Published : 30 Jun 2020 03:14 PM
Last Updated : 30 Jun 2020 03:14 PM

செல்வாக்கு, சொல்வாக்கு; கோபம் வந்தால் தாம்தூம்; தோல்வி வெற்றி சகஜம்; அம்மா பாசம்!  

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 52;


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
அனுஷம் நட்சத்திரக்காரர்களின் முழுமையான குணநலன்களை, அனுஷத்துக்கே உரித்தான விஷயங்களைப் பார்த்தோம். இந்த பதிவில் அனுஷம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியாக பலன்களை, குணங்களை, செயல்பாடுகளைப் பார்ப்போம்.

அனுஷம் நட்சத்திரம் 1ம் பாதம் -

அனுஷம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கும், வார்த்தை பிறழாத சொல்வாக்கும் உடையவர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாலும் நிறைவேற்றுபவர்கள். இளகிய மனம் படைத்தவர்கள் என்றாலும் கோபம் வந்தால் ருத்ரதாண்டவமே ஆடிவிடுவார்கள். அந்தசமயத்தில், கையிலிருக்கும் பொருளை தூக்கிப்போட்டு உடைப்பவர்கள். கோபம் தணிந்தவுடன் தன்னைத்தானே நொந்து கொள்ளும் குணமும் இவர்களுக்கு உண்டு. கண்களில் ஒளி உடையவர்கள். முகத்தில் மலர்ச்சியான பிரகாசத்துடன் திகழ்பவர்கள்.

மத்திம உயரம், மெலிந்த தேகம், உறுதியான உடல்வாகு, அகலமான தோள், நிமிர்ந்த நடை என இருப்பவர்கள். மறந்தும் பொய் பேசாதவர்கள். பொய் பேசினால் உடனே மாட்டிக்கொள்வார்கள் இவர்கள். குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் உடையவர்கள்.


அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு, சகோதரர்களைவிட சகோதரிகள் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஒருவேளை சகோதரர் இருந்தால் இருவரும் சதா சண்டையிடுபவர்களாக இருப்பார்கள். அதேபோல், சகோதரிகளாக இருந்தால் அளவு கடந்த பாசம் மட்டுமல்லாமல் சகோதரிக்காக எதையும் செய்து கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களில், பெரும்பாலோர் உத்தியோகத்தில் இருப்பவர்களாகவும், அதிலும் உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள். கண்டிப்பானவர்களாகவும், எளிதில் அணுக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிகாரப் பதவி, காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு, அரசியல் பதவி, கட்சிப்பதவி, நியமனப் பதவிகள், தொழிற்சங்கப் பதவி, கௌரவப் பதவிகளில் என்று இருப்பார்கள்.

ஆடை உற்பத்தி தொழில், ஆடைகளுக்கு சாயம் போடும் தொழில், ரசாயனம் தொடர்பான தொழில், மருந்து மாத்திரை தொழில், மருத்துவர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், கட்டுமானத் தொழில், சேவை சார்ந்த பராமரிப்புத் தொழில் முதலான தொழில் அல்லது வேலை அமையும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள், அளவான உணவை உண்பவர்கள். இருந்தாலும் அதீத கோபம், பரபரப்பாக இருப்பது போன்ற குணத்தால் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்புப் பிரச்சினைகள் இருக்கும்.

அனுஷம் 1ம் பாதத்திற்கான இறைவன் - திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

விருட்சம் - மகிழ மரம்


வண்ணம் - இளம் சிவப்பு

திசை - கிழக்கு, வடக்கு
*********************************
அனுஷ நட்சத்திரம் 2ம் பாதம் -

அனுஷம் 2ம் பாதத்தில் பிறந்தவர்களை, கவலையில்லாத மனிதர்கள் என்றுதான் சொல்லவேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ படதாவர்கள். மகிழ்ச்சி, ஆனந்தம், சொகுசு ஆகியவையே இவர்களின் அடையாளம். அறிமுகமே இல்லாத நபரிடம் கூட ஏதோ பலநாள் நண்பரிடம் பேசுவது போல் “என்ன பாஸ்” என்றுதான் பேச்சையே தொடங்குவார்கள். எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலை இருந்தாலும் இவர்கள் அந்த இடத்தில் இருந்தால் சில நிமிடங்களில் அந்தச் சூழலையே கலகலப்பாக மாற்றி விடுவார்கள். அது துக்க வீடாக இருந்தாலும். கூட!

அனுஷ நட்சத்திரம் 2ம் பாதக்காரர்களின் உலகமே தனி தான்! கனவு வாழ்க்கை வாழ்பவர்கள். அந்த கற்பனை உலகில், எப்படியெல்லாம் வாழ விரும்புகிறார்களோ அதை அப்படியே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். இளம் வயதிலேயே பக்குவப்பட்ட வயதுக்கான தோற்றம், செயல், பேச்சு என இருப்பார்கள்.

கலை இலக்கிய ஆர்வம் உடையவர்கள் இவர்கள். கதை, கவிதை, பாடல், என எழுதிக் குவிப்பவர்கள். திரைத்துறையில் ஆர்வம், கலைத்துறை, உயர் கல்வி கற்பது, ஆராய்ச்சிக் கல்வி, ஓவியத் திறமை போன்றவை இருக்கும்.
மருத்துவத் தொழில், தூதரகப் பணி, ஆசிரியர், பேராசிரியர், நிதி நிர்வாகம், ஆடிட்டர், வங்கிப்பணி, இன்சூரன்ஸ், பத்திர எழுத்தர், தரகுத் தொழில், கமிஷன் ஏஜென்ட், ரியல்எஸ்டேட், வணிக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பத்துறை, பல்பொருள் அங்காடி முதலான தொழில் வாய்ப்புகள் அமையும்.

ஆரோக்கிய பாதிப்பாக நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு நோய், தோல் நோய்கள், கரும்புள்ளிகள், மருக்கள், முதலான பிரச்சினைகள் இருக்கும்.

அனுஷம் 2ம் பாத இறைவன் - ஶ்ரீஹயக்ரீவர்

விருட்சம் - பூமருது மரம்

வண்ணம் - கரு நீலம், பச்சை

திசை - தெற்கு
**********************************

அனுஷம் நட்சத்திரம் 3ம் பாதம் -

அனுஷம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பரம்பரைச் சொத்து இருக்கும். மிக அழகான முகத்தோற்றம், எவரையும் கவர்ந்துவிடும் அழகு, குளிர்ச்சியான கண்கள், சற்று வளைந்த முதுகு, கச்சிதமான உடை நேர்த்தி, ஒப்பனை இல்லாமலேயே கவர்ச்சியான தோற்றம். கண் அசைவிலேயே எதிரிகளை வீழ்த்தும் சாகசம், பணப்பற்றாக்குறை என்பதே இல்லாத நிலை என்று வாழ்பவர்கள். பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்கள், சுகபோக வாழ்வு வாழ்பவர்கள். கஷ்டம் என்பதையே அறியாதவர்கள். எதிர்பாலினத்தவரிடம் மட்டும் அதிகம் நெருக்கம் காட்டுபவர்கள். அதேசமயம் குடும்ப உறவுகளிடமும் பாசத்தைப் பொழிவார்கள். இளைய சகோதரரைவிட மூத்த சகோதரரிடம் அதிக நேசமும் பாசமும் கொண்டிருப்பார்கள். இவர்களின் எல்லா பிரச்சினைக்கும் மூத்த சகோதரரே முன்னின்று உதவி செய்வார். தாயன்பு கிடைக்கும் அளவுக்கு தந்தையின் நெருக்கம் இருக்காது.

இவர்களில் பெரும்பாலானோர் பணம் புழங்கும் தொழில் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். வணிக ரீதியான தொழிலைக் கொண்டிருப்பார்கள். ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம், நகைக் கடை, துணிக்கடை, பெண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை. விளம்பர நிறுவனங்கள், அச்சகம், அடார்னர்ஸ், நடனப் பயிற்சி, கலைத்துறை, ஒளிப்பதிவு, நடிப்பு. அரசுப் பணிகள், அரசு ஒப்பந்தங்கள், வழக்கறிஞர், மருத்துவம் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

மேலும், திருமண அமைப்பாளர், சமையல் தொழில், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விடுதி, சூதாட்ட விடுதி, குதிரைப் பந்தயம், மது விடுதி, பாலியல் தொடர்பான தொழில், மருந்து விற்பனை, அறுவை சிகிச்சை மருத்துவர், பெண்கள் நல மருத்துவர், பலசரக்கு வியாபாரம், மொத்த ஏஜென்சி, நகைத்தொழில், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, பயணம் தொடர்பான தொழில் போன்றவையும் அமையும்.

உணவுகளில் இனிப்புச் சுவை மீது அதிக விருப்பம் இருக்கும். ஆனால் சர்க்கரை வியாதியும் கூடவே இருக்கும்.

அனுஷம் 3ம் பாத இறைவன்- லக்ஷ்மி நாராயணர்

விருட்சம் - கொங்கு மரம்

வண்ணம் - நீலம்

திசை - வடமேற்கு
*************************************

அனுஷம் நட்சத்திரம் 4ம் பாதம் -

அனுஷம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், புறக்கவலைகள் பற்றி கவலைப்படாதவர்கள். தான் எண்ண செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள். உழைக்கத் தயங்க மாட்டார்கள். குறிக்கோள் வைத்து செயல்படுபவர்கள். இலக்கை எட்டும்வரை எதைப்பற்றியும் சிந்திக்காதவர்கள். குடும்பப் பாசம் அதிகம் கொண்டவர்கள். தாயாரின் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பார்கள். இளைய சகோதரரிடம் இருக்கும் நெருக்கம் மூத்த சகோதரரிடம் இருக்காது.

எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் மிகப்பெரிய சறுக்கலை சந்திப்பார்கள். பிறகு அதிலிருந்து மீண்டு வந்து, ஒப்பற்ற சாதனையைச் செய்வார்கள்.


இந்த சீசா விளையாட்டு இவர்களுக்குப் பொருத்தமான ஒன்று. தோல்வியும் தோல்விக்குப் பின் பெறக்கூடிய வெற்றிகளும் இவர்கள் வாழ்வில் மிகச் சாதாரணமாக நடைபெறுபவை. அதனால் இவர்கள் தோல்வியில் துவண்டு போகவும் மாட்டார்கள். வெற்றியில் துள்ளிக்குதித்து ஆடவும் மாட்டார்கள். சொல்லப்போனால், விடாமுயற்சிக்கு முன்னுதாரணம் இவர்கள்தான்!

அனுஷ நட்சத்திர 4ம் பாதக்காரர்களின் பலவீனமே சுய பச்சாதாபம்தான். தன் மீது தானே கழிவிரக்கம் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். அப்படி நம்பிவிட்டால் அவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அதேபோல், துரோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியாது இவர்களால்! துரோகத்தை நினைத்துநினைத்து வெதும்புவார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் ஆரம்ப காலத்தில் பணிக்குச் சென்றாலும் சுய தொழில் செய்வதில் தான் முனைப்பு காட்டுவார்கள். காவல்துறை, ராணுவம், பாதுகாப்பு தொடர்பான வேலை, ஆயுதங்கள் தொடர்பான வேலை, ரசாயனத் தொழில், வெடிமருந்து, பட்டாசுத் தொழில், உரம், விவசாயத் தொழில், சந்தை வியாபாரம், உணவகம், தேநீர் விடுதி, தங்கும் விடுதி, மது விற்பனை, சலவையகம், ஆண்கள் அழகு நிலையம், தூர்வாரும் தொழில், மருத்துவம், மனநல ஆலோசனை மாதிரியான தொழிலோ வேலையோ அமையும்.

இவர்களுக்கு உணவின் மீது அதிக விருப்பம் இருக்கும் என்பதெல்லாம் கிடையாது. ஆரோக்கியத்தில் மனநல பிரச்சினைகள், வயிறு தொடர்பான கோளாறுகள், செரிமானப் பிரச்சினைகள் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

அனுஷம் 4ம் பாதம் இறைவன் - திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள்

விருட்சம் - தேக்கு மரம்


வண்ணம் - இளம் சிவப்பு, அடர் சிவப்பு

திசை - வடக்கு


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். மரம் செடிகள் வளர்க்கலாம். பறவைகளுக்கு உணவளிக்கவேண்டும். இந்தச் செயல்கள் செய்வதாலும் தியானம் செய்வதாலும் முக்கியமாக சித்தர்களை வணங்கி வருவதாலும் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.


அடுத்து...
கோட்டை கட்டி ஆளும் கேட்டை நட்சத்திரம் பற்றி பார்ப்போமா?
ஈட்டியின் இலக்கு, ஒரு சூரியன் அல்ல ஒன்பது சூரியன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரே நட்சத்திரம் எனும் பெருமை கொண்டது கேட்டை நட்சத்திரம்!
- வளரும்
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x