Last Updated : 13 Apr, 2024 03:10 PM

 

Published : 13 Apr 2024 03:10 PM
Last Updated : 13 Apr 2024 03:10 PM

கன்னி ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | குரோதி வருடம் எப்படி? - ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

கன்னி வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். சந்திரன் 10-வது ராசியில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலை கிடைக்கும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. கோபம் குறையும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும்.

30.4.2024 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். 01.05.2024 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சொந்த - பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும்.

வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் கணவன்- மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்திருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். ஹார்மோன் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை குறையும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. உணவு, ஸ்பெகுலேஷன், சிமெண்ட், கல்வி கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். யாரைப் பற்றியும் புகார் கூறாதீர்கள். சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். வருடத்தின் பிற்பகுதியில் சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகமொத்தம் இந்த குரோதி ஆண்டு ஒருபக்கம் வசதி, வாய்ப்புகளைத் தருவதுடன், சற்றே சுகவீனங்களையும் தருவாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்புவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் இருக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.

-வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x