Published : 12 Apr 2024 06:28 PM
Last Updated : 12 Apr 2024 06:28 PM
ரிஷபம்: எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த குரோதி ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள்.
30.04.2024 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். ஆன்மிகவாதிகளின் ஆசிப் பெறுவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
01.05.2024 முதல் உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் உடல் நலம் பாதிக்கும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சரியான மருத்துவரை அணுகி உரிய மாத்திரையை உட்கொள்வது நல்லது. கணவன் - மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.
முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.
இந்த வருடம் முழுக்க ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் திடீர் ராஜ யோகம் உண்டாகும். கருநாக பாம்பாகிய ராகு லாப வீட்டில் நிற்பதால் வீடு, சொத்து எல்லாம் அமையும். மூத்த சகோதர வகையில் சில உதவிகள் கிடைக்கும். உங்களிடம் உள்ள திறமைகள் வெளிப்படும். கணவன் - மனைவிக்குள் ஒரு புரிதலுடன் இருப்பீர்கள். சொந்த வீடு நிச்சயமாக அமையும்.
கேது 5-ல் நிற்பதால் பூர்வீகச் சொத்து பிரச்சினைகள் வருமோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம், மே 1-ம் தேதி முதல் குருபகவான் பார்வை கேதுவின் மேல் விழுவதால் அதுமுதல் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். பழைய கலாச்சாரத்தையும் பின்பற்றுவீர்கள். என்றாலும் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்டாமல் அவர்கள் போக்கிலேயே அவர்களை வழி நடத்துங்கள்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப் போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்து ழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண் டாம். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். முடிந்த வரை கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயமுண்டு.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ல் தொடர்வதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். இந்த தமிழ் புத்தாண்டு இடமாற்றத்தையும், வேலைச் சுமையையும் தந்து உங்களை அலைக் கழித்தாலும் உங்களுடன் பழகுபவர்களின் உண்மை சுயரூபத்தை உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் தும்பை பூ மாலை அணிவித்து வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
-வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment