Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM
பாறைக் குறியீடுகள் முதல் செம்மை ஓவியப் படைப்புகள் வரை மனிதன் என்றும் கலையுடன் பிணைந்தே பரிணமிக்கிறான். இல்லங்களில் அன்றாடம் போடும் கோலங்கள் மற்றும் புழங்கு பொருட்களில் உள்ள வேலைப்பாடுகள் வரை கலையின் கதிர் வீச்சு எங்கும் வியாபித்திருக்கிறது. இவ்வகையில் என்றும் நம்முடன் கைகோர்த்து உலவிவரும் சிறு நுணுக்கங்களான, அச்சு வடிவங்கள் பல நம்முடனேயே இன்றும் புழக்கத்தில் இருந்துவந்தாலும், அவை நம்மீது தனியான தாக்கங்களை ஏற்படுத்தியது இல்லை.
1970-80கள் வரை, திருமண அழைப்பிதழ்களில் நேர்த்தியான பார்டர், இருபுறங்களிலும் கலைமகள் திருமகள் உருவங்கள், பூமாலையுடன் கூடிய தேவதைகள், அழைப்பிதழின் முகப்பில் மணமக்களின் சமூகப்பின்னணிக்கேற்ப கடவுள் உருவங்கள் மற்றும் சின்னங்கள் அமைந்திருக்கும். கோட்-சூட் போட்ட மணமகனும், பன்கொண்டை போட்ட அக்காலத்து நவீன மணப்பெண்ணும் கையில் பூச்செண்டுடன் செல்லும் ஹாஸ்ய சித்திரம் எல்லாத் திருமணப் பத்திரிகைகளின் பின்புறத்திலும் தவறாமல் இடம்பெறுவது எல்லாரது நினைவிலும் இப்போதும் பசுமையாக இருக்கும். திரும்பத் திரும்ப இடம்பெறும் படைப்பாகவே இருப்பினும் அதனுள்ளும் ஒரு படைப்பாற்றல் தேவையாக இருக்கிறது. மேலும் இப்பத்திரிகைகள் சமூக மற்றும் குடும்ப அடையாளங்களைத் தாங்கி உள்ளதால் ஆழந்த கவனம் தேவைப்படும் இவ்வகை வடிவமைப்புகள் பல காலமாக நம் வாழ்வின் அங்கமாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் உள்ளன. இது போன்ற அழைப்பிதழ்களும் கோவில் மற்றும் சமூகத் திருவிழாக்களின் துண்டுப் பிரசுரங்களில் அச்சிடப்படும் உருவங்களும் பூவேலைப்பாடுகளும் ஒரேபோல் இருந்தாலும் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. அச்சுக்கலையின் பெருவாரியான வளர்ச்சியால் பல வகையான மற்றும் பல வண்னங்களாலான புத்தகங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை நாம் காண்கின்றோம். நிஜத்திற்கு நிகரான நிழல் தோற்றங்கள் அச்சில் இன்று சாத்தியமாகின்றது.சில தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்றால் நாம் கல் அச்சுப்பதிப்புகளையும் (Lithography), மர அச்சு (woodcut printing) தொழிநுட்பங்களே இருந்தன. இன்றைய காமிக் புத்தகங்களின் சாத்தியங்களுடன் ஒப்பிடுகையில் கல் அச்சுகளில் ஆரம்ப காலங்களில் தமிழில் வெளிவந்த பெரிய எழுத்துப் புத்தகங்கள் மற்றும் சித்திரக்கதைப் புத்தகங்களை இப்போது பார்க்கும்போது நாம் எவ்வளவு வேகமாக எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்பதைக் காண முடிகிறது.
ஆரம்ப காலம் முதல் அச்சுக்கலை மேற்க்கத்தியச் சார்புடன் இயங்கி வந்ததால் அச்சு ஓவியங்களிலும் நாம் அந்தக் கலப்பை உணர முடிகிறது. கொஞ்ச காலத்திலேயே உள்ளூர்த் தேவைகளுக்கும் உள்ளூர்ப் பண்புகளுக்கும் ஏற்ப இங்கு தகவமைத்துக் கொள்வதும் சாத்தியமானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சிடப்பட்டு வந்த பாகவதம் மற்றும் திருவிளையாடல் புரணம் திருத்தொண்டர் புராணம் போன்ற சித்திரப்புத்தகங் களில் நாம் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலத் தஞ்சை ஓவிய பாணியின் கோட்டுருவங்களை காண முடிகிறது. செவ்வகத்துள் அமைக்கப்பட்ட கதையின் ஒரு காட்சியை ஒரு பக்கம் முழுவதும் அச்சிட்டு எதிர்ப்பக்கதில் கதையின் வரி வடிவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. நாயக்கர் கால உடை அணிகலங்கள் தரித்த கதை பாத்திரங்கள் மற்றும் பின்னணிகளை இவற்றில் காண முடிகிறது. நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் போல இப்படங்களில் உள்ள பாத்திரங்கள், கதையை விவரிக்கும் வகையில் வரிசையாக காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரவிவர்மா, கொண்டய்ய ராஜூ போன்ற ஓவியர்களின் படைப்புகள் இவ்வகை புத்தகங்களின் கதைச்சித்திரங்களுக்குப் புதிய பாணியை அடையாளம் காட்டின. காலண்டர்களில் கண்ட உருவங்களின் கோட்டோவியங்கள், 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அச்சேறின. இரத்தின நாயக்கர் அன் சன்ஸ், ரத்தின முதலியார் அன் சன்ஸ், கலைஞான முத்ரா சாலை போன்ற பதிப்பாளர்களின் வெளியீடுகளான இரணிய நாடகம், விக்கிரமாதித்தன் கதை, மதன காம ராசன் கதை, பஞ்ச பாண்டவர் வனவாசம் போன்ற புத்தகங்களில் வெளியிடப்பட்ட கதைச் சத்திரங்கள் தஞ்சைக் கண்ணாடி ஓவியங்களில் தீட்டப்பட்ட வெல்வெட் சட்டையும் கால் சராயும் குல்லாயும் அணிந்த ஜமீந்தார் போன்ற கதாநாயகர்களையும் இக்காலப் புடவைக்கட்டுக்களையும் கொண்ட ஓவியங்கள் அச்சிடப்பட்டன. காலனிய பாணியை இந்த கதைச்சித்திரங்களில் காணமுடியும்.
இவ்வகையில் கதைப்புத்தகங்கள் மட்டுமின்றி தோத்திரப்பாடல் புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், விளம்பரங்கள் போன்றவற்றிலும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை காலனிய காலத் தாக்கத்தை இலட்சிணைகள் மற்றும் பார்டர்களில் காணமுடியும்.
20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மேல் உள்ள அலங்கார சுதை உருவங்களிலும், பூ வேலைப்பாட்டு விளிம்புகளிலும் இவற்றைப் பார்க்க முடியும். கோவில்களிலும், காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம் பட்டுச்சேலை ஜரிகை வேலைப்பாடுகளிலும் இவை இடம்பெறுகின்றன. ஜவுளித் தொழிலில் இதன் வழியாகவே ஆடைகளில் வுட்டன்ப்ளாக் தொழில்நுட்பம் மூலம் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தும் முறையைக் காண்கிறோம். முத்திரைப் பலகைகள் என்ற பெயரில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் அரசு இலட்சினைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. விளைபொருட்களின் உரிமையாளரை அடையாளம் காண்பதற்கு இந்த முத்திரைப் பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
லித்தோகிராபி தொழில்நுட்பத்துக்குப் பிறகு காரீயம் மற்றும் பிற உலோக அச்சுகள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு இந்த உருவங்கள் நீடித்தன. அதன்பின்னர் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நிகழ்வால் அழைப்பிதழ்கள் மற்றும் பிற பிரசுரங்களில் பல்வேறு உருவங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் முன்பிருந்த வடிவமைப்பில் இருந்த ஒன்றிரண்டு பூவேலைப்பாட்டு அமைப்புகள் இன்றளவும் நீடிக்கவே செய்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT