Published : 03 May 2014 12:00 AM
Last Updated : 03 May 2014 12:00 AM
ஓவியர் என்றால் எளிய மக்களிடமும் அறிமுகம் கொண்டவர் ராஜா ரவிவர்மா மட்டுமே. தனது ஓவியங்கள் அரசர்கள் மற்றும் செல்வந்தர்களின் மாளிகைகளை அலங்கரித்த போதும், அவற்றின் அச்சுப்பிரதிகள் சாமானியர்களின் வீட்டுச்சுவர்கள், பூஜை அறைகளையும் அலங்கரிக்க வகைசெய்தவர். இவரது அம்மா உமையாம்பாள் தம்புராட்டி எழுதிய ‘பார்வதி சுயம்வரம்’ படைப்பு குறிப்பிடத்தக்கது. தனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு ரவி வர்மாவால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. சிறுவயதிலேயே புராணங்களின் மீது நாட்டம் ஏற்பட அவரது அம்மாவின் வளர்ப்பு காரணமாக இருந்துள்ளது.
இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். இந்திய ஓவியங்கள் ரவி வர்மாவுக்கு முன், ரவி வர்மாவுக்குப் பின் என்று வகைப்படுத்தக் காரணமான யுகபுருஷர் ஆவார். இளம் வயதிலேயே ஓவிய ஆர்வம் மிகுந்த இவர் தனது ஓவியப்பயிற்சியை தஞ்சை பாணி ஓவியத்தில் துவக்கி, பின் மேற்கத்திய தைல ஓவிய மரபினை தியோடர் ஜென்சனிடம் பயின்றார். தைல ஓவிய நுட்பங்களும் முறைகளும் மேலைநாட்டவருடையது எனினும் இவர்தம் படைப்புகள் நமது இந்திய கலாச்சாரப் பண்புகளைச் சார்ந்துள்ளதைக் காணமுடியும். மரபுவழி அறிவும், கலைப்பண்பும் இவரது ஓவியங்களில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புதிய ஓவிய மரபு துவங்க அடிகோலியது. நீர்ம வண்ணங்களாகவும் கோட்டோவியங்களாகவும் பல நூற்றாண்டுகளாக நாம் கண்டுவந்த கடவுள்களையும் புராணக்காட்சிகளையும் நம்மைப் போல் நகமும் சதையும் உள்ள இயல் உருவங்களாக காணச்செய்த பெருமை இவரையே சாரும்.
1873 இல் வியன்னாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியங்கள் பங்குபெற்றன. மேலும் 1893-ல் சிகாகோவில் நடந்த வேர்ல்ட் கொலம்பியன் எக்ஸ்போசிசன்-ல் மூன்று தங்கப்பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றது இவர் உலகப்புகழ் அடைவதற்கு காரணமாக இருந்தன.
ரவிவர்மாவின் ஓவியங்களை மூன்றுவகையாக வகைப்படுத்தலாம். உருவச்சித்திரம், உருவச்சித்திரம் சார்ந்த படைப்புகள், புராண மற்றும் சரித்திரக்கதைகள் சார்ந்த காட்சிப்படைப்புகள். இந்தியப் புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவர் கொண்ட நாட்டமும் மேலும் அவற்றைக் காட்சிப்படுத்த அவர் கையாண்டிருக்கும் பாங்கும் தனித்துவமானது. மேற்கத்திய மரபுடன் பின்னிப்பிணைத்த தன்மையும் மற்றும் மரபுகளை உடைத்து புதுமைபுகுத்திய புரட்சியும் வியக்கும் வகையில் இவர் படைத்த ஓவியங்கள், கிழக்கும் மேற்கும் சந்திக்கும் களமாக இருப்பதை அறியலாம்.
ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்திய மண்ணில் தனித்துவமான சுவடை ஏற்படுத்தின. அவர் காலத்தில் இருந்த அரசர்கள் மற்றும் அரசியர்களை தீட்டிய உருவச்சித்திரங்கள் இன்றளவும் உயிர்ப்புள்ளவை. ஒரு நூற்றாண்டைத் தாண்டியும் அவரது ஓவியங்கள் புதுப்பொலிவுடன் உள்ளன. அவர் ஓவியப்பொருட்களைப் புரிந்துகொண்டு கையாண்ட விதத்தையும் நாம் இதன்மூலம் அறிந்துகொள்கிறோம். இவருடைய ஓவியங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும், மைசூர் ஜெகன்மோகன் அரண்மனையிலும், பரோடா லக்ஷ்மி விலாஸ் அரண்மனையிலும் மிகுதியாக உள்ளன. தனிநபர் சேகரிப்புகளிலும் இன்றும் காணக்கிடைக்கின்றன.
இலக்கியம், புராணங்களிலிருந்து இவர் ஓவியங்களில் காட்சிப்படுத்திய நிகழ்ச்சிகள், பின்னர் புராண, இதிகாசத் திரைப்படங்களுக்கும் காலண்டர் ஓவியங்களுக்கும் ஆதாரங்களாக விளங்கின. இன்றளவும் புராணக் காட்சிகளை இவரது ஓவியங்கள் வழியாகவே நாம் சிந்திக்கும் நிலையில் உள்ளோம்.
பெண்மையைக் கொண்டாடும் பாங்கிலும் ரவி வர்மா இணையில்லாதவர். பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களை உடைய ராணி லக்ஷ்மிபாயின் ஓவியம் ஆகட்டும், அனைவரும் வியக்கும் அன்னமும் தமயந்தியும், பதற்றம் மிக்க சைரந்திரியான திரௌபதி, மையலும் நாணமும் சேர்ந்த மத்ச்ஸ்கந்தா, தனது மகனை ருக்மாங்கதனிடம் கொல்லச் சொல்லும் மோகினி, கவலையும் அழுகையுமாய் கணவனால் விற்கப்பட்ட சந்திரமதி, வெகுளியான பால்காரப் பெண்ணின் நீர்ம ஓவியம், கம்பீரமான முகத்துடன் கள் விற்கும் மலையாளப் பெண் போன்ற பல்வேறு வாழ்க்கைப் பின்னணியிலுள்ள பாரதப்பெண்களின் முகங்களை இயல் ஓவியமாக தீட்டிய பெருமை இவரையே சாரும்.
இசையும் லயமுமாய் தேசிய ஒருமைப்பாட்டை தனது கேலக்சி ஆப் மியூசியன்ஸ் படத்தில் சித்தரித்துள்ளார். தத்தமது பிராந்திய உடைகளுடன் பல இசைக்கருவிகளை மீட்டும் கேரள, தமிழக, மராட்டி மற்றும் வடக்கிந்தியப் பெண்களை ஒருசேரக் காணும் வாய்ப்பு எவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
இவரது ஓவியங்கள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பினும், மிக முக்கியமான முன்னோடியாகவும், பிதாமகராகவும் ராஜா ரவி வர்மா இருக்கிறார்.
மங்கலப் பொருட்களாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் விளங்கும் இவரது தெய்வ உருவப்படங்கள் அனைவரது இல்லங்களிலும் முதன்மை பெற்றபின் மரபு வழி ஓவியக்கடவுள் உருவங்கள் காணாமல் போனதில் வியப்பில்லை. பலரது இல்லங்களிலும் இன்றளவும் சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கி வழிபட நமக்கு கலைமகள் படம் அளித்த தலைமகன் போற்றுதலுக்குரியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT