Last Updated : 30 Jun, 2024 12:31 PM

 

Published : 30 Jun 2024 12:31 PM
Last Updated : 30 Jun 2024 12:31 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான நட்சத்திர மாத பலன்கள் - ஜூலை 2024

மேஷம் அஸ்வினி: இந்த மாதம் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வளர்த்துக் கொள்வீர்கள். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பரணி: இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். தன்னம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் லாப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11 | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

ரோகினி: இந்த மாதம் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் நண்பர்களிடையே சுமூக உறவுடன் இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13 | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

மிதுனம் மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

புனர்பூசம்: இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16 | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2024

கடகம் புனர்பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலும் இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

பூசம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்: இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18 | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

சிம்மம் மகம்: இந்த மாதம் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

பூரம்: இந்த மாதம் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20 | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

அஸ்தம்: இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழுகவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சினை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 | அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23 | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

துலாம் சித்திரை: இந்த மாதம் நக்ஷத்ராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

சுவாதி: இந்த மாதம் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்

விசாகம்: இந்த மாதம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25 | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

விருச்சிகம் விசாகம்: இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.

அனுஷம்: இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

கேட்டை: இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வணங்கிவர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27 | முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

தனுசு மூலம்: இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

உத்திராடம்: இந்த மாதம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29 | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

மகரம் உத்திராடம்: இந்த மாதம் மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.

திருவோணம்: இந்த மாதம் போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

அவிட்டம்: இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31 | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

கும்பம் அவிட்டம்: இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண் பகை உண்டாகலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

சதயம்: இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பூரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6 | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2024

மீனம் பூரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மனஉளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த மாதம் வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம்.

ரேவதி: இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8 | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் | 2024

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x