Published : 11 Oct 2019 11:17 AM
Last Updated : 11 Oct 2019 11:17 AM
வி.ராம்ஜி
தான் வாசிக்கும் வாத்தியக் கருவியால், அதனை நுட்பமாக வாசிக்கும் நேர்த்தியால் பிரபலமடைந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், ஓர் இசைக்கருவியை, நம் இந்திய உலகில் அறிமுகப்படுத்தி, அந்த இசைக்கருவிக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுத்த கலைஞர்கள் வெகு குறைவு. அவரால்... அந்த இசைக்கருவி பிரபலமாயிற்று இங்கே. அந்த இசைக்கருவி... சாக்ஸபோன். அதை பிரபலப்படுத்தியவர் கத்ரி கோபால்நாத்.
கர்நாடகாவில் கத்ரி எனும் கிராமத்தில் பிறந்தவர் கோபால்நாத். சிறுவயதில், மைசூர் அரண்மனைக்குச் சென்றிருந்த போது, அங்கே கச்சேரி நடந்துகொண்டிருந்தது. கச்சேரியில், மேடையில் இருந்த பலரில் ஒருவரின் கையில் இருந்த இசைக்கருவி, கோபால்நாத்தை மிகவும் கவர்ந்தது. அந்தக் கருவியின் வடிவம், வாத்தியத்தில் இருந்து வந்த நாதம் எல்லாமே பிடித்துப் போயிற்று அவருக்கு. ‘இந்த வாத்தியத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்’ என விரும்பினார். வாத்தியக்கருவியின் பெயரையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அது... சாக்ஸபோன்.
வயலின் போல், கிடார் போல், மாண்டலின் போல் சாக்ஸபோனும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த இசைக்கருவி. மேற்கத்திய கருவியில் பாண்டித்யம் பெற்ற கத்ரி கோபால்நாத், சென்னைக்கு வந்து, டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இன்னும் இன்னுமாக இசையக் கற்றறிந்தார். மேலைநாட்டுக் கருவிக்குள் நம் கர்நாடக சங்கீதத்தை நுழைத்து, இணைத்து, பிணைத்துக் குழைத்துக் கொடுத்தார். சொக்கிப்போனார்கள் ரசிகர்கள்.
’ஏதோ சாக்ஸபோனாம். வெளிநாட்டுக் கருவியாம் இது’ என்று கத்ரி கோபால்நாத் வாசிப்புக்குக் கட்டுண்டு போனார்கள் ரசிகர்கள். சாக்ஸபோன், கத்ரிகோபால்நாத்தால், புது அடையாளம் போட்டுக் கொண்டு இங்கே, இந்தியாவில் உலவியது இவ்விதமாகத்தான்!
‘இசையில் சம்பிரதாயம், அசம்பிரதாயம் என்பதெல்லாம் கிடையாது. அப்போது வயலின் வந்த போது, பலருக்கும் குழப்பம் இருந்தது. இது வெளிநாட்டு வாத்தியமாச்சே. கர்நாடக சங்கீதமெல்லாம் வாசிக்கமுடியாதே என்றார்கள். ஆனால், தியாகப்பிரம்மத்தின் எல்லா நாதங்களையும் வயலின் மீட்டியதை நாம் அறிவோம்தானே. சாக்ஸபோனும் அப்படித்தான். ஜாதிபேதமெல்லாம் வாத்தியத்திலும் இல்லை; வாத்தியக் கருவியிலும் இல்லை. சொல்லப்போனால் இசைக்கு எல்லையெல்லாம் இல்லவே இல்லை’’ என்று கத்ரி கோபால்நாத் ஒருமுறை, தெரிவித்தார்.
உண்மைதான். வெளிநாட்டில் பிறந்த சாக்ஸபோன், மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பென கத்ரி கோபால்நாத்தின் விரலுக்கும் உதட்டுக்கும் கட்டுண்டது. இதன் விளைவு... வெளிநாடுகளிலெல்லாம் கத்ரி கோபால்நாத்தின் விரல்களில் ஊர்ந்து வழியும் சாக்ஸபோனின் இசையைக் கேட்க, ருசிக்க, ரசிக்க... அங்கே மேலைநாடுகளில் கூட்டம் அலைமோதியது. இதுதான் கத்ரி கோபால்நாத்தின் ஆகப்பெருஞ்சாதனை என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் இசை ரசிகர்கள்.
வெளிநாட்டு சாக்ஸபோன் இசை மேதைகள் பலரும், கத்ரி கோபால்நாத்திடம் விளையாடும் சாக்ஸபோன் கீதம் கேட்டு அதிசயித்துப் போனார்கள். அவரை ஆரத்தழுவிக்கொண்டார்கள். அவருடன் இணைந்து ஆல்பம் வெளியிட்டார்கள். இந்தியாவின் கத்ரி கோபால்நாத், வெளிநாட்டு சாக்ஸபோனை ஏற்றது போல, வெளிநாட்டுக் கலைஞர்கள், கத்ரி கோபால்நாத்தின் இசையின் நுட்பத்தை பிரமிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள்.
வருடம் தவறாமல், தஞ்சாவூர் திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு, வாசிப்பதை தியாகப்பிரம்மத்திற்கும் சங்கீதத் துறைக்கும் செலுத்துகிற நன்றியாகவும் மரியாதையாகவும் கெளரவமாகவும் நினைத்தார். வருடம் தவறாமல் வந்தார். ‘திருவையாறில் நடப்பது போல், சென்னையில் திருவையாறு என்று கொண்டாடுகிறார்கள். இங்கே பெங்களூருவிலும் இந்த விழா நடக்கிறது. எந்த ஊரில் நடந்தாலும், எவ்வளவு பிரமாண்டமாக நடந்தாலும் திருவையாறில் நடைபெறும் விழாவில், ஓர் சாந்நித்தியதை உணருகிறேன். தியாக பிரம்மத்தின் அருள் கிடைத்த உற்சாகம் உள்ளே பூரிப்பாக மலர்ந்து, இசையாக வெளிவருகிறது’’ என்று தெரிவித்தார் கத்ரி கோபால்நாத்.
இயக்குநர் கே.பாலசந்தர், தன் ‘டூயட்’ படம் மூலம் இரண்டுபேரை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். ஒருவர்... நடிகர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர்... சாக்ஸபோன் சிங்கம் கத்ரி கோபால்நாத். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. என்றாலும் படத்தில் பிரபு வாசிக்கும் சாக்ஸபோன் இசையெல்லாம் கத்ரி கோபால்நாத்தின் இசை, பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் ‘அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி’ என்ற பாடலுக்கு அற்புதமான சாக்ஸபோன் இசையைக் கொடுத்தார் கத்ரி.
அந்த அஞ்சலிப் பாடல்... புஷ்பாஞ்சலிப் பாடல்... நம்மை மயக்கிப் போட்ட பாடல்... மறக்கவே மறக்காத அந்தப் பாடல்... கத்ரி கோபால்நாத்தை இன்னும் இன்னுமாக நினைவுபடுத்துகிறது.
1949ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார் கத்ரி கோபால்நாத். இன்று அக்டோபர் 11ம் தேதி ஓர் சுக்கிர வார பிரதோஷ நாளில், உடல்நலக்குறைவால் காலமானார். இசைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் நிச்சயம் பேரிழப்பு. ஈடுசெய்யமுடியாத இழப்பு.
கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோனில், சின்னச்சின்னதான கீசெயின் டாலர் சைஸில், சுவாமி படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். அவர் தலை திருப்பி, கழுத்து அசைத்து வாசிக்க வாசிக்க, அந்த டாலர்கள் டான்ஸாடும். சாயிபாபா உள்ளிட்ட சுவாமி மற்றும் மகான்களின் புகைப்படங்கள் இருக்கிற அந்த சாக்ஸபோன்... ‘என்னை மீட்டும் விரல் இல்லையே’ என்று இப்போது அழுதுகொண்டிருக்கும். கத்ரி கோபால்நாத் எனும் உன்னதக் கலைஞனுக்கு, மெளனமாக இருந்து, அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும்.
அந்த சாக்ஸபோனுக்கு யாராலும் ஆறுதல் சொல்லமுடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT