Last Updated : 18 Dec, 2024 03:55 PM

 

Published : 18 Dec 2024 03:55 PM
Last Updated : 18 Dec 2024 03:55 PM

தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால்பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜ நிலை உருவாகும்.

உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம்: சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். தந்தையாருக்கு உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும்.

ஆரோக்கியம்: உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தவும். எந்த காரியத்தையும் சோம்பேறித்தனம் பண்ணாமல் உடனடியாக செய்வது நல்லது.

பொருளாதாரம்: பங்குச் சந்தை விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலை கொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றி நடைபோடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவுநிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.

வியாபாரிகளுக்கு: கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.

பெண்மணிகள்: பெண்மணிகளுக்கு இந்த ஆண்டில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கவுரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட விரைய செலவுகளை குறைப்பீர்கள். பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேத்துடன் செயல்பட்டு மனநிறைவு பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் வளர்ச்சி பெற்று புதிய சக்தியை உருவாக்கிதரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். வீட்டை அலங்காரம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆடை ஆபரணச் சேர்க்கை நிச்சயம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மனவருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

கலைத்துறையினர்: கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். எதற்கும் தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.

மாணவமணிகள்: மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும். விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள். கணிதம், வருமானவரி, வரவு செலவு தணிக்கை, நிர்வாகம், ஒவியப் பயிற்சி பெறும் மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் புரிவீர்கள். மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு உருவாகும். நண்பர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பெற்றோருடன் உறவு நிலை சுமுகமாய் இருக்கும்.

மூலம்: இந்த ஆண்டு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

பூராடம்: இந்த ஆண்டு மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த ஆண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்: அடிக்கடி சித்தர்கள் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x