Last Updated : 15 Feb, 2014 12:00 AM

 

Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

காய்ந்த மண்ணில் கசிந்த இசை ஊற்று ராமநாதபுரம் முருகபூபதி- சென்னையில் நாளை நூற்றாண்டு விழா ஏற்பாடு

காவிரியும் தாமிரபரணியும் பாய்ந்து வளம் சேர்க்கும் தஞ்சை மாவட்டத் துக்கும் நெல்லை மாவட்டத்துக்கும் சற்றும் குறைவில்லாமல் இசைத் துறைக்கு தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறது, தமிழகத்தின் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம்.

பூச்சி சீனிவாசய்யங்கார், அவ ருடைய மாணவரும் கர்நாடக கச்சேரி பாணியை வடிவமைத்தவருமான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் இவர்களோடு சங்கரசிவ பாகவதர் அவருடைய சகோதரர் சி.எஸ். முருகபூபதி என தனித்துவம் வாய்ந்த இசைக்கலைஞர்களை ஈன்ற மாவட்டம் ராமநாதபுரம்.

பாலக்காட்டு மணி ஐயரும் பழனி சுப்பிரமணிய பிள்ளையும் மிருதங்க உலகில் மாமேதைகளாக வலம் வந்த காலத்தில் அவர்களுக்கு இணையாகக் கோலோச்சியவர் முருகபூபதி. பிப்ரவரி 14 அவருடைய நூற்றாண்டு விழா.

தமிழகத்தில் மதுரை சோமு, லால்குடி ஜெயராமன், முருகபூபதி, டி.எச். விநாயகராம், மாயவரம் சோமு என்று மேடை நிறைந்திருந்த கச்சேரி களைக் கேட்டவர்கள் இருக்கிறார் கள். ஆனால் அதற்கு முன்ன தாகவே சோமுவின் குருநாதர் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஜி.என். பாலசுப்பிரமணியம், செம்மங்குடி சீனிவாசய்யர், மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள் என்று பெரும் மேதைகளுக்கு மிருதங்கம் வாசித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் முருகபூபதி.

முருகபூபதியினுடையது இசைக் குடும்பம். அவருடைய தந்தை ராமநாதபுரம் சிற்சபை சேர்வை, புதுக் கோட்டை மாமுண்டியா பிள்ளையின் மாணவர். முருகபூபதியின் சகோதரர் சங்கரசிவ பாகவதர் வாய்ப்பாட்டில் கெட்டிக்காரர். வாய்ப்பாட்டுக் கலைஞ ரான மதுரை டி.என். சேஷகோபாலனும் சங்கரசிவத்தின் மாணவரே. முருகபூபதியும் தன்னுடைய அண்ண னிடமே கற்றுக் கொண்டார்.

“அவரது வாசிப்பு அலாதியானது. “குடும்… குடும்…” என்று ஒரே தாளக் கதியில் புறா எழுப்பும் சப்தத்தைப் போல் அவருடைய மிருதங்கத்தின் தொப்பி ஒலிக்கும்” என்கிறார் கடம் வித்வான் டி.எச். விநாயகராம்.

முருகபூபதியும் விநாயகராமும் ஒன்றாக சித்தூர் சுப்பிரமணிய பிள்ளைக்கு வாசித்தவர்கள். பின்னர் மதுரை சோமுவிடம் விநாயகராமைச் சேர்த்துவிட்டார் முருகபூபதி.

“அவர் வாசித்தால் பாட்டு மெரு கேறும். “கந்தன் கருணைபுரியும் வடிவேல்” கீர்த்தனையை மதுரை மணி ஐயர் பாடுகையில் முருகபூபதி வாசித்துக் கேட்க வேண்டும்” என்று விளக்கி விட்டு, அப்படியே பாடியும் அதற்கு வாசிக்கப்படும் மிருதங்க சொற்களைச் சொல்லியும் பரவசப்பட்டார் சேஷகோபாலன்.

“அவரது மிருதங்கத்தின் தொப்பி ஐஸ் கிரீம் போல் குளுமையானது. மதுரை சோமுவின் “நினைக்காத நேரமில்லை” பாட்டுக்கு அவர் வாசிப்பதைக் கேட்டால், நான் சொல்வது விளங்கும்.

மதுரை சோமு “எந்த வேடுகோ” பாடுகையில் அவர் வாசித்ததைக் கேட்ட தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, பாட்டு முடிந்ததும் மேடைக்குப் போய் முருகபூபதியை அப்படியே கட்டிக் கொண்டார்” என்று முருகபூபதியின் நினைவில் நெகிழ்ந்தார் சேஷகோபாலன்.

“இருப்பினும் பாலக்காட்டு மணி ஐயருக்கோ, பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கோ கிடைத்த பெயரும் புகழும் முருகபூபதிக்கு கிட்டவில்லை” என்று கூறினார், ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மாணவருமான காளிதாஸ்.

கஞ்சிரா வாசிப்பதிலும் முருகபூபதி கெட்டிக்காரர். இளம் வயதிலேயே காலமாகிவிட்ட கஞ்சிரா மேதை ஹரி சங்கர், முருகபூபதியின் மாணவரே. பிப்ரவரி 16-ஆம் தேதி முருகபூபதி யின் நூற்றாண்டு விழாவை பரிவாதினி என்ற அமைப்பு சென்னையில் உள்ள ராகசுதா ஹாலில் ஏற்பாடு செய் துள்ளது.

அந்நாளில் முருகபூபதியின் நினைவைப் போற்றும் வகையில் சேஷகோபாலனின் உரையும் தொடர்ந்து கச்சேரியும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x