Published : 18 Dec 2024 02:45 PM
Last Updated : 18 Dec 2024 02:45 PM
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.
உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும்.
குடும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆனாலும் உங்கள் சாமர்த்தியமான செயல்களால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். இல்லத்தில் களவு போன பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். இயல்பான காரியங்களைக்கூட மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். உங்கள் சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய மந்திரங்கள் கற்பீர்கள்.
குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியல் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்: உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். மனப்புழுக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிப்பீர்கள். மனதில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும்.
பொருளாதாரம்: எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
உத்தியோகஸ்தர்கள்: உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது.
வியாபாரிகள்: வியாபாரிகளின் முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
பெண்மணிகள்: பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும்.
பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்கள் மூலம் நன்மை அடைவார்கள். உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமான இருக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் அனுகூல செயல்பாட்டை தேவையான நேரத்தில் தடையின்றி பெறுவார்கள். பிறருக்காக நடத்தி தரவேண்டிய பணிகள் இந்த வருடம் நடக்கும்.
ஆன்மீக எண்ணங்கள் மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வகாரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யமாட்டீர்கள். மேலிடம் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
கலைத்துறையினர்: கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். "உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மனவருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும்.
வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும். சினிமா நாடகம் சின்னத்திரை ஆகியவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக நடிகையர்கள் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள்.
மாணவமணிகள்: மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். நடனம், இசை பயிற்சி பெறும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயின்று தேர்ச்சி பெறுவார்கள்.
சிவில், ஓவியம் சம்பந்தமான பயிற்சி மாணவர்கள் புதிய யுக்திகளை அறிந்து நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மோட்டார், வாகனம், படகுகள், விமானம் ஒட்டுவதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அனுஷம்: இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை: இந்த ஆண்டு பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT