Published : 31 May 2020 10:05 AM
Last Updated : 31 May 2020 10:05 AM
’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
13 என்பது பயம் அல்லது துரதிருஷ்டம் என்பது பொதுக் கருத்தாக, எண்ணமாக இருக்கிறது.
உண்மையில், 13ம் எண்... பயமுறுத்துகிற நம்பர்தானா? இந்த நம்பருக்குப் பயப்பட வேண்டுமா?
பயப்பட வேண்டாம். இது ஆங்கில முறை. நாம் இந்திய முறைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ் முறைக்கு முக்கியம் தரவேண்டும். அதுபோதும்!
ஆக, 13 எனும் நம்பருக்கு பயப்படாதீர்கள். பயப்படவே பயப்படாதீர்கள்.
அடுத்து... பரிகாரம் குறித்து என்னெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்; என்னெல்லாம் செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஒருவருக்கு இரு தாரம் எனும் தோஷம் இருக்கிறது.
இரு தார தோஷம் என்றால் என்ன?
அதாவது, மூன்று வகையாக இதைச் சொல்லலாம்.
முதலாவது... துணை (கணவன் அல்லது மனைவி) இறந்து போக, இன்னொருவரை மணம் புரிவது! அதாவது இரண்டாவதாகத் திருமணம் செய்வது!
இரண்டாவது... விவாகரத்து பெற்று, அடுத்து வேறொருவரை மணம் புரிவது!
மூன்றாவது... கணவன் அல்லது மனைவிக்குத் தெரியாமல், ரகசியமாக இன்னொரு துணையை தேடிக் கொள்வது.
ஆக, இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக, இரு தார தோஷம் என்று சொல்கிறார்கள். இந்த தோஷத்துக்குப் பரிகாரம் உண்டென்றும் சொல்கிறார்கள். இதுதான் பரிகாரம் என்றும் சொல்கிறார்கள்.
என்ன செய்வது?
அவருக்கு இரண்டு திருமணம் செய்விக்க முடியுமா? நடைமுறைக்கு சாத்தியமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா?
என்ன செய்வது?
இந்தப் பரிகாரங்கள் குறித்துதான் கேள்விகள் இருக்கின்றன.
வாழை மரத்துக்கு தாலி கட்டிவிட்டு, அதை வெட்டிச் சாய்த்துவிட்டால், தோஷம் போய்விடும் என்கிறார்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் பார்த்திருக்கவும் செய்யலாம். இன்னும் ஒரு சிலர்... அந்தப் பரிகாரத்தைக் கூட செய்திருக்கலாம்!
ஆனால் நடப்பதென்ன? பரிகாரம் செய்பவர்... ஒரு வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வந்திருப்பார். அந்த வாழை மரத்துக்கு தாலிகட்டி அந்த வாழைமரத்தை வெட்டி விடுவார், பரிகாரம் முடிந்தது. அப்படித்தானே!
இது சரியா?
ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எப்படி உயிரோடு இருக்கும்? ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எனில், அது இறந்த மரம்தானே? இறந்த மரத்திற்கா தாலி கட்டினார்? இறந்த மரத்தை மீண்டும் வெட்டி என்ன பயன்?
நான் ஒருபோதும் அபசகுன வார்த்தை பிரயோகிப்பதில்லை. ஆனாலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டியிருக்கிறது.
எனக்கு தெரிந்து... வாழைத்தோப்பில் வைத்து குலை தள்ளாத மரத்திற்கு தாலி கட்டி, அதை வெட்டினால் தோஷம் நீங்கும் என்பதை எடுத்துக்கொள்ளலாம்.
அது என்ன குலை தள்ளாத மரம்? என நீங்கள் கேட்பது புரிகிறது, அதாவது குலை தள்ளாத மரம்தான் கன்னிக்கு ஒப்பானது! கன்னித் தன்மைக்கு நிகரானது! ஆனால் இதுவும் தவறுதான். இதனால் இரு தார தோஷம் நீங்கிவிடாது,
இதில் என்ன ஆச்சரியம் என்றால், சமீபத்தில் ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றும், மகளுக்கு இரு தார தோஷம் இருப்பதாக ஒரு ஜோதிடர் சொன்னதால், அவரின் வழிகாட்டுதல் படி இந்த வாழைமர பரிகாரம் செய்ததாகவும் சொன்னார்கள்.
நான் வாயடைத்துப் போனேன். ஆணுக்கு இந்த பரிகாரத்தை பரிந்துரைப்பது போய், பெண்களுக்கும் இந்தப் பரிகாரத்தை வழிமொழியும் ஜோதிடர்களை என்னவென்று சொல்வது?
இது எவ்வளவு பெரிய அபத்தம். ஜோதிடம் என்பதே ஒருவரின் காலநிலையை அறியும் கலை. அவர் யார்? எப்படிப்பட்டவர்? அவருடைய எதிர்காலம் என்ன? அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? செழிப்பான வாழ்வா? போராட்ட வாழ்வா? என காட்டும் மாயக்கண்ணாடிதான் ஜோதிடம்!
எனவே ஜோதிடம் என்பது வருவதை அறிந்து கொள்ளும் அற்புதக் கலையே தவிர, நாம் எதிர்கொள்ள இருக்கும் எதையும் மாற்றித் தரக்கூடியதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி... இந்த இரு தார தோஷத்திற்கு என்னதான் வழி? பரிகாரம் இருக்கிறதா?வழி இருக்கிறது. அது மிக மிக எளிமையான பரிகாரம்.
திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள அர்த்ததாரீஸ்வரர் ஆலயத்திற்கு வருடாவருடம் செல்வதும், அந்த சிவசக்தி சொரூபப் படத்தை வைத்து வழிபடுவதும் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதும் இரு தார தோஷமானது நிவர்த்தியாகும்!
திருமலை வேங்கடவன் ஶ்ரீநிவாசப் பெருமாளை வருடாவருடம் தரிசிப்பதும் நல்ல பலனைத்தரும்.
ஏதோ ஜோதிடர் கூறினார் என்பதற்காக ஒரே முறை ஆலய தரிசனம் செய்துவிட்டு தன் தோஷத்திற்குப் பரிகாரம் நடந்துவிட்டதாக நிறையபேர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. அந்த ஆலய தரிசன பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்றுவரவேண்டும்.
உதாரணமாக ராகு கேது தோஷத்திற்கு திருக்காளத்தி சென்று வந்தாலே, அதாவது காளஹஸ்தி சென்று வந்தாலே பரிகாரம் ஆகிவிடாது. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாகச் சென்று வரவேண்டும் மற்றும் அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்கு வாராவாரம் சென்று வரவேண்டும்.
இது போன்ற பரிகாரங்களை விடுத்து, சிறிதும் நடைமுறைக்கு ஒப்பாத, விஷமத்தன பரிகாரங்களை செய்து உங்கள் பணத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT