Published : 23 Apr 2021 10:13 AM
Last Updated : 23 Apr 2021 10:13 AM

தோஷங்கள்... பரிகாரங்கள்! 2 - செவ்வாய் தோஷம் உண்டா, இல்லையா?

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

‘ தோஷங்கள்.. பரிகாரங்கள்...’ என்ற தொடரின் முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் தங்களின் ஆர்வத்தைத் தெரிவித்திருந்தீர்கள்.

வாழ்வில் அனைத்தும் சரியாக நடப்பது போல் தெரிந்தாலும்.. ஏதாவது ஒரு தடை, தாமதம், கண்ணுக்குத் தெரியாத சிக்கல்கள், பிரச்சினைகள்... ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எப்படி அந்த பிரச்சினையைத் தீர்ப்பது? போன்ற குழப்பங்கள் பலருக்கும் இருக்கும். இவற்றையெல்லாம் அறிந்து உணர்ந்து தெளிந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இங்கே சில சூட்சுமமாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற தோஷங்களைப் பார்க்க இருக்கிறோம்.

இந்த தோஷங்கள் அனைத்தும் எப்படிப்பட்டது? எதனால் ஏற்பட்டது? அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன? அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது? அதற்கான பரிகாரங்கள் என்ன? அதுவும் எளிமையான பரிகாரங்கள் என்ன? என்ற முழுமையான விபரங்களை உங்களுக்கு வழங்க இருக்கிறேன்.

இந்தப் பதிவில் இப்போது நாம் பார்க்க இருப்பது பலரையும் திகைக்க வைக்கின்ற, அல்லது மனதளவில் சோர்வை ஏற்படுத்துகின்ற செவ்வாய் தோஷம்... இது குறித்துப் பார்ப்போம்.

செவ்வாய் தோஷத்தைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். என்றாலும் இந்தத் தொடரில் இன்னும் விரிவாகவே பார்ப்போம்.


ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும்.

மேற்கண்ட ஐந்து இடங்களிலும் அமர்ந்த செவ்வாய் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை முதலில் பார்த்துவிடலாம்.

2ம் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். எனவே, இந்த இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் பணவரவில் தடை தாமதங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நிலை, எதார்த்தமாகப் பேசினாலும் அந்தப் பேச்சிலேயே குற்றம் குறைகள் கண்டுபிடித்து வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படும் சூழல் மற்றும் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் என்பதையெல்லாம் உண்டாக்கும்.

4ம் இடம் இது சுக ஸ்தானம். மேலும் தாய், வீடு, மனை, வாகனம் போன்றவற்றையும் குறிக்கும். இந்த நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால்..... வாழ்வில் முழுமையாக அனுபவிக்க வேண்டிய சுகங்களை அனுபவிக்க முடியாமல் செய்யும்.

திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணை, தாயாருடன் இணக்கமாகச் செல்ல முடியாத நிலையை உண்டாக்கும். வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துகளில் பிரச்சினைகளை உண்டுபண்ணும், வீண் செலவுகளைக் கொண்டுவந்து சேர்க்கும். தேவையற்ற வம்பு வழக்குகள், சிக்கல்கள், விபத்துகள் போன்றவை ஏற்படும்.

7-ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தாம்பத்திய வீரியம் அதிகம் இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் காம சிந்தனைகள் ஏற்படும். அதீத தாம்பத்தியம் ஆபத்தை உண்டாக்கும். மன மற்றும் மண விரிசலையே உண்டுபண்ணும் சூழல் உருவாகும்.

8ம் இடத்தில் செவ்வாய் என்பது மாங்கல்ய ஸ்தானம். மற்றும் ஆயுளை குறிக்கக் கூடியது ஆகும். ஆயுளைக் குறைக்கும் அல்லது ஆயுளை பங்கம் பண்ணும்.

12-ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் என்ன செய்யும்? இந்த 12ம் இடம் அயன, சயன, போக ஸ்தானம் ஆகும். அயனம் என்றால் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லுதல், சயனம் என்றால் தூக்கம். போகம் என்றால் உலக சுக போகங்களை அனுபவித்தல்! பனிரெண்டில் செவ்வாய் இருந்தால்..!? பணி நிமித்தமாக கணவன் மனைவி பிரிந்து இருக்க வேண்டிய நிலை உண்டாகும். சேர்ந்தே இருக்கும் பட்சத்தில் போகங்களை அனுபவிப்பதில்.. அதாவது தாம்பத்தியத்தை அனுபவிப்பதில் இயலாமை அல்லது தாம்பத்தியத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவது, அதனால் ஏற்படும் மன உளைச்சலால் நல்ல உறக்கம் இல்லாமல் போவது, இவற்றின் காரணமாக பலவித ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுவது போன்றவை உண்டாகும்.

இதில் 7 மற்றும் 8ம் இடத்து செவ்வாய், கடுமையான தோஷத்தை உண்டாக்கும் என்றும், மற்ற 2, 4, 12ம் இடத்து செவ்வாய் மிதமான தோஷத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன (இதில் முக்கிய தகவல் இருக்கிறது! அது.. இந்தப் பதிவின் இறுதியில் சொல்கிறேன் ).

சரி, முழுமையான விளக்கத்தைப் பார்த்து விட்டோம்.
இப்போது கேள்வி என்னவென்றால் இந்த செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பார்க்கப்பட வேண்டுமா? யாருக்கெல்லாம் செவ்வாய் தோஷம் தோஷத்தின் கெடுபலனை உண்டாக்கும்? உண்மையிலேயே செவ்வாய் தோஷம் இவ்வளவு வீரியத்தையும் கெடுபலனையும் காட்டுமா? என்று சந்தேகம் எழலாம்!

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த 12 ராசிக் கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் லக்னம் மற்றும் ராசி என்பது குறிக்கப்பட்டிருக்கும்.

செவ்வாய் தோஷம் என்பது லக்னம் மற்றும் ராசி இரண்டுக்குமே பார்க்கப்பட வேண்டியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேஷம்‌, விருச்சிகம் - இதன் அதிபதி செவ்வாய் -

நீங்கள் மேஷ லக்னம் அல்லது ராசிக்காரர்களாக இருந்தாலும், விருச்சிக லக்னம் மற்றும் ராசிக்காரர்களாக இருந்தாலும், உங்களது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் என்று கருதப்படும். ஆனால் ஒருவர் தன் வீட்டுக்கே கெடுதல் செய்வாரா? இங்கே மேஷம் என்பது செவ்வாயின் வீடு ஆகும். தன் வீட்டுக்கே யாரும் எந்த விதமான கெடுதலையும் செய்யமாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே! எனவே மேஷ ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலைசெய்யாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். .

ரிஷபம், துலாம் - இதன் அதிபதி சுக்கிரன் -

நீங்கள் ரிஷப லக்னம் அல்லது ராசியாக இருந்தாலும், துலாம் லக்னம் மற்றும் ராசிக்காரராக இருந்தாலும், உங்களுக்கும் இந்த செவ்வாய் தோஷமானது நிச்சயமாக வேலை செய்யாது. காரணம் என்னவென்றால், செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் ரகசிய நட்பு எனும் அடிப்படையில்.., ( அசுரர்களை அழிக்க இந்திரன் சூரிய பகவானிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்களுடைய அக்னி தத்துவத்தின் மூலமாக இந்த அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற கட்டளை சூரியனுக்கு இடப்படுகிறது. சூரிய பகவான் என்பவர் உயிர்களை உருவாக்குபவர். அழிவு வேலையைச் செய்ய மாட்டார். எனவே சூரிய பகவான் தனது தலையில் இருந்து ஒரு முடியை எடுத்து அதற்கு உயிர் கொடுத்து, அப்படி உயிர்பெற்ற கேசத்துக்கு அங்காரகன் எனும் பெயரிட்டு அவரிடம் அசுரர்களை அழிக்கும் பணியை சூரியன் கொடுத்தார்.

அப்படி அசுரர்களை அழிப்பதற்காகவே படைக்கப்பட்டவர் தான் இந்த செவ்வாய் பகவான். இவர் அசுரர்களை அழிக்கும்போது அசுர குருவான சுக்கிரனையும் அழிக்க முற்பட்டார், அப்போது சுக்கிரபகவான் செவ்வாயோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அது என்னவென்றால்.. மனிதர்களின் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பலன்களைத் தர நவகோள்கள் படைக்கப்பட இருப்பதால் உன்னையும் நவகோள்களில் ஒருவராக நான் பரிந்துரைக்கிறேன் என்று செவ்வாயுடன் சமரசம் செய்து கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட செவ்வாய் பகவான் சுக்கிர பகவானை அழிக்காமல் விட்டுவிட்டார். இந்த ரகசிய நட்பு வெளியில் யாருக்கும் தெரியாது என்று இருவரும் நினைத்துக் கொண்டார்கள் ஆனால் சூரிய பகவான் இதை அனைத்தையும் தெரிந்து கொண்டார். அதனால்தான் செவ்வாய் சூரியனுக்கு நட்பு. ஆனால் சூரியனுக்கு செவ்வாய் சமம் என்ற அளவிலேயே ஜோதிட சாஸ்திர குறிப்புகள் சொல்கின்றன) இந்த அடிப்படையில் செவ்வாயானவர் தனது நண்பன் வீட்டுக்கு எந்தவிதக் கெடுதலையும் செய்யமாட்டார்.

கடகம் - இதன் அதிபதி சந்திரன்-

நீங்கள் கடக லக்னம் அல்லது ராசிக்காரர்களாக இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. காரணம்... சந்திரன் என்பவர் அனைத்து ராசிகளையும் 28 நாட்களில் வலம் வருவதால், அனைத்து கிரகங்களும் சந்திரனுக்கு நட்பு என்ற அடிப்படையில் செவ்வாயும் ஒரு நட்பு கிரகமே! அது மட்டுமல்லாமல் கடகராசிக்கு யோகாதிபதியாக வருபவர் செவ்வாய் பகவான். மேலும் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் என்னும் தன் முழு பலத்தையும் இழக்கிறார். இந்தக் காரணங்களினாலும், சந்திரன் என்பவர் நவகிரகங்களில் தாய் என்னும் அந்தஸ்தைப் பெறுவதாலும், செவ்வாய் தோஷமானது கடக ராசிக்கு அறவே கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.

சிம்மம் - அதிபதி சூரியன் -

நீங்கள் சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசிக்காரர்களாக இருந்தாலும் உங்களுக்கு செவ்வாய் தோஷம் அறவே கிடையாது. காரணம் நவகிரகங்களின் தலைவன் சூரியன். அவருடைய கட்டுப்பாட்டில் தான் அனைத்து கிரகங்களும் இயங்குகின்றன. மேலும் இந்த சிம்ம ராசிக்கு யோகாதிபதி செவ்வாய். எனவே சிம்ம ராசிக்கு செவ்வாய் தோஷம் என்பது முழுவதுமாகவே கிடையாது என்பது உறுதி.

தனுசு, மீனம் - இதன் அதிபதி குரு பகவான் -

தனுசு மற்றும் மீனத்தை லக்னமாகவும் அல்லது ராசியாகவோ உள்ளவர்களுக்கு -
குரு பகவான் என்பவர் தேவர்களின் வழிகாட்டியாக விளங்கும் குரு. பிரகஸ்பதி. ராகு, கேது, சுக்கிரன் தவிர்த்து மற்ற அனைவருக்கும் இவரே வழிகாட்டும் குருவாக இருப்பதால், இவருடைய ஆட்சி வீடுகள் தனுசு மற்றும் மீன ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்யாது. அதுமட்டுமல்லாமல் செவ்வாயின் மேஷ வீட்டிற்கு பாக்கியாதிபதியாக வருவதாலும், செவ்வாயின் மற்றொரு வீடான விருச்சிகத்திற்கு தனாதிபதி மற்றும் புண்ணியாதிபதியாக வருவதால் செவ்வாய் தோஷம் தனுசு, மீனம் எனும் இந்த இரண்டு ராசிகளுக்கும் கிடையாது.

மகரம் மற்றும் கும்பம் - இதன் அதிபதி சனி பகவான் -

மகர ராசியை லக்கினமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டுள்ளவர்களுக்கு -
மகர ராசியில் செவ்வாய் பகவான் உச்சம் அடைவதால் செவ்வாய் தோஷம் மகரத்திற்கு கிடையாது. அதேபோல கும்ப ராசி என்பது ஆலயங்களைக் குறிக்கிறது. போற்றுதலுக்குரிய கும்பத்தின் வடிவத்தை கொண்டுள்ளது. புண்ணிய நதிகளின் வழித்தடமாக இருப்பதாலும் கும்ப ராசிக்கும் செவ்வாய் தோஷம் கிடையாது.

ஆக இந்த வரிசையில் நாம் பார்க்க இருக்க வேண்டிய 2 ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி -

மிதுனம் மற்றும் கன்னியை லக்னமாகவும் ராசியாகவும் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் வேலை செய்யும். காரணம்.. செவ்வாய்க்கு புதன் கடுமையான பகை ஆவார். எனவே செவ்வாய் தோஷமானது மிதுனம் மற்றும் கன்னிக்கு மட்டுமே பலமாக வேலை செய்யும். எனவே இந்த ராசி அல்லது லக்னக் காரர்களுக்கு மட்டும் செவ்வாய் தோஷத்தின் வீரியத்தை அளவிட வேண்டும்.

செவ்வாய் தோஷம் இருந்தாலும் கூட ஏகப்பட்ட விதிவிலக்குகள் உள்ளன. அந்த வரிசையை இப்போது பார்ப்போம்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷத்தை உண்டாக்கும். ஆனால்... இந்த செவ்வாயை குரு பகவான் பார்த்தாலும், குரு சேர்ந்து இருந்தாலும், சூரியனோடு இணைந்து இருந்தாலும், இந்த செவ்வாயோடு சந்திரன் சேர்ந்து இருந்தாலும், செவ்வாய் சனி இரண்டும் இணைந்து இருந்தாலும், செவ்வாய்-சனி ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டாலும், செவ்வாய் கேது இணைந்து இருந்தாலும், செவ்வாய் தோஷம் வேலை செய்யாது. அதுமட்டுமல்லாமல் நவாம்சத்தில் செவ்வாய் கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் செவ்வாய் தோஷம் வேலை செய்யாது. மேலும் செவ்வாய் அஸ்தங்கம் எனும் நிலையை அடைந்து இருந்தாலும், வக்கிரம் பெற்றிருந்தாலும் செவ்வாய் தோஷம் வேலை செய்யாது.

ஆகவே இவ்வளவு விதிவிலக்குகள் நிச்சயமாக ஒவ்வொருவர் ஜாதகத்திலும் அதாவது மிதுனம் மற்றும் கன்னி ராசியை லக்னமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். லட்சத்தில் ஒரு ஜாதகம் மட்டுமே இந்த அம்சங்கள் இல்லாமல் இருக்கலாம். எனவே செவ்வாய் தோஷமானது நூறு சதவிகிதமானது யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம்! அப்படியானால் ஏன் இந்த செவ்வாய் தோஷத்தை மிக பலமாக அல்லது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வி எல்லோருக்குமே எழலாம்.

நிச்சயமாக அறியாமைதான் காரணம்.

எந்த ஜோதிட நூல்களிலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதே உண்மை. மேலோட்டமாக மிதுனம், கன்னி என்ற இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரியத்தை ஜோதிடர்கள் பார்த்து வந்தார்கள். காலப்போக்கில் இதனை அனைத்து ராசிகளுக்கும் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மேலும் பரிகாரம் என்ற பெயரில் ஆதாயம் அடைவதற்காக இது மெல்ல மெல்ல பரப்பப்பட்டு வந்தது.

ஒருவரிடம் இருந்து ஆதாயம் அடைய வேண்டும் என்றால் ஒன்று அவருக்கு ஆசையைத் தூண்ட வேண்டும்.! அல்லது அச்சத்தை மூட்ட வேண்டும். இந்த இரண்டில் எது எளிதானதோ அதையே அனைவரும் கையாண்டு வந்தார்கள். இனியும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.
செவ்வாய் தோஷம் என்பதே இல்லை என்பதைப் புரிந்து கொண்டால்... சாதாரணமான, எளிமையான ஒன்றாகவே பார்க்கப்படும். இல்லையென்றால் தோஷத்தின் காரணமாக சற்றே மிரட்சியுடன் பார்க்கப்பட வேண்டியது வரும். முதலில் தோஷங்களைக் கண்டு கவலைப்படுவதோ, அச்சப்படுவதோ அவசியமே இல்லை. எந்த தோஷமும் பரிகாரத்திற்கு உட்பட்டே அமைந்திருக்கிறது.

செவ்வாய் தோஷத்திற்கு என்ன மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம் என்பதைப் பற்றியும், செவ்வாய் தோஷத்திற்கான ஆலயங்களைப் பற்றியும், தெய்வங்களைப் பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x