Published : 13 May 2021 02:38 PM
Last Updated : 13 May 2021 02:38 PM
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
மிருகசீரிடம் நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் திருவாதிரை நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றியும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரம் வான மண்டலத்தில் வைரம் போலவும், மண்டை ஓடு போலவும், திரிசூலம் போன்ற தோற்றத்திலும் காணப்படும். இதற்கு லத்தீன் மொழியில் ஓரியன் (ORION) என்ற பெயர் உண்டு. திருவாதிரை நட்சத்திரம் வானில் மஞ்சள் சிவப்பு நீலம் நிறத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் காணப்படும்.
இந்த நட்சத்திரம் முழுமையான ஆண் ராசியாகிய மிதுன ராசி, மண்டலத்தில் நடுவில் இருக்கும் நட்சத்திரம். மிதுனத்தில் நான்கு பாதம் காணப்படும். இதற்கு தமிழில் மூதிரை என்ற பெயருண்டு. மேலும் வேறு பரிமாணத்தில் இந்த நட்சத்திர மண்டலத்தை காணும்போது வானத்தில் யாழ் போல தெரியும்.
பகீரத தவம்
திருவாதிரை நட்சத்திர அதிபதி ராகு. திருவாதிரைக்கு அதி தேவதை சிவபெருமான். வானில் நீர்த்துளி போல காணப்படும். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம். பகீரதன் தனது மூதாதையர் ஆன்மாக்கள் முக்தி வேண்டி பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தான். இதற்கு பகீரத தவம் என்றே பெயர் உண்டு!
இந்த தவத்தின் பயனாக பிரம்ம தேவன் பிரசன்னமாகி ஆகாய கங்கையானவள், ஆன்மாக்களுக்கு முக்தி தரவல்லவள் என்று கூறி ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வர சம்மதித்தார். இருப்பினும் அவள் பாய்ந்து வரும் வேகத்தால் பூமியில் கடும் பிரளயம் உண்டாகும் என்று கூறினார். கங்கையின் வேகத்தைத் தாங்கும் சக்தி, சிவபெருமானுக்கே உண்டு என்று அவரை நோக்கி தவம் இருக்கவும் அறிவுறுத்தினார்.
சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும் பகீரதன் உறுதியைக் கண்டு அவனுக்கு உதவ திருவுளம் கொண்டார் சிவனார். இங்கே நீர்த்துளி வடிவான கங்கை திருவாதிரை எனில், அதன் அதிதேவதை சிவ பெருமான் என்பது குறிப்பிடத் தக்கது.
சிவ பெருமான் தனது திரிசடை விரித்து பாய்ந்து வரும் தன் தலை மீது கங்கையைத் தாங்க தயாரானார். பிரம்மனின் உத்தரவுப்படி ஆகாய கங்கை வானில் இருந்து வந்தாள். தனது சிகைக்குள் கங்கையைப் பிடித்து, அதன் வேகத்தைக் குறைத்து பின் தனது சிகையை அவிழ்த்தார் சிவ பெருமான். சிகைக்குள் இருந்து நீர்த் துளியாக வரும் கங்கை அவரது மேனி மீது பரவி பூமிக்கு வந்தடைகிறார். இவ்வாறாக கங்கை திருவாதிரை நீர்த்துளி வடிவத்தில் பூமிக்கு வந்து மக்களின் பாவத்தை போக்கும் புனித நதியாகிறாள்.
கங்கை கொண்டான் தாரை ரகசியம்
ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடித்திருவாதிரை. தனது தந்தையைப் போலவே இவரது நட்சத்திரமும் ராகுவை அதிபதியாக கொண்ட நட்சத்திரம்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று கங்கை பூமிக்கு வந்தார் என்கிறது புராணம். அதனால்தான் திருவாதிரை வடிவம் நீர்த்துளியாகும். சதயம் என்பது பெரிய லிங்கத்தைக் குறிக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராஜேந்திர சோழன், சதய நட்சத்திர வடிவான பெரிய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அந்த லிங்கத்தின் மீது கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிப்பட்டான்.
இந்த திருவாதிரை நட்சத்திர வடிவத்தை யாரெல்லாம் உபயோகம் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திர நண்பர்கள் இந்தப் பெரிய லிங்கத்தை வழிபட, சகல சம்பத்துகளையும் பெற்று வாழ்வார்கள்.
திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திர நண்பர்கள் இந்த பிரமாண்டமான லிங்கத்தை வழிபட, உடல் ஆரோக்யம் பெற்று வாழ்வார்கள்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நண்பர்கள் இப்பெரிய லிங்கத்தை வழிபட, சிக்கலான நேரத்தில் தீர்வு பெறுவார்கள். .
கார்த்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திர நண்பர்கள் இப்பெரிய லிங்கத்தை வழிபட, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள்.
அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நண்பர்கள் இப்பெரிய லிங்கத்தை வழிபட, நீண்டநாள் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். .
சரபேஸ்வரர் உருவ ரகசியம்
சரபேஸ்வரர் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை. அதாவது நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் இருந்து வரும் 19 வது நட்சத்திரம் திருவாதிரை. இது திரி ஜென்ம தாரை ஆகும். எனவே நரசிம்மரின் உக்ரத்தை அடக்கினார் சரபேஸ்வரர்.
பறக்கும் இறக்கைகள் மிருகசீரிட வடிவம். மற்றும் அவரது கையில் தனது சம்பத்து தாரையான விசாக வடிவ கோடாரி மற்றும் பரம மித்ர தாரையான மான்மழு என கையில் வைத்திருக்கிறார். மேலும் ஒரு கையில் தனது சேமதாரையான ஆயில்ய வடிவ பாம்பையும் மற்றும் அனுஜென்ம தாரையான சுவாதி வடிவான கொழுந்துவிட்டு எரியும் தீயை இன்னொரு கையில் வைத்திருக்கிறார்.
எனவே சரபேஸ்வரர் கையில் வைத்திருக்கும் வடிவங்களை திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் பயன்படுத்தலாம்.
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி உடல்நலம் பெறலாம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி வந்தால் சர்வ சம்பத்துகளைப் பெறலாம்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி சர்வ செல்வங்களைப் பெறலாம்.
அஸ்வினி, மூலம், மகம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி தீராத கடன், நோய் மற்றும் தோஷங்களை நீங்கப் பெறலாம்!
- வளரும்
**************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT