Published : 16 Mar 2025 06:07 PM
Last Updated : 16 Mar 2025 06:07 PM
29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...
மகரம்: எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இருப்பதைக் கொண்டு எளிய வாழ்வு முறையை வாழ்ந்து அமைதியுடன் இருக்க விரும்புபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது.
கிரகநிலை: இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்துகொண்டு அவர்களின் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவும்; அது தக்க சமயத்தில் உதவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் மனதில் சிலரது போக்கினால் வருத்தங்கள் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. சுதந்திரமாகச் சிந்தித்துத் தனித்துச் செயல்படுவீர்கள். புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள். சிலர் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவார்கள். வருமானம் பெருகும். இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். அதேநேரம் எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.
தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான பயிற்சிகளைக் கற்றறிந்து வெற்றியடைவீர்கள்.
வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கடுமையான சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும். மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்: எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
திருவோணம்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
அவிட்டம் - 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். மேலும் ராம நாம ஜெபம் செய்வதும் நன்மையைத் தரும். “வில்வ தளத்தை” சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும் | சனி பகவானின் பார்வைகள்:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment