Published : 06 Sep 2019 04:18 PM
Last Updated : 06 Sep 2019 04:18 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய பயணத்தை (சஞ்சாரத்தை) செலுத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலகட்டத்தை முதலில் பார்க்கலாம்.
சூரியன் ஒரு மாதம் - சந்திரன் 2 1/4 நாள் - செவ்வாய் 45 நாட்கள் - புதன் 27 நாட்கள் - சுக்கிரன் 30 நாட்கள் - குரு ஒரு வருடம் ஒரு மாதம் - சனி இரண்டரை வருடம் - ராகு கேது ஒன்றரை வருடம் என சுற்றி வருகிறார்கள். இந்த காலகட்டம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறக்கூடிய அளவுகள்.
இதுவே 12 ராசிகளையும் சுற்றி வரக்கூடிய காலகட்டத்தை நாம் இப்போது பார்க்கலாம். சூரியன் 365 நாட்கள் - சந்திரன் 30 நாட்கள் - செவ்வாய் 540 நாட்கள் - புதன் 324 நாட்கள் - சுக்கிரன் 360 நாட்கள் - குரு 12 வருடம் - சனி 30 வருடம் - ராகு கேது 18 வருடம் என எடுத்துக் கொள்கிறார்கள்.
ஏன் 12 - 15 - 18 ஆகிய வருடங்கள் முக்கிய வருடங்களாக சொல்லப்படுகின்றன?
ஒருவர் பிறக்கும் போது அவருடைய ஜாதகத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருக்கிறார் என்றால் அதே மேஷ ராசிக்கு குருபகவான் 12 வருடங்களுக்குப் பிறகு வருவார். ஒருவர் பிறக்கும்போது ஜாதகத்தில் சனிபகவான் தனுசு ராசியில் இருக்கிறார் என்றால் அதே தனுசு ராசிக்கு சனிபகவான் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருவார். ஒருவர் பிறக்கும் போது அவருடைய ஜாதகத்தில் ராகு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார் என்றால் அதே மிதுன ராசிக்கு ராகு பகவான் 18 வருடங்கள் கழித்து வருவார். ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான வருடங்கள் என்பது 12 - 15 - 18 ஆகும்.
அந்த காலத்திலே சிலரிடம் ஒருவர் பிறந்து ஜாதகம் பார்ப்பதற்கு 12 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் வழக்கம் இருந்து வந்தது. ஏனென்றால் 12 வயதில்தான் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் குருவோடு கோச்சார குரு சேர்வார். எனவே பனிரெண்டு வயதிலேயே மிக முக்கியமான நிகழ்வுகள் நிகழும். மங்கள காரியங்கள் அனைத்தும் நிகழும். 15 வயதில் பால்ய விவாகம் சம்பந்தமாக ஜாதகத்தை எடுத்துப் பார்ப்பார்கள். 18 வயதில் சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் முடிவெடுப்பார்கள்.
ஒருவருக்கு செவித்திறன் குறைபாடோ பேசும் குறைபாடோ இருந்தால் 12 வயதுவரை பார்க்க வேண்டும். அதன்பிறகு தான் பரிகாரம் செய்யவேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனன கால குருவோடு கோச்சார குரு சேரும் போது ஒருவருக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, வாழ்க்கை மிகச் சிறப்பாகச் செல்வதை பார்க்க முடியும். ஒரு குழந்தை படிக்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் படிக்கும் திறன் என்பது 12 வயதில் அதிகரிக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் குருபகவான் வலுவாக இருப்பார் என்றால் 12, 24 36, 48, 60 வருடங்களில் அவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். குருபகவான் வலுவாக இருக்கும்போது ஒருவர் தனது வாழ்வில் மிகப்பெரிய தர்ம காரியங்களை மக்களுக்குப் பயன்படக்கூடிய காரியங்களை செய்வார். குருபகவான் தன காரகன் என்றும் சந்தான காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
உடல் நலம் சார்ந்து யாருக்கும் ஏதேனும் பிரச்சினை இருந்து வந்தால் 15 வயது வரை பார்க்க வேண்டும். ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே இருக்கக்கூடிய சனிபகவானை கோச்சார சனி பகவான் 7-ஆம் பார்க்கக்கூடிய காலகட்டம் என்பது 15 வயது. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் பலமாக இருப்பார் என்றால் 15, 30, 45, 60 ஆகிய வருடங்களில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். சனி பகவான் பலமாக இருக்கும்போது ஒருவர் தனது வாழ்வில் ஆட்சி அதிகாரமிக்க பதவிகளை பெறுவது அதன் மூலமாக மற்றவர்களுக்கு நன்மை செய்வது போன்றவற்றை செய்வார். சனி பகவான் ஆயுள், தொழில், கர்மா ஆகிய விஷயங்களுக்கு காரகனாக அமைந்திருக்கிறார்.
வாழ்வில் ஏற்றத்தைக் காணக்கூடிய வயது என்பது 18 வயது. எந்த மாதிரியான வேலைக்கு ஒரு மனிதன் செல்வான் என்பதை 18 வயதில் தீர்மானிக்க முடியும். ஜனன கால ராகுவோடு கோச்சார ராகு கேது சேரக்கூடிய காலகட்டம் இந்த 18 வயது. ஒருவருடைய தாயார் தந்தையாருக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் சரியாகக் கூடிய காலகட்டமும் இந்த 18 வயதுதான். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது இருந்தால் அவர்கள் 18, 36, 54, 70 ஆகிய வருடங்களில் நல்ல மாற்றங்களை சந்திப்பார்.
ராகு ஒருவருக்கு பலமாக இருந்தால் அவர் தனது தந்தைவழி பாட்டனார் பிரதிபலிப்பதாக இருப்பார். அதேபோல் அவரது தந்தை வழி பாட்டனார் என்னென்ன நற்காரியங்கள் செய்தாரோ அதை அவரும் தனது வாழ்வில் செய்வார். கேதுபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அவர் ஞானம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தான் பெற்ற ஞானத்தை போதிப்பார்.
ராகு பகவான் இயக்க காரகன் என்றும் கேது பகவான் ஞானகாரகன் என்றும் அழைக்கபடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ராகு பகவான் தந்தைவழி காரகன் என்றும் கேது பகவான் தாய்வழி காரகன் என்றும் சொல்லப்படுகிறார்கள். தந்தைவழியில் இருக்கக் கூடிய விஷயங்களை ஆராய்வதற்கு ராகு பகவானையும் தாயார் வழியில் இருக்கக் கூடிய விஷயங்களை ஆராய்வதற்கு கேது பகவானையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக குருபகவான் - சனி பகவான் - ராகு கேது ஆகியோர் மீண்டும் தங்கள் தங்கள் இடத்திற்கு ஒன்றுபோல் வருவதற்கு அறுபது வருடங்கள் ஆகும். அதனால் தான் சஷ்டி அப்தபூர்த்தி என கொண்டாடப்படுகிறது. அதாவது அறுபதாம் கல்யாணம் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இந்த நான்கு கிரகங்களும் மிக முக்கிய கிரகங்களாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT