல்லது தொழிலதிபர்கள் வீட்டில் தேன்கூடு கட்டுவது சிறப்பானது.
யோகிராம் சுரத்குமார் விசிறி ரகசியம்
கலியுக சித்தர் "யோகிராம் சுரத்குமார்" அவர்களின் ஜென்ம நட்சத்திரம் "ஸ்வாதி". சுவாதி நட்சத்திரத்தின் சம்பத்து நட்சத்திரம் "விசாகம்". விசாகத்தில் வடிவம் "விசிறி", முறம்,தோரணம் மற்றும் குயவன் சக்கரம்.
விசிறி என்ற உபகரணத்தை அடிக்கடி கையாண்டு வந்தார். எனவே இவரின் பெயரே "விசிறி சாமியார்" என்றானது. நட்சத்திர ஜோதிடப்படி இந்த விசிறி இவரது ஆன்மிகத்தில் உச்சம் பெற உதவியது எனலாம்.
எனவே சித்திரை, மிருகசீரிடம், அவிட்டம், கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகி ராம்சுரத்குமாரின் திருநாமம் சொல்ல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறலாம்.
இதுவரை சுவாதி நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி அடுத்த கட்டுரையில் விசாகம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.
- வளரும்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT