Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM
தன் பாணியை விட்டுக் கொடுக்காமல், பக்தியுடன் பாடுபவர் ரமா ரவி. அளவாய், கச்சிதமாய் ராக ஆலாபனை; அதில் ராக ரூபமும் தேவையான சஞ்சாரங்களும் நிரம்பியிருந்தன. ஒதுக்கிப் பாடி, அதில் அழகு சேர்க்கும் ரமாவின் இசையில் நைச்சியமும், பாவமும் கைகோர்த்து சஞ்சரித்தன.
ஆதி தாளத்தில் தர்பார் வர்ணத்துடன் கச்சேரி தொடங்கியது. கர்நாடகப் பெஹா ராகத்தில் தியாகய்யரின் ‘நே நெந்து வேதக் குதுரா’ கீர்த்தனையில் பன்னீர் தெளித்தாற்போல் சங்கதிகளைப் பாடினார். அவர் பாடிய கல்பனா ஸ்வரங்கள் லகுவாய் வந்து விழுந்தன. முத்துஸ்வாமி தீட்சிதரின் ஸ்ரீ ரங்க நாதாய என்ற தன்யாசி ராகக் கிருதியை விச்ராந்தியுடன் பாடினார்.
அடுத்து வந்த நாட்டகுறிஞ்சி ராகம், அளவாயும் தெளிவாயும் இருந்தது. சியாமா சாஸ்திரியின் அதிகம் கேட்கப்படாத ‘மாயம்மா’ கீர்த்தனையைப் பாவப்பூர்வமாய்ப் பாடினார். சிட்டை ஸ்வரச் சாஹித்யத்தை திஸ்ர நடையில் லயப்பிடிப்புடன் பாடினார். தியாகய்யரின் ‘இந்தக் கன்னானந்த மேமி’ கீர்த்தனை கச்சேரியின் துடிப்பைக் கூட்டியது. ‘நீ ஜப முனு வேள’ என்ற வரியில் நிரவல் பாடி, கல்பனா ஸ்வரங்களை விறுவிறுப்பாய்த் தொடுத்தார்.
வராளி ராகத்தை அந்த ராகத்திற்குத் தேவையான நிதானத்துடன் பாடி, பாபநாசம் சிவனின் ‘கா வா வா’ தமிழ்க் கீர்த்தனையை அழுத்தமாய்ப் பாடினார்.
திஸ்ர நடையில், வசந்தா ராகத்தில் ‘ராம ராம என்னிரோ’வைத் தொடர்ந்து, சங்கராபரண ராகத்தை அநாவசிய வேலைப்பாடுகள் இன்றி ரசமாய்ப் பிழிந்து பாவத்துடன் கொடுத்தார் .
மிஸ்ர சாபு தாளத்தில் தீட்சிதரின் ‘அட்சய லிங்க விபோ’, நிரவல், கல்பனா ஸ்வரங்களைத் தொடர்ந்தது தனி ஆவர்த்தனம். திருவனந்தபுரம் வைத்யநாதன் மிருதங்கத்திலும், பெங்களூர் ராஜசேகர் மோர்சிங்கிலும் முதிர்ச்சியான தனி ஆவர்த்தனத்தை வாசித்தார்கள். மோர்சிங்கில் பலவிதமான ஒலிகளை எழுப்பினார் ராஜசேகர்.
‘ஏராதகு’ என்ற ஜாவளியைத் தொடர்ந்து ராம ராம ப்ராண சகி என்ற பைரவி ராகப் பதத்தை, பதத்திற்கே உரிய நிதானத்துடன் பாடினார். அது விதூஷி ரமா ரவியின் தனிச் சிறப்பு.
யமுனா கல்யாணியில் புரந்தரதாசரின் ‘ஹரிஸ்மரணெ மாடோ’ பாட்டை தொடர்ந்து கண்ட ஏக தாளத்தில் இரண்டு காலத்தில் ஹிந்தோள ராகத் தில்லானாவுடன் கச்சேரி நிறைவடைந்தது.
வழுவாத சம்பிரதாயச் சங்கீதத்தை அனுபவித்த திருப்தி கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT