Published : 15 Dec 2013 12:49 PM
Last Updated : 15 Dec 2013 12:49 PM
சென்னை இசைவிழாவின் முக்கியமான மையங்களில் ஒன்றாக விளங்கிவரும் சங்கீத வித்வத் சபையின் (மியூசிக் அகாடமி) தலைவரும் கஸ்தூரி சன்ஸ் லிமிடட் நிறுவனத்தின் கோ-சேர்மனுமான என். முரளி, இசையுடனும் இசை சார்ந்த இயக்கங்களுடனும் நெருங்கிய பிணைப்புக் கொண்டவர். சென்னையின் இசை விழாவை ஒட்டிச் சென்னை இசைச் சூழல் பற்றியும் அகாடமியின் செயல்பாடுகள் பற்றியும் அவருடன் விரிவாக உரையாடியதிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.
மியூசிக் அகாடமிக்கும் இசைக்குமான உறவு மிகவும் ஆழமானது. அந்த உறவைப் பற்றிச் சொல்லுங்களேன்.
85 ஆண்டுகளாக மியூசிக் அகாடமி இசை விழாவைக் கொண்டாடி வருகிறது. சென்னையின் முன்னோடி சபாக்களில் இதுவும் ஒன்று. மார்கழி மாதத்தில் குளிரும் இருக்கும். வெயிலும் இதமாக இருக்கும் என்பதால் இந்த சீசனைத் தேர்ந்தெடுத்து இசை விழா நடத்தத் தொடங்கினார்கள். அதுதான் இப்போது மார்கழி சீசனாக அறியப்படுகிறது.
இசை விழாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்?
இசை விழா ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தொடங்கிய சமயத்தில் நான்கைந்து சபாக்கள்தான் இருந்தன. இப்போது நிறைய சபாக்கள் இருக்கின்றன. பெரிய சபாக்கள், சீசனுக்கு கச்சேரிகள் நடத்தும் சபாக்கள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் சேர்த்தால் இந்த சீசனில் 2 ஆயிரம் கச்சேரிகள் நடக்கின்றன. முன்பு டிசம்பர் இரண்டாவது வார இறுதியில் தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் கச்சேரிகள் நிறைவுபெறும். இப்போது நாட்கள் அதிகரித்துள்ளன. சில சபாக்கள் கார்த்திகையிலேயே தொடங்கிவிடுகின்றன.
இசை விழாவில் மியூசிக் அகாடமியின் தனித்தன்மை என்ன?
இதை சபா என்று மட்டும் சொல்லி விட முடியாது. அகாடமி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு கல்வி சார்ந்த விஷயங்களும் நடக்கின்றன. காலை, மாலையில் வகுப்புகள் நடக்கின்றன. விழா சமயத்தில் கருத்தரங்குகள் நடக்கின்றன. உரைகள், கலந்துரை யாடல்கள் ஆகியவை நடக்கின்றன. மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள்.
கலைஞர்களை எப்படித் தேர்ந்தெடுக் கிறீர்கள்?
முடிந்தவரை எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறோம். புகழ் வாய்ந்த வர்களுக்கு மட்டுமின்றி, புகழ் குறைந்த வர்களுக்கும் வாய்ப்புகள் தருகிறோம். மிகப் பெரிய கலைஞர்கள், சங்கீத கலாநிதிகள், ஜூனியர், சப்-சீனியர் என எல்லோரும் பாடுகிறார்கள்.
இளம் கலைஞர்களை எப்படி அடை யாளம் காண்கிறீர்கள்?
தொடர்ந்து கவனித்துவருகிறோம். அகாடமியின் சப் ஜூனியர் பிரிவில் சேரப் பலர் விண்ணப்பிக்கிறார்கள். சப் ஜூனியர் பிரிவில் இடம் பெற்ற வர்களுக்கு விழாவின்போது மதியம் நடைபெறும் இலவசக் கச்சேரிக்கு வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.
‘ஸ்பிரிட் ஆப் யூத்’ என்னும் விழாவை நடத்திவருகிறோம். எச்.சி.எல்.நிறுவனம் மூலம் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலமாகவும் இளம் கலைஞர்களை அடையாளம் காண்கிறோம். சிறப்பாகச் செயல்படு பவர்களுக்கு ஜூனியர் பிரிவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்த விதமான பரிந்துரையும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கும் தேர்வுகள் மூலமே வாய்ப்புகள் கொடுக்கப்படு கின்றன.
இசை அரங்கில் பல புதிய முயற்சிகள் நடக்கின்றன. பூங்காக்களில் எல்லாம் கச்சேரிகள் நடத்துகிறார்கள் இவற்றை யெல்லாம் கவனித்துவருகிறீர்களா?
ஆமாம். பல வழிகளிலிருந்தும் தகவல்கள் திரட்டி டேட்டாபேஸ் உரு வாக்குகிறோம். அதனால்தான் யார் எங்களிடம் வந்தாலும் அவர்களைப் பற்றிய தகவல்கள் கேட்கிறோம். சி.டி. அனுப்பச் சொல்றோம். இவற்றை யெல்லாம் பரிசீலித்துத்தான் தேர்வு செய்கிறோம்.
கச்சேரிகளுக்குப் பொதுமக்களிடம் உள்ள வரவேற்பு எப்படி இருக்கிறது?
மிகவும் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அகாடமியில் மொத்தம் 1500 பேர் உறுப்பினர்கள். ஆனால் 950 சீட்டுகள் மட்டுமே உள்ளன. இசை விழாவின்போது கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. காலையில் 5:30 மணிக்குதான் டிக்கெட் கொடுப்பார்கள். அதை வாங்க இரவு 12 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நிற்கிறார்கள். அதனால் வருவோருக்கு டோக்கன் கொடுத்து டிக்கெட் கொடுக்கிறோம்.
நடனக் கச்சேரிகளுக்கு வரவேற்பு இருக்கிறதா?
ஜனவரி 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு வேறு விதமான ஆடியன்ஸ் வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்துகூட வருகிறார்கள். இதில் பரத நாட்டியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒடிசி, குச்சிப்பிடி, கதகளி, கதக் போன்ற நடனங்களும் அரங்கேற்றப்படுகின்றன. இப்போது இதுவும் புகழ்பெற்று வருகிறது.
அகாடமியில் பாடினால்தான் மரியாதை என்ற நிலை இருக்கிறதே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கலைஞர்களுக்கு மரியாதை கிடைக்கிறது என்றால், அதற்கு அவர்கள்தான் காரணம். கலைஞர் களுக்காகத்தான் மக்கள் வருகிறார்கள். நிகழ்ச்சியை நடத்துபவர்களின் பங்களிப்பு ஒன்றுமில்லை. நாங்கள் கலைஞர்களை மதிக்கிறோம். அவர்களை நல்ல முறையில் நடத்து கிறோம். எங்கள் தேர்வு முறையில் சமரசம் செய்துகொள்வதில்லை. அவ்வளவுதான்.
அகாடமி மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 90களுக்கு முன்பு வரை இந்தப் போக்கு அதிகம் இருந்த தாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்தை மறுக்கிறேன். இதற்கு முன்போ, இப்போதோ இதுபோன்று நடப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. நன்றாகப் பாடுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கள் வழங்கப்படுகின்றன. எந்தக் கலைஞரையும் அவர் ஜாதியை வைத்து தேர்ந்தெடுக்கவோ நிரா கரிக்கவோ செய்வதில்லை.
இசை நிகழ்ச்சிகள் தவிர வேறு என்ன செய்கிறீர்கள்?
இசை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டி ருக்கிறோம். சுமார் 20 ஆயிரம் மணி நேரத்திற்குப் பதிவு செய்யத் திட்ட மிட்டிருக்கிறோம். தற்போது 7,500 மணி நேரத்திற்குப் பதிவு செய்துள்ளோம். இவற்றை அகாடமியில் வந்து கேட்க லாம். இவற்றை விற்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை. காப்பிரைட் பிரச்சினை உள்ளிட வற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பத் திட்டமிட்டுவருகிறோம்.
இசைக்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
நிறையப் பள்ளிகளில் பாடத்திட்ட மாக இல்லாவிட்டாலும் சிறப்பு வகுப்புகளாக இசை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளில் இதுபோன்ற முயற்சிகளைத் தொடங்கியிருப்பதால், எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்று சொல்லலாம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தருகிறார்கள். மியூசிக் அகாடமி புனரமைப்புப் பணிகளுக்கு ஆறரைக் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கியக் காரணம்.
அகாடமியின் எதிர்காலத் திட்டங்கள்?
சென்னையைத் தவிர வெளி மாவட்டங்களிலும் இசை விழா நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். செய்யலாம். ஆனால், அதற்கு நிறைய ஆட்கள் தேவை. பெரிய திறமையாளர்கள் தேவை. அப்படிப்பட்டவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இளைஞர்கள் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
2005ஆம் ஆண்டில் இருந்து தலை வராக இருக்கிறீர்கள். இந்தக் கால கட்டத்தில் மறக்க முடியாக சம்பவம் ஏதாவது?
அகாடமி பல சவால்களைச் சந்தித்துள்ளது. இதன் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றத்தின் படிக்கட்டு களை மிதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்றம் தேர்தல் நடத்த உத்தரவு போட்டது. 2005ஆம் ஆண்டில் தேர்தல் நடந்தபோது கடும் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உறுப்பினர்கள் வந்து ஓட்டுப் போட்டார்கள். இது இந்த அமைப்புடன் அவர்களுக்கு இருக்கும் அன்யோன்யமான உறவைக் காட்டியது. அந்த நாளை இப்போதும் மறக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT