Published : 18 Oct 2019 09:37 AM
Last Updated : 18 Oct 2019 09:37 AM

உங்களுக்கு சொந்த வீடு அமையுமா?  - எந்த ராசிக்கு எந்த திசை வீடு?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத விஷயங்கள்... உணவு - உடை - உறைவிடம். அதில் மிக முக்கியமானது உறைவிடம். ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படையான விஷயங்களில் முக்கியமானது வீடு.

அந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையுமா - எந்த இடத்தில் அமையும் - அவர் பிறந்த ஊரிலா அல்லது வசிக்கும் ஊரிலா அல்லது வெளிநாட்டிலா - எந்த திசையைப் பார்த்த வீடு அமையும் - எந்த திசையைப் பார்த்து அவர் உறங்க வேண்டும் - எந்த திசையை நோக்கி அவர் தலை வைத்து படுக்க வேண்டும் - எந்தெந்த வண்ணங்கள் அவர் வசிக்கும் வீட்டில் அவர் பயன்படுத்தலாம் - எந்தெந்த வண்ணங்களில் தரைத்தளம் அமையலாம் - ஜன்னல்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் - கதவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொருவருடைய ஜாதகத்தையும் கொண்டு சொல்ல முடியும்.

இப்போதைய சூழ்நிலையில், தனி வீடு என்ற கலாச்சாரம் மாறி அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் எந்தந்த திசையைப் பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தலைவாசல்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவையோ (Gate) அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொருவருடைய வீட்டின் தலைவாசலைத் தான் பிரதானமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த ஊராக இருந்தாலும் சரி - அது எந்த நாடாக இருந்தாலும் சரி. தலைவாசலை தான் நாம் பிரதானமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பார்க்கும்போது, ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு திசையானது கொடுக்கப்பட்டிருக்கிறது.


ஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். குறைந்தபட்சம் சொந்த மனையாவது அமையும். நான்காவது அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் நிச்சயமாக சொந்த ஊரில் அவருக்கு சொந்த வீடு அமையும். லக்னாதிபதியின் பலம் இறங்கி நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து காணப்படும் நிலையில் செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு சொந்த வீடு - மனை உண்டு.


பொதுவாகச் சொல்வதென்றால் நான்காம் வீட்டு அதிபதியோ அல்லது செவ்வாயோ மிக பலம் வாய்ந்து காணப்பட்டால், கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு மனை உண்டு. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்க முடியாது. அல்லது அது நீண்ட நாளைக்கு வராது.

வீடு அமைய பொதுவான பரிகாரம்:
நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ... அவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும்.

இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த எந்த திசை அமைந்தால் நல்லது என்பதை பார்க்கலாம்
மேஷ ராசி -கிழக்கு மற்றும் வடக்கு
ரிஷப ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
மிதுன ராசி - மேற்கு மற்றும் தெற்கு
கடக ராசி - வடக்கு மற்றும் மேற்கு
சிம்ம ராசி - கிழக்கு மற்றும் வடக்கு
கன்னி ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
துலா ராசி - மேற்கு மற்றும் தெற்கு
விருச்சிக ராசி - வடக்கு மற்றும் மேற்கு
தனுசு ராசி - கிழக்கு மற்றும் வடக்கு
மகர ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
கும்ப ராசி - மேற்கு மற்றும் தெற்கு
மீன ராசி - வடக்கு மற்றும் மேற்கு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x