Published : 19 May 2020 12:22 PM
Last Updated : 19 May 2020 12:22 PM

சித்திரை நட்சத்திரக்காரர்கள் புலிப்பாய்ச்சல்காரர்களா? சாதுவா? தனிமை விரும்பிகளா?

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 40 ;


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


இந்தப் பதிவில் சித்திரை நட்சத்திரம் குறித்த முழுமையான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.


சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான். இந்த நட்சத்திரமானது, நட்சத்திர வரிசையில் 14- வது நட்சத்திரம்.

சித்திரை நட்சத்திரமானது கன்னி ராசியில் இரண்டு பாதங்களும் துலாம் ராசியில் இரண்டு பாதங்களுமாக இருக்கும்.

மகாவிஷ்ணுவின் அங்கங்களாகவும், வாகனமாகவும் இருப்பவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே ஆழ்வார் என்னும் திருநாமம் சேர்ந்து வருவது உண்டு. வாகனமான கருடனுக்கு ஆழ்வார் பட்டம் இணைந்து கருடாழ்வார் என அழைக்கப்படுகிறார்.

மகாவிஷ்ணுவின் சுதர்சனம் என்னும் சக்கரம் அநீதிகளை அழிக்கும். துயரங்களை அறுக்கும். தீய சக்திகள் அணுகாமல் காக்கும். அதனால்தான் சக்கரத்தாழ்வார் என திருநாமம் கொண்டுள்ளார். சக்கரத்தாழ்வார் பிறந்தது சித்திரை நட்சத்திரத்தில்தான்.

மகாவிஷ்ணுவை சொல்லிவிட்டு சிவபெருமானைச் சொல்லாமல் இருக்கலாமா?


கோடானுகோடி யாகங்கள் செய்வதும் சிவபெருமானுக்கு ஒரேஒரு வில்வ இலை சமர்ப்பித்து வணங்குவதும் ஒன்றே என புராணங்கள் சொல்கின்றன.
ஆமாம் இத்தனை வலிமை மிக்க, மகிமை மிக்க வில்வ மரம் பிறந்தது சித்திரை நட்சத்திரத்தில்தான்.

எனவே சித்திரை நட்சத்திரக்காரர்கள், சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பித்து வணங்கவேண்டும்.

சித்திரை நட்சத்திரத்தின் வடிவம் புலியின் கண் போல இருக்கும். அப்படியானால் புலி போல பாய்ந்து பிறாண்டி விடுவார்களா? இல்லையில்லை. புலி போல எச்சரிக்கை உணர்வு, எப்போது பதுங்க வேண்டும், எப்போது பாய வேண்டும் என்பதில் மிக மிகத் துல்லியமாக இருப்பார்கள்.

சிசுபாலனின் நூறு நிந்தனைகளைத் தாங்கி 101வது நிந்தனையின்போது கிருஷ்ணர், அவனை வதம் செய்த கதை உங்களுக்குத் தெரியும்தானே! அதுபோல பல தவறுகளை மன்னித்துக்கொண்டே வரும் இவர்கள், ஒருகட்டத்தில் புலிப் பாய்ச்சல் போல பாய்ந்து ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்திவிடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் ’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நூறுசதவிகிதம் பொருந்தும்.

சரி... சித்திரை நட்சத்திரமானது எதையெல்லாம் குறிக்கும்? அதையும் பார்ப்போம்.


கடைவீதி, ஜவுளிக்கடை, சந்தைப் பகுதி, சாலைகள் சேருமிடம், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி, பழக்கடை, பூக்கடை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும் பகுதி இவையெல்லாம் சித்திரை நட்சத்திரத்தின் அடையாளங்கள். குறியீடுகள்.

கூட்டுத்தொழில் என்பதும் சித்திரையைக் குறிக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் என்பதும் சித்திரையைக் குறிக்கும், தாம்பத்தியம், கரு உருவாகுதல், ஆண் பெண் அந்தரங்கப் பகுதி, ஆண்களின் சுக்கிலம், பெண்களின் சுரோணிதம் இவையனைத்தும் சித்திரை நட்சத்திரத்தின் குறியீடுகள்.

தனித்து இயங்குதல், தனித்து வாழ்தல் என்பது இப்போது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்; புரிந்திருப்பீர்கள். சிங்கம் கூட கூட்டமாகத்தான் வாழும். ஆனால் புலி தனித்துதான் வாழும். (சிங்கம் எப்போதும் சிங்கிளா வராது, கூட்டாகத்தான் வேட்டையாடும். ஆனால் புலி அப்படியல்ல... தனித்துதான் வேட்டையாடும்). அப்படியானால் சித்திரை நட்சத்திரக்காரர்கள் யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? தனிமை விரும்பிகளா?


அப்படிச் சொல்லமுடியாது. இதை அப்படிப் பார்க்கக் கூடாது. தன் கஷ்ட நஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதேசமயம், மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார்கள்.

சித்திரை நட்சத்திரத்தின் மற்றொரு அடையாளம் தேவதச்சன் எனப்படும் விஸ்வகர்மா. எனவே ஒருங்கிணைத்தல் என்பதில் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நிகர் அவர்களே! அலுவலகமோ, தொழிலகமோ... சக ஊழியர்களை ஒன்றிணைத்து இலகுவாக வேலை வாங்குவதில் சிறந்தவர்கள்.

தொழிற்சங்கம் அமைப்பவர்களில் பலரும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். தவறென்றால் தலைமையையே தட்டிக் கேட்கத் தயங்கமாட்டார்கள். பயம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள்.

பெரும்பாலும் இவர்களில் பலர், நிலம் தொடர்பான தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். வேளாண்மை, பயிர், காய்கனி உற்பத்தி, துணிக்கடை, உணவகம், சமையல் பொருட்கள் விற்பனை, பங்குவர்த்தகத் தொழில், பள்ளிக்கூடம், பத்திரிகைத் தொழில், தர்மகாரிய சேவை நிறுவனங்கள், சித்தர்களின் ஜீவசமாதி பராமரிப்பு, தச்சுத்தொழில், சென்ட்ரிங் தொழில், மர வியாபாரம், கட்டுமானப் பொருட்கள் விற்பனை, செங்கல் சூளை முதலான தொழில்கள், சித்திரைக்காரர்கள் பணியாற்றுகிற தொழிலாக இருக்கும்.

வழக்கறிஞர், நீதிபதி, மருத்துவர், அரசியல் ஆலோசகர், தொழிற்சங்க பிரதிநிதி, கௌரவத் தலைவர், அரசாங்க நியமனப் பதவிகள், அரசியல் தரகர், நலச்சங்கங்கள், மனித உரிமை இயக்கம், இயந்திரம் சார்ந்த உற்பத்தித் தொழில், பழைமையான பொருட்கள் விற்பனை, நவரத்தின வியாபாரம், கம்பளங்கள் விற்பனை, கால்நடை வளர்ப்புத் தொழில் என செய்பவர்களாக இருப்பார்கள்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு குடும்பத்தின் மீதான பாசம் அதிகமிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்களுடைய பிரச்சினையே தனித்து இருப்பதால் யாராலும் புரிந்து கொள்ள முடியாத நபராக இருப்பதுதான். ஒருளை கலகலப்பாக இருந்தாலும், சித்திரை நட்சத்திரக்காரர்களைப் புரிந்துகொள்வது கடினமான காரியம்தான்.


மிகுந்த நட்பாக இருப்பவர்கள் கூட, இவர்கள் மேல் ஒருவித அச்ச உணர்வோடுதான் இருப்பார்கள். நெருங்கிப் பழகினால் மட்டுமே சித்திரை நட்சத்திரக்கார்களின் மென்மையான உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள்!

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிக்கத் தவற மாட்டார்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள். எடுத்துக்கொண்ட பணிகளில் சிறு தவறு கூட ஏற்படாதபடி, செயல்படுபவர்கள். தவறு நேர்ந்தால் சிறிதும் கவலைப்படாமல் தவறுகளை சரி செய்ய முனைவார்கள். இன்னும் சொல்லவேண்டுமெனில், மீண்டும் முதலிலிருந்தே செய்யத்தொடங்குவார்கள்.


விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்றொரு வாசகம் இருக்கிறது அல்லவா. சித்திரை நட்சத்திரக்காரர்களின் தாரக மந்திரம் இது!


சித்திரை நட்சத்திரத்தின் மகிமைகள் இன்னும் ஏராளம்.

இவற்றை அடுத்து பார்ப்போம்!


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x