Last Updated : 01 Feb, 2024 04:22 PM

 

Published : 01 Feb 2024 04:22 PM
Last Updated : 01 Feb 2024 04:22 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.1 - 7

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சமஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலா ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பணவரவு அதிகமாகும். அதே நேரத்தில் சுபவிரையச் செலவும் உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு பொருளாதாரம் சிறக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சமஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கியஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப்பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு உச்சமாக மாறுகிறார். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.

வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். கலைத்துறையினருக்கு தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சமஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே! இந்தக் காலகட்டத்தில் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். ராசிக்கு 7ம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு தொழில் சிறக்கும். அரசியல்துறையினருக்கு சுபவிரையம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x