Last Updated : 12 Apr, 2024 07:22 PM

 

Published : 12 Apr 2024 07:22 PM
Last Updated : 12 Apr 2024 07:22 PM

மிதுனம் ராசியினருக்கு குரோதி வருடம் எப்படி? - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

மிதுனம்: எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். சூரியன், புதன் மற்றும் சுக்ரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த குரோதி வருடம் பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பிரபலங்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். புதிய வீடு கட்ட முடிவு செய்வீர்கள். கௌரவப் பதவி, புது பொறுப்புகள் தேடி வரும். அர சால் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் ராசியிலேயே இந்த குரோதி வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துச் செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோரின் அறிமுகம் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

கேது 4-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை குறைந்தாலும் ஜெயித்து காட்டுவீர்கள். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீர்கள்.

வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அறிவுப் பூர்வமாக சிந்திப்பதுடன் சந்தை நிலவரத்தையும் அறிந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ -கெமிக்கல், போர்டிங், லாஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள்.

மே மாதம் முதல் குரு சாதகமாக இல்லாததால் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களை கடினமாக உழைக்க வைத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்யும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ,ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

-வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x