Published : 21 Feb 2020 04:25 PM
Last Updated : 21 Feb 2020 04:25 PM

மகா சிவராத்திரி ; சிவனாருக்கு ஒரு கை வில்வம்!

வி.ராம்ஜி


மகா சிவராத்திரி நன்னாளில், சிவபெருமானுக்கு ஒரு கை வில்வம் வழங்கி, வேண்டிக் கொள்ளுங்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் விலகும்.
சிவனாருக்கு உகந்தது சிவராத்திரி. மாதந்தோறும் வருகிற சிவராத்திரியன்று பக்தர்கள், விரதம் மேற்கொள்வார்கள். விரதமிருந்து சிவ தரிசனம் செய்வார்கள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரியே சிறப்புவாய்ந்தது என்றால், மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி இன்னும் மகத்துவம் வாய்ந்தது. காரணம்... மாசி சிவராத்திரி என்பது மகாசிவராத்திரி.


அதனால்தான் மாசி மகாசிவராத்திரியில், இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். ஒரு கால பூஜை, இரண்டு கால பூஜை என நான்கு கால பூஜைகள் அமர்க்களமாக நடைபெறும். ஒவ்வொரு கால பூஜையிலும் ஒவ்வொருவிதமான அபிஷேகங்களும் தீப தூப ஆராதனைகளும் நடைபெறும்.


மகா சிவராத்திரி நாள் இன்று (21.02.2020). இந்தநாளில், சிவனாருக்கு வில்வ இலை சார்த்தி, அவரை வழிபடுங்கள். சிவனாருக்கு உகந்தது வில்வம். மூன்று இலைகளைக் கொண்ட வில்வம் இன்னும் விசேஷம் என்பார்கள். அதாவது, மூன்று இலைகளும் முக்கண்ணைப் போன்றிருக்கும் என்பார்கள்.


அதுமட்டுமா? வில்வத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்கிறது புராணம். அதனால்தான் வில்வத்துக்கு ‘ஸ்ரீவிருட்சம்’ என்றே பெயர் உண்டு.
மகாலட்சுமி வாசம் செய்யும் வில்வ இலையை, சிவனாருக்கு உகந்த வில்வ இலையை, மகாசிவராத்திரி நாளில், ஒரு கையளவேனும் வழங்கி தரிசியுங்கள். வில்வ இலை சார்த்தி வேண்டிக்கொண்டால், முற்பிறவியில் செய்த பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.


அதேபோல், மகா சிவராத்திரி நாளில், வில்வம் சார்த்தி சிவனாரை தரிசனம் செய்தால், காசியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான சிவ தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெறுவோம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x