Published : 06 Feb 2020 12:47 PM
Last Updated : 06 Feb 2020 12:47 PM
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வாசகர்களுக்கு இனிய வணக்கம்.
நாம் இப்போது பார்க்க இருக்கும் நட்சத்திரம் ரோகிணி. வசீகரம், அழகு, கவர்ச்சி, பார்த்தவுடன் ஒரு வார்த்தையாவது இவரிடம் பேசி விடவேண்டும் என ஆவலைத்தூண்டும் முக தேஜஸ், எல்லோருக்கும் அறிமுகமான மாதிரியான அந்நியோன்யம் கொண்ட நபராக இருப்பதான எண்ணம்... இவை அனைத்தும் ரோகிணியின் தனிச்சிறப்பு.இந்த நட்சத்திரம் ரிஷப ராசியில் இருக்கிறது. ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.
தட்சன், தட்சன் மகள் தாட்சாயினி, தாட்சாயினி மணந்த சிவன், தட்சனின் யாகம், அந்த யாகத்தை தடுக்க தாட்சாயினி அந்த வேள்வியில் விழுந்து உயிர் விட்டது என இந்தக் கதை முழுவதையும் ’திருவிளையாடல்’ படத்தில் பார்த்திருப்போம்.
அந்த தட்சனுக்கு மொத்தம் 60 பெண் பிள்ளைகள். இவர்களில் தாட்சாயினி தவிர அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 பெண்களை சோமன் என்னும் சந்திரன் மணந்து கொண்டான்.
இதில் இந்த ரோகிணி என்பவள் பேரழகு வாய்ந்தவள். அதனால் சந்திரன் இந்த ரோகிணியிடம் மட்டுமே தஞ்சம் அடைந்து கிடந்தான். மேலும் தன் அழகில் தற்பெருமையும், கர்வமும் கொண்டவனாக இருந்தாள் ரோகிணி. இதனால் எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்த மற்ற 26 பேரும் தன் தந்தையிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட தட்சன், 15 நாட்கள் சுய அழகனாகாகவும், அடுத்த 15 நாட்கள் குரூரமாகவும் இருக்கக் கடவது என சந்திரனுக்கு சாபமிட்டான்.
மனம் திருந்திய சந்திரன் மன்னிப்பு கேட்டான். இந்த சாபத்திற்குப் பிறகு தினம் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தான். இந்த 27 பெண்களே 27 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றார்கள். இதுதான் சந்திரன் 27 நட்சத்திரங்களின் வழியாக பயணிக்கும் கதை. இது புராணக் கதை.
இப்போது புரிகிறதா, ரோகிணி நட்சத்திரக்காரர்களின் முக வசீகரத்திற்கான காரணம்.
இந்த ரோகிணி நட்சத்திரம்தான் சந்திரன் உச்சம் என்னும் இரு மடங்கு சக்தியாக இருக்கின்ற நட்சத்திரம்.
மேலும் இந்த சாபத்தால்தான் முழு பரிபூரண சுபராக இருந்த சந்திரன், வளர்பிறையில் சுபராகவும் தேய்பிறையில் குரூரராகவும் அறியப்படுகிறார். (நன்கு கவனியுங்கள், பாபர் அல்ல குரூரர்) மேலும் ராகு பகவான் இந்த ரோகிணி நட்சத்திரத்தில்தான் நீசம் அடைகிறார்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் கிருஷ்ணர் பிறந்தது இந்த ரோகிணி நட்சத்திரத்தில்தான் என்பது நாம் அறிந்ததே! அந்த மகாவிஷ்ணுவின் சயனம் ஆதிசேஷனான பாம்புப் படுக்கை என்பதும் அறிந்ததுதான்! இப்போது ராகு பகவான், கிருஷ்ணனின் நட்சத்திரமான ரோகிணியில் நீசம் என்னும் தன் பலத்தை இழப்பது புரிகிறது அல்லவா!
எனவே ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ராகு கேது தோஷம் வேலை செய்யாது. செய்யவே செய்யாது. அதேபோல ராகு கேது திசை நடந்தால் நன்மைகள் தான் நடக்குமே தவிர, சிறிதும் தீமைகள் நடக்காது. நடக்க வாய்ப்பேஇல்லை. அதேபோல, கோச்சார ராகு கேதுவும் பாதிப்புகளைத் தராது.
ரோகிணியில் பிறந்த மற்றொருவர் பாண்டவர்களில் இரண்டாமவரான பீமன்.
கிருஷ்ணருக்கும் பீமனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தர்மர், அர்ஜுனர் இவர்கள் இருவரும் எதிரிகளை வெல்வதற்காக அதிக முனைப்பும் கவலையும் கொண்டிருந்தார்கள். ஆனால் பீமன் எந்தக் கவலையும் படவில்லை. மாறாக அதீத நம்பிக்கை கொண்டிருந்தான். அவனுக்கு தாம் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை முழுமையாக இருந்தது.மேலும் தன் உடல் பலத்தின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டவனாகவும் இருந்தான். கிருஷ்ணனுக்கு புத்திசாலித்தனமான செயல்பாடுகளில் முழு நம்பிக்கை இருந்தது.
இதிலிருந்து ரோகிணி நட்சத்திரம் குறித்தும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குறித்தும் நாம் அறிந்து கொள்வது என்ன தெரியுமா?
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் உடல் பலம் மட்டுமல்ல... மூளை பலமும், சமயோசிதமும் கொண்டவர்கள். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் சாதுரியமாக செயல்பட்டு அந்த இக்கட்டான நிலையை கடந்து விடுவார்கள். காரணம் மிக எளிமையானதுதான். சந்திரன் என்னும் மனம் மற்றும் அறிவுக்கு உடையவன் ரோகிணியில் உச்சமாவதுதான்.
ரோகிணியின் வடிவம் தேர், ஜோதிடத்தில் அதை முத்துத்தேர் என குறிப்பிடுகிறார்கள் வல்லுநர்கள். எனவே, இயல்பாகவே வாகனயோகம் உடையவர்கள் ரோகிணி நட்சத்திரக்காரர்கள். பொதுப்பயன்பாடு வாகனங்களை (பஸ்) பயன்படுத்துவதை விட சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவார்கள். அது தொலைதூரப் பயணமாக இருந்தாலும், தனி வாகனம் பயன்படுத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.
பயணங்களில் ஆர்வம் உடையவர்கள். வெள்ளை நிறத்தின் மேல் அதிகப் பற்று கொண்டவர்கள். அணிகின்ற உடையில் அழகான நேர்த்தி் இருக்கும். தன் உடலமைப்புக்குப் பொருந்தும் உடைகளையே அணிவார்கள். ஆபரண மோகம் உடையவர்கள். விரல்களிலும், கழுத்திலும் ஏதாவதொரு மோதிரம், செயின் என அணிந்திருப்பார்கள்.
சுவையான உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதெல்லாம் இவர்களுக்கு அத்துப்படி, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேடிச் சென்று உண்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர்கள். இயல்பாகவே சமையல் நுணுக்கம் அறிந்தவர்கள்.
தன்னை அழகாக வெளிப்படுத்திக் காட்டுவதில் கவனமாக இருப்பார்கள். உடையும் சுத்தம், உள்ளமும் சுத்தம். ஆனால் யாரையும் பாதிக்காத சின்னச் சின்ன பொய்களைப் பேசுவார்கள். அது சுவாரஸ்யத்திற்காகவும் கலகலப்புக்காகவும்தானே தவிர அதில் உள் நோக்கம் ஏதும் இருக்காது.
கற்பனைக் களஞ்சியம் என்றுதான் ரோகிணி நட்சத்திரக்காரர்களைச் சொல்ல வேண்டும். அவ்வளவு கற்பனாதிறன் உடையவர்கள். , எழுத்து, கதை, கவிதை, ஓவியம், இசை, நாட்டியம், நடனம் என கலைகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரமே போவதே தெரியாது. விடியவிடிய பேசிக்கொண்டே இருக்கலாம்.
ஆண், பெண் என எந்தப் பாகுபாடும் இல்லாத நட்பு வட்டம் கொண்டவர்கள். பொது அறிவு விஷயத்தில் அபார ஞானம் உடையவர்கள். எனவே “இவருக்கு எல்லாம் தெரியும்” என்று பழகிய அனைவரும் நம்புவதால், இவரிடம்தான் பலரும் ஆலோசனை கேட்பார்கள். பலதரப்பட்ட நண்பர்கள் இருந்தாலும், யாராவது இவரை ஏமாற்றினால் மிகவும் துடித்துப் போவார்கள், “இப்படி செய்துட்டாரே” என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள், ஆபரணத்தில் விருப்பம் உள்ளவர்கள் என பார்த்தோம். குறிப்பாக முத்துமாலை, முத்து பதித்த மோதிரம் அணிவது மிகவும் நல்லது.ரோகிணி நட்சத்திரப் பெண்கள் முத்துமாலை அணிவது சிறப்பான பலன்களைத் தரும்.
மனக்குழப்பம் உடையவர்கள், மன நல பாதிப்பு உடையவர்கள். எப்போதும் பரபரப்பாக இருப்பவர்கள். தெளிவான தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள்... ரோகிணி நட்சத்திரக்காரர்களில் இதுமாதிரியான குணங்களை அதிகம் கொண்டிருந்தால், முத்துமாலை அணிந்து கொள்ளுங்கள். நல்ல முன்னேற்றத்தை ஒருசில நாட்களிலேயே நன்றாக அறியலாம்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதாமே? உண்மையா?
ஆமாம், உண்மைதான்! ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் தாயாருக்கு எட்டாவது குழந்தையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாய்மாமனுக்கு ஆகாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். .
இங்கு யாரும் எட்டாவது பிள்ளையாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் மிகச்சரியாக அவர்கள் ரோகிணியில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் ரோகிணியில் பிறந்த யாரும் கண்ணனும் இல்லை; அவர்களின் மாமாக்கள் கம்சனும் இல்லை.
அடுத்து ஒரு சந்தேகம்... ரோகிணியில் பிறந்தால் பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகுமா? இல்லையென்றால் தத்துக் கொடுத்து தத்தெடுக்க வேண்டியது வருமா?
அப்படியெல்லாம் இல்லை. தத்துக் கொடுப்பதும் எடுப்பதும் கிரக நிலைகளின் அடிப்படையிலானதே! எனவே இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை.
ரோகிணி நட்சத்திரம் குறித்தும் நட்சத்திரக்காரர்களின் குணங்கள் குறித்தும் பார்க்க வேண்டியது இன்னும் ஏராளமாக இருக்கிறது.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
- வளரும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT