Last Updated : 05 Jul, 2023 04:45 PM

 

Published : 05 Jul 2023 04:45 PM
Last Updated : 05 Jul 2023 04:45 PM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 6 - 12

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுபசெலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் காரிய அனுகூலங்கள் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x