Published : 04 Mar 2021 11:25 AM
Last Updated : 04 Mar 2021 11:25 AM
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
வணக்கம் வாசகர்களே.
இந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரைக்கு நீங்கள் கொடுத்த அபார வரவேற்பிற்கு மிக்க நன்றி.
இனி அடுத்தடுத்து வரும் கட்டுரையில் ஒன்பது தாரைகள் மற்றும் அதற்கு உரிய விரிவான விளக்கங்களை உதாரணங்களுடன் காணலாம்.
⦁ ஜென்ம தாரை
⦁ சம்பத்து தாரை
⦁ விபத்து தாரை
⦁ க்ஷேம தாரை
⦁ பிரத்யக்கு தாரை
⦁ சாதக தாரை
⦁ விபத்து தாரை
⦁ மித்திர தாரை
⦁ பரம மித்திர தாரை
மேற்கண்ட தாரைகளில் சுபம் தரும் தாரைகள் என்று ஐந்து தாரைகளைப் பார்த்தோம். இந்த தாரை வடிவங்களை நாமும் பார்த்து பிறரையும் பார்க்கவைப்பதே விசேஷம். மேலும் உங்கள் நட்சத்திர வடிவங்களை உங்களின் அடையாளமாகக் கூட வைத்துக்கொள்ளலாம். இதைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
ஜென்ம தாரை
ஒருவரின் ஜென்ம நட்சத்திரமே ஜென்ம தாரை என்று அழைக்கப்படுகிறது. மேலும் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டு வந்தால், 10 மற்றும் 19 நட்சத்திரங்கள் அனு ஜென்ம தாரை மற்றும் திரி ஜென்ம தாரை என்று அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த நபருக்கு மிருகசீரிடம் என்பது ஜென்ம தாரை. அதிலிருந்து எண்ணிக் கொண்டுவந்தால், பத்தாவது நட்சத்திரம் சித்திரை மற்றும் பத்தொன்பதாவது நட்சத்திரம் அவிட்டம் இவை இரண்டும் முறையே மிருகசீரிடத்தின் அனு ஜென்ம தாரை மற்றும் திரி ஜென்ம தாரை என்று அறியலாம்.
ஜென்ம தாரை உபயோகம் என்பது உடல் உறுதியும் மற்றும் மன உறுதியும் பாதுகாப்பும் தரக்கூடியது. இதன் காரணமாகவே கோயிலில் அவரவர் ஜென்ம தாரை எனும் ஜென்ம நட்சத்திரப் பெயரைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. உங்கள் ஜென்ம தாரை வடிவத்தை உங்கள் தற்காப்பு ஆயுதமாகக் கூட உபயோகித்து வரலாம்.
இதற்கான இரண்டு புராண உதாரணங்களைச் சொல்கிறேன்.
மஹாருத்ரனின் மண்டை ஓடு மாலையின் ரகசியம்
சிவபெருமான் அங்கங்கள் முழுவதும் மண்டைஓடுகள் மாலைகளாக இருக்கும். ஏன் இவ்வாறு மண்டை ஓடு மாலைகள் அணிந்திருக்கிறார் என்ற கேள்விக்கு நட்சத்திர வடிவங்கள் பதில் அளிக்கின்றன.
மஹாருத்ரன் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை என்கிறது புராணம். இந்த நட்சத்திரம் வானவியலில் ORION என்று அழைப்படுகிறது. இது மிதுன ராசியில் அமைந்திருக்கும் நடு நட்சத்திரம். இதன் நான்கு நட்சத்திர பாதங்களும் சேர்ந்து, வானில் பிரகாசமாகவும் அதே சமயம் நீர்த்துளி போன்றும் அதேசமயம் மண்டை ஓடு போலவும் தெரியும்.
திருவாதிரை நட்சத்திர தெய்வமான சிவபெருமான், தனது ஜென்ம தாரை வடிவான மண்டை ஓடுகள் கொண்ட மாலையாக உபயோகிக்கிறார். மேலும் திருவாதிரை என்பது நீர்த்துளி வடிவம் என்பதால், ருத்திராட்சம் (கண்ணீர்த்துளி) உடல் முழுவதும் அணிந்திருக்கிறார்.
ருத்ர என்றால் நீர்த்துளி என்றும், அக்ஷம் என்றால் கண்கள் என்றும் அர்த்தம். சிவ பெருமானின் மனைவி சதி தன் தந்தையான தட்சனின் யாகத்தில் விழுந்து உயிர் துறந்த போது, மகா ருத்திர வடிவம் எடுத்தார் சிவ பெருமான். அந்த வடிவம் எடுத்து சதியின் உடலை கையில் தாங்கி கண்ணீருடன் நடனம் புரிந்தார். அப்பொழுது சிவ பெருமானின் கண்ணீர்த்துளிகள் ருத்திராட்சங்களாக மாறின. ஆகவே திருவாதிரை நட்சத்திர வடிவம் ருத்திராட்சம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்திரனின் வஜ்ராயுத ரகசியம்
இன்னொரு புராணகால உதாரணம்... இந்திரன்.
புராணங்களில் இந்திரனின் நட்சத்திரம் ஜேஷ்டா அல்லது கேட்டை என்று தெரிவிக்கின்றன ஞானநூல்கள். இந்த நட்சத்திரம் விருச்சிக ராசியின் கடைசி நான்கு பாதங்கள் இணைந்த நட்சத்திரக் கூட்டங்கள் கொண்டிருக்கும்.
விருச்சிகம் என்பதன் வடிவம் தேள் என்று நாம் அறிந்ததே. அதுபோல இந்திரனின் ஆயுதம் வஜ்ராயுதம். வஜ்ரம் என்றால் வைரம் அல்லது உறுதியான முதுகெலும்பு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ததீசி முனிவரின் தியாகத்தால் அவரது முதுகெலும்பை அசுரர்களை கொல்லும் ஆயுதமாக அகத்தியர் துணையுடன் பெற்றான் இந்திரன்.
அந்த முதுகெலும்பின் வடிவத்தை, தேளின் உடல் பகுதியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒன்று போலவே தோன்றும். கேட்டை நட்சத்திர இந்திரன் தனது ஜென்ம தாரை வடிவான வஜ்ராயுதத்தைக் கொண்டு அசுரர்களை எதிர்த்தார். ஆகவே ஜென்ம தாரை ஒருவருக்கு பாதுகாப்பும் அதேநேரம் மன உறுதியும் அளிக்கும்.
- வளரும்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT