Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். அடக்குமுறைக்கும் ஆணவத்துக்கும் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாகிவிடுவீர்கள். தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்மாட்டீர்கள்.
இந்த பிலவ வருடம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.
இந்த புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு ஐந்தில் நிற்பதால் அரைகுறையாக நின்றுபோன வேலைகளை வருடத்தின் மத்தியப் பகுதியில் இருந்து விரைவாக முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். வீட்டில் ஒருவிதப் போராட்டம் இருந்தாலும், வெளியில் வரவேற்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காகப் பொறுப்பு ஏற்பதையும், சாட்சிக் கையெழுத்து இடுவதையும் தவிர்க்கவும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடுகட்டும் பணி தாமதமாகும். தாயாரைத் தவறாக நினைக்க வேண்டாம். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால்வலி வந்து போகும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராகு எட்டாம் வீட்டிலும் கேது இரண்டாம்வீட்டிலும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். பேச்சால் பிரச்சினைகள் வரக்கூடும். எனவே நிதானித்துப் பேசுவது நல்லது. கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும். 21.3.2022 முதல் கேது ராசிக்குள் நுழைவதால் வீண் படபடப்பு, தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ராகு ஏழாமிடத்துக்குள் நுழைவதால் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பைக் கோளாறு, அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.
இந்த ஆண்டு முழுக்க சனி நான்காம் வீட்டிலேயே நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்கச் சான்றிதழ், தாய்பத்திரத்தை சரிபார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தைச் சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.
ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்த உறவினர்கள் உங்களது உதவியை நாடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தலை சுற்றல், கண் எரிச்சல், அசதி ஆகியன வந்து விலகும். வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை ஒதுக்குங்கள். கீரை, பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரபலங்களின் நட்புறவு கிடைக்கும். புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள்.
வியாபாரத்தில், தொழிலில் ஒரு ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புதிய திட்டம் தீட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போக வேண்டியது இருக்கும். முன்பின் அறியாதவர்கள், புதிய நிறுவனங்களிடம் கவனம் தேவை. புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். மூத்த அதிகாரிகளின் மனம் புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் உண்டு.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சித்திரை மாதத்தில் புதிய வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். கார்த்திகை மாதத்தில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றத்தையும், மையப்பகுதியில் பணவரவையும், இறுதிப்பகுதியில் அலைச்சலுடன், உடல்நலக் குறைவைத் தந்தாலும் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்
திருவெண்காட்டில் அருள்பாலிக்கும் அகோரமூர்த்தியை ஏதேனும் ஒரு புதன் அல்லது சனிக்கிழமையில் சென்று தயிர் அபிஷேகம் செய்து வணங்குங்கள். வெள்ளரிக்காய் தானமாகக் கொடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT