Last Updated : 19 Feb, 2025 04:47 PM

 

Published : 19 Feb 2025 04:47 PM
Last Updated : 19 Feb 2025 04:47 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.20 - 26

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். விரைய ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிநாதன் சுக்கிரனால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல்திகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

சுவாதி: இந்த வாரம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மனநிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் நான்காம் இடம் மிக வலுவாக இருக்கிறது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரியத் தடை, தாமதம் விலகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

அனுஷம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன்பு யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

கேட்டை: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்ட பிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

பலன்கள்: இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் சப்தம ஸ்தான சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி செயல்படக்கூடாது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்: இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

பூராடம்: இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x