Last Updated : 22 Aug, 2024 11:56 AM

 

Published : 22 Aug 2024 11:56 AM
Last Updated : 22 Aug 2024 11:56 AM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.22 - 28

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் புதன் - தனஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்குவன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

பூசம்: இந்த வாரம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன் - மனைவி உறவு விரிசல் காணும். பணப் பற்றாக்குறையால், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச்செலவுகள் எகிறும்.

ஆயில்யம்: இந்த வாரம் உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும். உடன்வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களூக்கு இந்த வாரம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் குரு இப்பதன் மூலம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும்.

சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யுங்கள்.

பூரம்: இந்த வாரம் வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம்.

பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களூக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

சுக்கிரன் சஞ்சாரம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது யோசிப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும். வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூலாகும். வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலைகள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x