Published : 05 Oct 2013 03:09 PM
Last Updated : 05 Oct 2013 03:09 PM
இன்று மேடைகளில் அரங்கேறும் எல்லா செவ்வியல் இசை வடிவங்களின் தொடக்கமும் கோயில்களே. நிலவுடைமை உடைந்து, கோயில்களின் முக்கியத்துவம் சமூகத்தில் குறைந்தபோது பல இசை வடிவங்களும் கோயில்களை விட்டு வெளியேறின. சென்னை நகரில் தோன்றிய இசையரங்குகள் இக்கலைகளின் பாதுகாவலனாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இசைக் கலைஞர்களும் நகரங்களில் குடியேறினர்.
ஆனால் நாகசுரம்-தவில் ஆகிய இரண்டு வாத்தியங்களும் தொடர்ந்து கோயில்களிலேயே ஒலித்தன. பரம்பரையாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை வைத்துக்கொண்டு அக்கலைஞர்கள் தத்தம் ஊரிலேயே தங்கிவிட்டனர். அதிகபட்சமாக ஊருக்கு அருகில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எனப் பல கலைஞர்கள் தங்கள் ஊரிலேயே இருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்துடன் பிணக்கு வரும்வரை இராஜரத்தினம் பிள்ளையும் திருவாவடுதுறையில்தான் தங்கியிருந்தார். தவில் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர்தான் ஆச்சாள்புரம் ச. சின்னத்தம்பியா பிள்ளை. தில்லை நடராஜர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாகசுர இசை மரபை முழுவதும் அறிந்தவர் இவர் ஒருவரே. பல்லவி வாசிப்பதில் ஈடு இணையற்றவரான இராதாகிருஷ்ண பிள்ளையின் மாணாக்கரான சின்னத்தம்பியா பிள்ளை, அவருடன் சேர்ந்து வாசித்து சிதம்பரம் கோயிலில் இசைப் பணி ஆற்றிவந்தார். இன்று 88 வயது நிறைவடைந்திருக்கும் அவரைக் கொண்டு, சிதம்பரம் கோயிலில் வாசிக்கப்படும் நாகசுர இசை மரபைப் படமாக்கியிருக்கிறார் இசையறிஞர் பி.எம். சுந்தரம். நாதமும் நாதனும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் நாகசுரம் - தவில் குறித்த முழுமையான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் சிதம்பரம் ஆலயத்தில் வாசிக்கப்படும் பல்வேறு மல்லாரிகளையும் இராகங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறது. 88 வயதிலும் சற்றும் பிசிறடிக்காமல் மல்லாரிகளையும் இராகங்களையும் வாசித்து பிரமிக்க வைக்கிறார் சின்னத்தம்பியா பிள்ளை.
"வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். பெரும்பாலான கோயில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இசைமரபுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. விதிவிலக்காக சிதம்பரம் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் மட்டுமே இந்த மரபுகள் தொடர்ந்து பேணப்படுகின்றன,” என்றார் சுந்தரம்.
பண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். இன்று வழக்கொழிந்துபோன இம்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
"தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. தவிலின் முக்கியத்துவத்தை இந்த வழக்கம் தெளிவாக்குகிறது,” என்று விளக்கினார் சுந்தரம்.
பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒலிக்கிறது. தேரோட்டம் அன்று தேர் மல்லாரி.
மல்லாரிகளின் பல வகைகள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுகளே. நாகசுர வித்வானின் கற்பனைக்கு தகுந்தாற்போல் அதன் மெருகு ஏறும். வீரச்சுவை நிரம்பிய கம்பீர நாட்டை இராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபு. "குந்த குந்த” என்று தவில் முழங்க மல்லாரி ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கியது தெரிந்துவிடும்.
"சிதம்பரம் ஆலயத்தில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பட்டதும் மல்லாரி வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இராகம் விரிவாக வாசிக்கப்படு இராகம்-தானம்-பல்லவி தொடரும்,” என்று சுந்தரம் கூறினார்.
முதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் சண்முகப்பிரியா, எழாம் நாள் காம்போதி.
எட்டாம் நாள் வாசிக்கப்படும் ஒடக்கூறு சிறப்பு வாய்ந்தது. உடற்கூறு என்பது சிதைந்து ஒடக்கூறு என்றாகிவிட்டது. தன் மேல் மோகம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற உடம்பின் இரகசியத்தை சிவபெருமான் விவரித்ததை இந்த உடற்கூறு வெளிப்படுத்தும். பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே ஒடக்கூறு வாசிப்பார்கள்.
ஒன்பதாம் நாளன்று தேர் மல்லாரி. பத்தாம் நாளில் தில்லைக்கூத்தன் மேல் முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி இராகம் மட்டுமே.
"ஒவ்வொரு நாளும் சுவாமி வலம் வந்து முடித்ததும் கோயில் பிரகாரத்தில் வைத்து தேவதாசிகள் தட்டு சுற்றி, திருஷ்டி கழிப்பார்கள். அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்ததும், தவில்காரர்கள் மூன்று சுற்றுகள் வாத்தியத்தைத் தட்டிக் கொண்டே சுற்றுவார்கள். இன்று அந்த முறையும் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை,” என்றார் சுந்தரம்.
மாபெரும் இசைமரபுகள் இடம் தெரியாமல் போய்க்கொண்டிக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்க்கும் இசை ஆர்வலர் உணர்வார். திருவாருர் கோயிலில் பாரி நாகசுரம் வாசிக்கும் செல்வகணபதியும் இன்று எண்பதுகளைத் தாண்டிவிட்டார். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்கருவியால் இயங்கும் வாத்தியங்கள் முழங்குகின்றன. கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம் பல கோயில் விழாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. செண்டை மேளத்துக்கான நடை எதையும் அறியாதவர்கள் நையாண்டி மேளம் போல் வாசிக்கிறார்கள். பொருத்தமாக சிங்காரி மேளம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT